பொறுப்போடிருந்ததின் நஷ்டங்கள்
[கருக்கல் அகநாழிகை இணைந்து நடத்திய கவிதை உரையாடல் பதிவு]
’ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமண் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல’
- வெள்ளிவீதியார்-
கருக்கல்- அகநாழிகை இணைந்து நடத்திய கவிதை உரையாடல் பொள்ளாச்சியில் நிறைவாக நடந்து முடிந்தது.இது நிகழ்வை பற்றிய முழுமையான பதிவல்ல. ஒரு தீவிர கவிதை வாசகனுக்கு இதில் தேவையற்றது நிறைய இருக்கலாம்.
சனிக்கிழமை அதிகாலையிலேயே உருகுவேவில் இருந்து நண்பன் தூரண் குணா அழைத்து, எப்பாடு பட்டாவது பொறுப்பாக நடந்து கொள் என்று அறிவுறுத்தினான். நிகழ்விடம் வந்து சேர்வதற்கு சிக்கலானது என்பதால் நண்பர்கள் இரவு 9 மணிக்கு தான் வந்து சேர்ந்தார்கள். நான், சுரேஸ்வரன், இளங்கோ, வாசு, நிலாரசிகன், முத்துவேல், மணி ஜி ஆகியோர் மதியமே மலைக்கு போய்விட்டோம். ஒரு சின்ன மலையேற்றம் போய் வந்தோம்.நிகழ்வுக்கு வந்த வாகனங்கள் வினோதமான பயணங்களில் இருந்தன.ஒரு வாகனம் 4 மணி நேரமாக உடுமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இது நடந்து வர ஆகும் நேரத்தை காட்டிலும் அதிகமானதாகும். நிகழ்வை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட்டு விடும் திட்டம் ஒன்று இருந்தது. ஆனால் அரசு நம்மிடம் இல்லை என்பதால் அது இயலவில்லை.
நண்பர்கள் வந்து சேர சிரமப்பட, மனதுக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனாலும் 7 மணிக்கு நாங்கள் ” ரவுண்டு கட்டி உட்கார்ந்து விட்டோம்”. ”மாலையில் யாரோ மனதோடு பேச” என்று வாசுவின் போனில் இருந்து அவரின் தோழி பாடினார். பிரமாதமாக , சுவர்ணலதாவின் குரல் போலவே இருந்தது அது.நண்பன் பாபு என் கண்ணில் பட்டதும் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது. வழிதெரியாமல் தவித்துக்கொண்டிருப்பவர்களை அழைத்து வரும் பொறுப்பை அவன் சிறப்பாக செய்து முடித்தான்.
அந்த இரவில் அடர்ந்த காட்டில் வாகனம் வரமுடியாத பாதைகளில் ஒரு செல்போன் லைட்டின் உதவியுடன் நண்பர்கள் நடந்து வந்து சேர்ந்தார்கள். எனக்கு இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருந்தது. அனேகமாக எல்லோரும் எங்கள் மேல் கொலைவெறியில் தான் இருந்திருப்பார்கள். ஆனால் அந்த அற்புதமான மலையும், காற்றுவெளியும், அதில் அமைந்திருந்த இரண்டு குடில்களும், குடில்களுக்கு வெளியே கொட்டப்பட்டிருந்த மணல் பரப்பும் அவர்களின் கோபத்தை குளிர்வித்து விட்டது. வந்த எல்லோரும் “ரவுண்டு கட்டி உட்காரத் துவங்கினார்கள்”.அன்பும், சண்டையும் துவங்கியது.
உடல் நலம் காரணமாக அதிகமாக வெளியே வராத சமயவேல் அந்த இருட்டிய காட்டுப்பாதையில் ஒரு கிலேமீட்டர் நடந்து வந்திருந்தார். அந்த அலுப்பையும் எரிச்சலையும் துளியும் காட்டிக் கொள்ளாமல் ஒரு இளைஞனைப் போல உற்சாகி ஆகிவிட்டார். இரவில் பெரிதாக அடிதடி எதுவும் நிகழவில்லை. ஒரே ஒரு இரும்பு சேர் தூக்கி வீசப்பட்டதாக அறிந்தேன்.அது இரும்பு என்பதால் உடையவில்லை.அந்த கணத்தில் நான் ஒரு விசயத்தை கற்று கொண்டேன். இனி ஏதாவது கூட்டம் நடத்தினால் அதில் இரும்பு சேர்களைத் தான் பயன் படுத்த வேண்டும் என்பது தான் அது. ஆனால் மறுகணமே வேறொரு எண்ணம் குறுக்கிட்டது. கீழே போட்டதால் பரவாயில்லை.. தலையில் போட்டிருந்தால் ? உடனே அவசரம் அவசரமாக ப்ளாஸ்டிக் சேர்களுக்கு திரும்பிவிட்டேன். இரவு 12.00 மணியில் இருந்து 1.00 மணி வரை குடித்தவர்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப் போகிறேன். நீங்கள் குடித்தது மதுவே அல்ல. பச்சைத் தண்ணி. { ஏப்பா, பச்சைத் தண்னிய குடிச்சுட்டா சேரை தூக்கி வீசுனீங்க .. தாமாசே.. தாமாசே}.நண்பன் பெரியசாமிக்கு நாங்கள் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறோம்.யாருக்கும் இல்லையென்று சொல்லாமல் பச்சைத்தண்ணியை ஊற்றி ஊற்றி கொடுத்து
அந்த அமர்வை சிறப்பாக்கி விட்டான் அவன். இனி குறைந்த செலவில் இலக்கிய கூட்டம் நடத்த விரும்புபவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம்.
