Skip to main content

Posts

Showing posts from April, 2011

குட்டிச் செம்பொன்

சுவரைத் தாண்டாத தாழ்ந்த குரலில் உருக்கொள்கிறது ஒரு சச்சரவு அந்த வீட்டின் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஏசிக்கொள்கிறார்கள் வஞ்சினம் சொல்கிறார்கள் அப்பா காலைத் தூக்கிக்கொண்டு அம்மாவை உதைக்க போகிறார் அம்மா ஒரு சொல்லை பழுக்ககாய்ச்சி அப்பாவின் நெஞ்சில் வைத்து தேய்கிறார் அம்மா நெஞ்செங்கும் அழ, அப்பா கண்களுக்குள் அழுகிறார் அப்பா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்விற்குள் அம்மா மூத்திரம் மொண்டு வைக்கிறாள் அம்மா கனவு கண்டிருந்த பொன்னான வாழ்வை அப்பா எண்ணெய்ச் சவுக்கால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார் நமக்கு தெரியும் இரண்டு வயதே நிரம்பிய ஒரு குழந்தைக்கு என்ன தெரியுமென்று நான் பேசுவதெதுவும் அதற்கு புரியாது அதனால் பேசவும் முடியாது இரண்டு முகங்களையும் மாறி மாறி பார்க்கும் அது ஐந்தாம் வீட்டின் சுவரை முட்டிக்கொண்டு அழுகிறது பொன்னான வாழ்வில் பூத்த குட்டிச் செம்பொன் அநியாயத்திற்கு வளர்ந்து விட்டது

முட்டக்கோழியின் அதிகாரம்

இன்று அதிகாலைத் தூக்கத்துள் வந்து விழுந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. எழுந்து வாசலுக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய முட்டக்கோழி நின்று கொண்டிருந்தது. அதற்கு அப்புறம் உலகமே தெரியவில்லை. சிலசமயம் அது அப்படியும் இப்படியுமாய் அசைந்தாடுவது நிச்சயம் ஒரு கேலிநடனம். எப்போது வேண்டுமானாலும் யார் வீட்டு வாசலிலும் உருண்டு வந்து நிற்கலாம் ஒரு முட்டக்கோழி. என் தாத்தா கடவுளை செருப்பால் அடித்திருக்கிறார். எனவே நான் கடவுளின் அதிகாரத்திற்க்கு பயப்படுவதில்லை. ஆனால் தாவாக்கொட்டையில் மயிர்வளர்க்கும் எத்தனையோ பேர் தோன்றி என்னென்னவோ சொன்னபோதிலும் முட்டக்கோழியின் அதிகாரத்தை உடைத்தெரிய முடியவில்லை. நான் முட்டக்கோழிக்கு அஞ்சுகிறேன் அதைப் பணிந்து வணங்குகிறேன் முட்டக்கோழியே! என்னை விட்டு விடு