Skip to main content

Posts

Showing posts from January, 2011

பால்ய பருவமென்பது..

உங்கள் பால்யத்தைக் கேட்டால், நீங்கள் கூடைச்சேருள் அமர்ந்து சிரிக்கும் ஒரு குழந்தையையோ விறைத்த ட்ரவுசரும்,விறைத்த முகமுமாய் சீருடையில் நிற்கும் ஒரு பள்ளிச்சிறுவனையோ காட்டுகிறீர்கள். ஒருவன் தன் கல்லூரி ஆல்பத்தைக் காட்டுகிறான். அதில் அவன் பல் முப்பத்திரண்டும் தெரிகிறது. நான் நேற்று காலை எடுத்த என் புகைப்படத்தைக் காட்டுவேன். பால்யத்தின் வாகனத்திலேறி பால்யத்தின் கனவுகளோடு தொலைதூர மலைவெளிக்கு போகிறது ஒரு காதல். அது கட்டிக்கொள்ள எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை சமைத்து வைத்தீரே, வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும் பால்யத்தின் காற்றை அது வீடு திரும்பும் வரையிலேனும் பிடுங்கி விடாதிருப்பீரா ஆண்டவரே.. நம் இனிப்பினிப்பான கற்பனைகள் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் கூடைச்சேர்கள் காலொடிந்து சரிகின்றன. நம் குழந்தைமையின் அமர்ந்தகோலம் நடுநடுங்கியாடி தொப்பென்று கீழே விழுகிறது

சமயவேல் கவிதை

அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன்