Wednesday 23 March 2011

என் முதல் சிறுகதை

இளமஞ்சள் நதி


தன் பத்தொன்பதாவது வயதில் அப்பாவிடம் இருந்து முதல் அரையை வாங்கிக்கொண்டு கொஞ்சமும் பதற்றமற்று நின்று கொண்டிருந்தான் பிரபு. அப்பாவிடம்அவனுக்கு எப்போதும் பயமிருந்ததில்லை. தோளிற்கு மேல் வளர்ந்த பிறகல்லகாலிற்கு கீழ் நிற்கும் போதே தோழனாகி விட்டவன் அவன். தன் முடிவில்உறுதியாகவே இருப்பதாகவும், குடும்ப மானம் போய் விடுமென்றால் குடும்பத்திலிருந்து போய் விடுவதாகவும் சொன்னான். கூப்பாடு போட வாய்திறந்த சரஸ்வதியை “ஊரக் கூட்டதடி கழுத முண்ட” என்று காலைத் தூக்கிக்கொண்டு உதைக்கப் போனார் கணேசன். அவள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். பிரபு பீரோவைத் திறந்து தன் ஆடைகளை எடுக்கத் துவங்கினான்.






“தூக்கத்திலிருந்த மனைவி கழுத்தை நெறித்துக் கொலை; கணவருக்கு போலீஸ் வலை வீச்சு” ... உறக்கம் வராது உலாத்தும் எல்லா ராத்திரிகளிலும் கணேசனுக்கு இந்த செய்தி நினைவில்வரும். போலீஸ் மட்டும் வலைவீசாமல் இருக்குமானால் ஒருவேளை இந்நேரம் அது நடந்து முடிந்திருக்கலாம்.அந்தராத்திரிகளில் அவர் சிகரெட்டுகளை கொன்றுபோட்டு மிதித்தார்.கணேசனுக்கும் சரஸ்வதிக்கும் திருமணத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர்பிடிக்கவில்லை. அதற்காக திருமணம் செய்யாமல் இருக்க முடியாது. பெரியோர்கள் நிச்சயித்து விட்டார்கள் .நிச்சயித்து விட்டு வேறு திருமணத்தை நிச்சயிக்க போய் விட்டார்கள் மாசாணியம்மன் கோயிலின் அரச மரத்தடியில் நின்று கொண்டிருந்த சிவந்துவளர்ந்த பையனோடு அரைமணி நேரத்திற்குமதிகமாய் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் என்கிற செய்தி சரஸ்வதியின் வீட்டை எட்டிய அடுத்தஇரண்டு நாட்களில் அவள் யாரோடு சிரித்துப் பேசவேண்டும் என்று அவள் அப்பா முடிவுசெய்து விட்டார்.

பிடித்ததோ இல்லையோ வாரத்தின் இரண்டு ராத்திரிகளில் இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டனர். அதன் காரணமாக பிரபு பிறந்தான். அவனைக் காலையில் அம்மாவும் மாலையில் அப்பாவும் வளர்த்தனர். அவர் தன் மனைவியை காதலிக்க எவ்வளவோ முயன்று பார்த்தார். உடனுறை தேவியை காதலித்தாகவேண்டியதன் அவசியத்தை தன் மனதிற்கு சொல்லிக் கொடுத்துப்பார்த்தார். குறைந்தபட்சம் புணர்ச்சியின் போதாவது – அந்த உடலையாவது – காதலிக்க வேண்டியிருந்தது.ஆனால் அவரின் எல்லா புணர்ச்சிகளிலும் லலிதாவே உடனிருந்தாள். அவர் சரஸ்வதியின் உடலால் எப்போதும் லலிதாவைப் புணர்ந்து கொண்டிருந்தார்.

எடுத்துக் கொள்ள சொல்லி அவள் எவ்வளவோ சமிக்ஞைகள் தந்திருக்கிறாள்.ஏக்கம் வழிந்த கண்களால், குறிப்புணர்த்தும் சொற்களால், தனித்திருந்தவேளைகளின் எதேச்சையானதே போன்ற தொடுதல்களால். நாம் தான் தயங்கி தயங்கிநின்று விட்டோம். நெஞ்சே! நீ மட்டும் கொஞ்சம் துணிந்திருந்தால் அவள் இடையில் ததும்பிநின்ற இளமஞ்சள் நதியில் குதித்து இச்ஜென்மத்தை கரையேற்றியிருக்கலாம். இன்பத்தின் வாயில்கள் திறந்திருக்கும் போதிலும் கோழைகளால் அதில் ஒரு போதும் பிரவேசிக்க முடிவதில்லை.



ஒரு காம்பவுண்ட் குடியிருப்பில் கணேசனின் வீட்டிற்குப் பக்கத்தில் லலிதா குடிவரும் பொழுது அவளுக்கு ஒரு கைக்குழந்தையும், கருத்து உருண்ட ஒரு கணவரும் இருந்தனர். அவ்வளவு வளைவு நெளிவான ஒரு உடலை அவன் சினிமாவின் டூயட்காட்சிகளில் மட்டுமே பார்த்திருந்தான். பொதுவாசல், பொதுக்கழிப்பிடம் என நெருக்கிக் கட்டப்பட்டிருக்கும் காம்பவுண்ட் வீடுகளின்அன்யோன்யம் தவிர்க்க இயலாதது. கறிக்குழம்பு மணம் பக்கத்து வீட்டுக்குப் போயே தீரும். அதன் குழந்தைகள் நண்பர்களாகியே தீர வேண்டும்.



குழந்தைப் பேற்றைக் கருதி கணேசன் ஒரு முறை லலிதாவை அக்கா என்று அழைத்தான்.

“உங்களுக்கு என்ன வயசு?

”பத்தொன்பது நடக்குது”

”எனக்கும் அவ்வளவுதான்..கொழந்தை பெத்துட்டா உடனே கெழவியா” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

“டேய்! அவளுக்கு நீ அக்கானு கூப்பிடறது பிடிக்கலைனா வேலை சுலபம்டா” என்றுஅவன் நண்பர்கள் தெம்பூட்டிய போதும் அவள் அங்கு குடியிருந்த ஒரு வருடகாலமும் ஒரு வேலையும் நடக்கவில்லை. லலிதாவின் கணவரோடு கணேசன் நன்றாகத்தான் பழகினான். ஜோக்குகளை பகிர்ந்து கொண்டான். வாய்பிருக்கும்போது இருவரும் மாலை நடைநடந்து போய் ஐயர் கடையில் தேங்காய்ப்பால் அருந்திவந்தார்கள். அங்கு காசு கொடுக்க முண்டியடிக்கவும் செய்தார்கள். என்றாலும் கணேசன் அவருக்கு கருமாண்டி என்று பெயர் வைத்திருந்தான். இரவு ஒன்பது மணிவரை லலிதாவின் வீட்டில் மூவரும் சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்தாலும் ஒன்பது மணி அடித்ததும் ”நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொல்லி இவனை வெளியே தள்ளி தாழிட்டு விடுகிறான் என்றால் அப்புறம் திட்டாமல் என்ன செய்ய?



காம்பவுண்டே காலியாக கிடந்த ஒரு தனித்த மதியத்தில் கணேசனை “காது சுண்டி”

என்று அழைத்து விட்டு வீட்டிற்குள் ஓடினாள் லலிதா. யாராவது தன்னை கேலிசெய்து விட்டு ஓடினால் பின்னே துரத்திச்சென்று பிடிக்கவேண்டும் என்கிற நல்லறிவு அப்போது அவனுக்கு சட்டென்று வேலை செய்தது. அவன் அவளை துரத்திக் கொண்டு ஓடினான். ஓடியவள், படுக்கையறையாய் இருக்கிற முன்னறையின் இரும்பு கட்டிலின் மேல் ஏறிக்கொண்டாள். இவன் பிடிக்க வரவும், எட்டிக் குதித்து சமையலறக்குள் ஓடினாள். இனி ஓட ஒரு இடமில்லை.சமயலறையின் மூலையில் மாட்டிக்கொண்டவளை இவன் கொட்டுவது போல கொட்டினான். அவன் கொட்டக்கொட்ட அவள் திரும்ப திரும்ப காதுசுண்டி காதுசுண்டி என்று முனகிக்கொண்டே கைகளை குறுக்கே வைத்து அவனைத் துடுத்தாள். அப்போது கிணுகிணுத்த வளையலோசை அவன் காதைப் புணர்ந்து மயக்கியது. அவளின் பூரித்த கன்னங்களிலும்,கருஞ்சிவப்பு இதழ்களிலும் அவன் மெய் மறந்த நின்ற கணத்தில் அவள் தப்பிக்கொண்டு மீண்டும் வராண்டாவிற்கு ஓடிவிட்டாள். காது சுண்டி என்ற பெயர் அவனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தேயிருக்கிறது. அந்தக் காது அவனை என்னதான் செய்யுமோ, அடிக்கொருதரம் அதை ஒரு முறை சுண்டிவிட்டு அதன் மடலை இரண்டுமுறை தேய்த்துவிடுவான்.



கருமாண்டிக்கு நைட் ஷிப்ட் என்றால் கணேசனுக்கும்தான் நைட் ஷிப்ட். மங்கிய வெளிச்சத்தில் கோரைப்பாயில் மல்லாந்து படுத்தபடியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு –விட்டத்தில் லலிதாவைப் பார்த்துக் கொண்டு- கொட்டக் கொட்டவிழித்திருந்தான். அவளும் அந்த மங்கிய வெளிச்சத்தில் படுத்துக் கொண்டு தன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் இவன் நினைத்துக் கொண்டான்.லலிதா பக்கதில்தான் படுத்திருக்கிறாள் இடையே ஒரு அட்டைத்தடுப்பு இருக்கிறது அவ்வளவுதான். சில இரவுகளில் அட்டையின் பூச்சிஓட்டைகளில் கண்செலுத்திப் பார்ப்பான். அப்போது கருமாண்டியின் அழுக்கு பனியனோ, தண்ணீர் சொம்போ தெரியும். அப்போது ஒரு பல்லியோ, கரப்பானோ இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டிற்கு சாவகாசமாக ஊர்ந்து சென்று இவனிடம் இழிச்சொல்லால் வசை வாங்கும். என்னதான் ஏங்கிஏங்கி புரண்டுபுரண்டு தவித்தாலும் இவன் பல்லியோ கரப்பானோ அல்லவே. கடைசியில் போர்வையை இறுக்கிப் போர்த்திக் கொள்வான். அட்டைத்தட்டி மறைந்து போகும்.



லலிதா போய் விட்ட சில நாட்களிலேயே கணேசனுக்குப் பக்கத்தில் படுத்துக் கொள்ள சரஸ்வதி வந்து விட்டாள். இடையே அட்டைத் தடுப்பு ஒன்றுமில்லை என்றபோதும் பல நாட்கள் இவன் விட்டத்தையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். முதலிரவில் அவசர அவசரமாக அவள் இடையை விலக்கி அதில் அந்த இள மஞ்சள் நதியைத் தேடினான். குதிக்க முடியாத படி அது வறண்டிருந்தது. என்றாலும் அவள் அழைக்கும் பொழுது இவன் போக வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் லலிதாதான் இவன் ஆண்மைக்கு இழுக்கு வராதபடி காப்பாற்றி வந்தாள். சரஸ்வதி கணேசனை அழைக்கும் போதெல்லாம் கணேசன் லலிதாவை அழைத்தான்.




*************


பீரோவைப் பார்த்து நின்றிருந்த பிரபுவின் முடியை பற்றியிழுத்து சுவற்றில் முட்டப் போனார் கணேசன். முட்டாது சட்டையை இறுகப்பற்றிஇழுத்தார். இரண்டு உடல்களும் நிர்வாணமாக கட்டிலில் புரளும் காட்சி ஒருகணம் அவருள் தோன்றிமறைந்தது. “ அவ ஒரு அரைக்கெழவிடா நாயே.. அந்த அரைக்கெழடு உனக்கு பத்துநாள்ல சலிச்சிரும் போ” என்று சபித்துவிட்டு மூர்க்கத்தோடு அவனை பின்னே தள்ளி விட்டார்.ஆனால்அது ஒரு சபிக்கும் பாவனையிலான கெஞ்சலைப் போன்றுதான் இருந்தது. அவன் அருகேயிருந்த டி.வி டேபிளின் மேல் சரிந்து விழுந்தான்.


கிராமங்களில் மனிதர்களுக்கு மட்டுமல்ல சில வீடுகளுக்கும் பட்டப்பெயர்கள் இருக்கும். அப்படி சொல்வதென்றால் பிரபுவின் வீட்டை சச்சின்டெண்டுல்கர் வீடென்று சொல்லலாம். வீட்டின் சுவற்றில், கதவில், மின்விசிறியில், பீரோவில், கொடியில் தொங்கும் பிரபுவின் பனியன்களில், அவன் ஓட்டிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் முகத்தில் என்று சச்சின்எங்கெங்கும் நிறைந்திருந்தார். இப்படி அவன் நினைவும் கனவுமாக இருந்த கிரிக்கெட்தான் அவனை அவன் ஊழ்நோக்கிக் கூட்டிப் போனது. வெள்ளலூரில் மேட்ச் விளையாடப் போகும் வழியில் பந்து வாங்குவதற்காக ஒரு அண்ணாச்சி கடைக்கு போனான் பிரபு. அங்குதான் லலிதா வறுத்த சேமியாவும், தயிர்பாக்கெட்டும் கேட்டு நின்று கொண்டிருந்தாள். பார்த்த முதல் நாளே அவள்வீடு வரை போனான். இரண்டொரு நாளில் வீட்டிற்குள் போனான்.ஆறு நெறுங்க நெறுங்க ஆடைகளை களைந்தபடியே ஓடி வந்து தாவிக்குதிக்கும் கிராமத்துச் சிறுவர்களைப் போல அவன் அந்த இளமஞ்சள் நதிக்குள் பாய்ந்து விழுந்தான்.

ஓடிப்போதல் என்பதே மரபுக்கு எதிரானதுதான். ஆனால் பிரபு செய்ய இருப்பது மரபார்ந்த ஓடிப்போதலுக்கு எதிரானது. தன்னை விடப் பெரியவளுடன் ஓடுவது.பெரியவள் என்றாள் கிட்டத்தட்ட இருபது வருடம் பெரியவள். ஆங்காங்கே ஊறத்துவங்கி விட்ட வெண்நரைக் கற்றைகளை கருஞ்சாந்து பூசி மறைத்திருக்கிற பெரியவள். ஊரின் வாயிற்கு மென்று தீராத அவல்.

கணேசணின் ஆத்திரம் இப்போது அழுகையாகி வழிந்து கொண்டிருக்கிறது. அவரின் முறுக்கிய மீசையிலும், அடர்ந்த தாடியிலும் கண்ணீர்த்துளிகள் சிக்கி நின்றன. அவர் தன் ஒரே ஒரு பிள்ளையின் முன்னே கைகூப்பி கும்பிட்டு நின்றார்.

“ தயவு செஞ்சு ஊர்கண்ணுக்கு சிக்காம எங்கயாவது தூராமா கூட்டிடு போய்டுடா...”


அப்போது தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த சரஸ்வதி அலறியபடியே அவன் கால்களை நோக்கித் தவழ்ந்து வந்தாள்.அவன் காலை வேகமாக இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். வாசலில் அமர்ந்து ஷு மாட்டிக் கொண்டிருந்தவனையே இமைக்காது வெறித்துக்கொண்டிருந்தார் கணேசன். அப்போது முதல்முறையாக அவனுக்கு காது என்னவோ செய்தது. அவன் தன் காதை ஒரு முறை சுண்டிவிட்டு அதன் மடலை இரண்டு முறை தேய்த்து விட்டான்.


நன்றி - தூரன் குணா , இளங்கோ கிருஷ்ணன்

Sunday 20 March 2011

யவனிகாவின் மடியில் அமர்ந்து குடித்தல்


துரையில் நண்பர் செந்தி ஒருங்கிணைத்த தாகம் சந்திப்பில் 13ம் தேதி அன்று கலந்து கொண்டேன்.ரொம்பநாள் கழித்து மிகுந்த உற்சாகம் அளிக்கும் நிகழ்வாக இது இருந்தது.
நிறைய வானரங்கள் பங்கேற்ற அந்நிகழ்வு மிகவும் அர்த்த பூர்வமாக,
முக்கியத்துவம் வாய்ந்த கவிதை உரையாடலாக இருந்த்து. தன்னிகற்ற பேச்சளாராக உருமாறி வரும் யவனிகா, கவிதைகளை பற்றி சரளாமாக
பேசினார். அவருடைய அவ்தானங்களில் சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் அப் பேச்சு மிகுந்த பயனுடையதாகவே இருந்தது.
நிகழ்வை செல்மா தொகுத்தளித்தான். அந்த சல்லிப்பயலுக்கு கவிதைக்குள் இருக்கும் அரசியல் குறித்து நிறைய தெரியும் என்பது எனக்கு தெரியும். ஆனால் கவிதையின் குணங்கள், அதன் உட்சிக்கல்கள் அதன் வடிவம்,
வேறு வெளிப்பாட்டு வடிவங்களோடு அதற்கிருக்கிற கொடுக்கல் ,வாங்கல்கள்
குறித்தெல்லாம் இவ்வளவு தெரியும் என்று எனக்கு தெரியாது. அவனை ரொம்ப நாள் கழித்து அன்றைய இரவில் ”உள்ளொன்றில்லாமல்” முத்தமிட்டேன்.
கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாமல் அதே சமயம் நிகழ்வின் பொருளில் இருந்தும் தடம் மாறாத அரிய நிகழ்வாக இது இருந்தது.

சனிக்கிழமை மதியமே சமயவேல் அலைபேசியில் அழைத்து எங்கு வந்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார். ஆனால் இரவு அவரால் என் அறைக்கு வரமுடியவில்லை. எனக்கு அந்த அழைப்பே போதுமானதாக இருந்தது. சுகுமரானிடம் முதல்முறையாக உளறாமல் பேசினேன் அல்லது நிறைய உளறினேன். தன் குழந்தையின் விளையாட்டைப் போல அவ்ர் அதை
கேட்டுக் கொண்டிருந்தார். நண்பன் SRI வந்திருந்தான். அவனிடம் என் கட்டுரை எப்படி இருந்த்து என்று கேட்டேன். “ உனக்கென்னடா..” என்று சொல்லிவிட்டு கட்டிக்கொண்டான். இனி அந்த கட்டுரை நாசமாய் போனால் தான் என்ன?.
கரிகாலனிடம் நான் எதுவும் நிறைய பேசவில்லை என்று சொன்னால் அதை உண்மையென்று இந்த ஊர் நம்ப்போவதில்லை.லிபி சனி இரவு அறைக்கு வந்தார். பாவன் வந்த இரண்டு நிமிட்த்திலேயே தன் எல்லா மரியாதைகளையும் இழந்து ”டா” ஆகி விட்டான். பகலிலும் குடிக்கிறியாடா ராஸ்கல் என்று என்னைத் திட்டினான். இரவு மலேசியாவின் நினைவாக “காடு பொட்ட காடு” பாடலைப் பாடி சங்கரிடம் உதட்டில் ஒரு நீண்ட முத்தம் பெற்றேன்.

ஞாயிறு இரவு கொண்டாடம் முடித்து ஒரு ரோட்டுக் கடையில் அமர்ந்து
சாப்பிட்டோம். வழக்கம் போல இரண்டு தட்டில் ஏழு பேர். லீனாவின் ரயின் வருவதற்க்கு சற்று நேரம் இருக்கையில் நண்பர்களிடம் என்னைத்திட்டு வாங்க வைப்பத்ற்கென்று ஜெயமோகன் ”வந்து சேர்ந்தார்.” ஒரு சின்ன சச்சரவு எழுந்து அடங்கியது.

சனி இரவு மதுரையில் இறங்கியதும் செந்தி யவனிகாவிடம் அழைத்துப் போனார். யவனிகாவிற்க்கு என் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் என்பதை அவரின் பேச்சுகளின் வழியே அறிந்திருக்கிறேன். தமிழின் முக்கியமான ஒரு அரசியல்கவிக்கு அரசியல்அறிவற்றவன் என்று தூற்றப்படுகிற ஒருவனின் கவிதைகள் பிடித்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு யவநிகாவில் ஒளிந்திருக்கும் கல்யாண்ஜி யை பற்றி நானும் இளங்கோவும் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு.

நானும் யவனிகாவும் கொண்டாட்டத்தை வாங்கிவர அறையில் இருந்து கீழே இறங்கிப் போய்விட்டோம் . திரும்பி வருகையில் லிபியும் , சங்கரும் வேறு ஒரு நண்பரைப் பார்க்க போய்விட்டார்கள். யவனிகா என்னை கொஞ்சம் குடிக்கும் படி சொன்னார். நான் நண்பர்கள் வரட்டும் என்று சொன்னேன் .

" கொஞ்சம்மா குடிடா .. கொஞ்சமா இவ்வளவு .. ''

நான் கொண்டாட்டத்தை டம்ளரில் நிரப்பினேன் .

" இவ்வளவு மட்டும் குடி .."

நான் அவ்வளவு மட்டுமே குடித்தேன்

மிக மெதுவாக குடித்தேன்

நான் அவ்வளவு மட்டுமே குடித்து முடித்ததும் அத்தனை நேரமாய் அவர் கையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்த

கார நெல்லிக்காயை கொடுத்தார். நான் அதை பள்ளிப் பருவத்தில் சாப்பிட்டது. தொக்கு போல ஒன்று .

" எப்படற இருக்கு . நல்ல இருக்குல்ல .."

"ம்"

அவர் திரும்பவும் ஒரு அளவை சொன்னார் .

நான் இப்போதும் அவர் சொன்னபடி தான் குடித்தேன்

இந்த முறை ஏதோ ஒரு கிழங்கு துண்டை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் .


"எப்படற இருக்கு"



அது எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை

மனைவியை பறிகொடுத்த ஒருவன் தன் கைக்குழந்தையை மடியில் அமர்த்தி சோறுட்டும் காட்சி அது.



கோவை வந்து சேர்ந்த மறு நாள் ஒரு தோழி என்னை தொடர்பு கொண்டு

" ஏன் நீ வெளியூர் போனால்

மொபைலை அனைத்து வைத்து விடுகிறாய் என்று கேட்டாள்"

அது முழுமையாக என்னுடைய நாள் .. எங்களுடைய நாள் .. அதற்குள் பிரவேசிக்க

என் அம்மையப்பன் உட்பட யாரையும் நான் அனுமதிப்பதில்லை என்று சொன்னேன்..

Thursday 17 March 2011

அந்தப் பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது


கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை
உடைகளில் கிழிசலேதுமில்லை
ஆனாலும் அந்தக் கண்கள் ..
அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை

அவன் உணவு
தேக்கு மரக்கதவுகளாலும்
சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும்
இரண்டு கொழுத்த நாய்களாலும்
தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள்
வாழ்கிறது.

அந்த வீதியில் எத்தனையோ
வீடுகள் திறந்திருக்கும் போதிலும்
பன்னெடுங்காலமாக
அவன் அந்த இரும்பு கிராதிக்கு
கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான்.

காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து,
நாய்களை கொன்று வீசி விட்டு
தேக்குமரக்கதவுகளை
உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில்
அவன் புனையும் பாடல்கள்
அவனைப் போலவே
இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன.
அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான்
அல்லது அந்தப் பசியை.
அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது.
அது வாழட்டும்
காணவே காணாத அந்தப் பிச்சை
அதுவும் வாழட்டும்
அந்த நாய்கள்
அவை வாழ்வாங்கு வாழட்டும்.