{ ந.பெரியசாமி. ஒசூர். எண்;9952787009}.
நான் மணல் பரப்பில் படுத்து சீக்கிரமே தூங்கி விட்டேன் “கச்சேரி” முடிந்ததும் செல்மா எழுப்பி உள்ளே போய் படுக்க சொன்னான். எழுந்தவனுக்கு பெரிய அதிர்ச்சி. மலையைக் காணவில்லை. வேறொன்றும் இல்லை அது என் பின்புறத்தில் இருந்தது.
காலையில் பொறுப்புணர்ச்சி சீக்கிரமே எழுப்பிவிட்டு விட்டது.எல்லோருக்கும் துளசி டீ தயாரித்து தரப்பட்ட்து. சமயவேல், லீனா, செந்தி, செல்மா போன்றோர் மலைக்கு போனோம். அந்த மலை சுரேஸுக்கு மட்டும் தான் திறக்கும் என்பதால் நாங்கள் கொஞ்ச தூரம் மட்டும் தான் நடந்து போனோம். செல்மா, “ என்னடா உன்னோட நிகழ்ச்சினா மட்டும் அவ்வளவு பொறுப்பா நடந்துக்குவியோ.. அதெல்லாம் முடியாது எல்லாரும் ஆற்றுக்கு குளிக்க போகலாம்’ என்றான். நல்ல வேளையாக ஆறு வறண்டிருந்தது.
அழைப்பிதழைப் பார்த்த எல்லோரும் இவ்வளவு அமர்வுகளை ஒரே நாளில் நடத்துவது கடினம் என்று சொன்னார்கள். எனவே நிகழ்வை குறித்த நேரத்தில்
தொடங்கி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். அப்படியும் 10.30 ஆகிவிட்டது. காலையிலும் அந்த இடத்திற்கு வந்து சேர நண்பர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முதலில் பொதியவெற்பன் கட்டுரை வாசித்தார். அது அரசியல் பூர்வமாக இருந்தது.கருத்துரை சொன்ன சமயவேல் ”கவிதை எல்லா கோட்பாடுகளையும் தத்துவங்களையும் மீறியதாக , சுயமானதாக இருக்கிறது. அவற்றை அது கேள்வி கேட்கவும் செய்கிறது” என்று சொன்னார். அப்போது நான் கைகளை மேலே உயர்த்தி தட்டினேன். பின் வரிசையில் இருந்த நுண்ணரசியல் காரர்களும் கை தட்டினார்கள். ஒரு வேளை அது என் தட்டிற்கு எதிர்தட்டாக இருக்கலாம். அடுத்து சாகிப்கிரான் தன் இசங்கள் பற்றிய கட்டுரையை வாசித்தார். [ இவரை மட்டும் ஏன் எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை மீசை இல்லாமல், மொழு மொழு வென்று சேவ் செய்து கொண்டு அப்பாவியை போல, வாய்க்குள்ளேயே பேசினால் பெண்களுக்கு பிடிக்குமோ..? வச்சிக்கறன்..} . வாசித்து முடித்ததும் அந்த கட்டுரையின் போதாமை குறித்து விவாதங்கள் எழுந்தன. மூன்றாவதாக செல்மா ப்ரியதர்ஸ்ன் கவிதையும் அரசியலும் என்ற தன் கட்டுரையை வாசித்தான். வழக்கம் போல அவையை வசிகரிப்பதாக அவனின் பேச்சு அமைந்தது.ஆனால் அவன் எடுத்துக்காட்டிய எல்லா கவிதைகளிலும் சத்தம் அதிகமாக இருந்தது. கண்ட்ராதித்தன் கவிதையும் கடைசியில் “ தேவிடியா மகனே” சத்தமிட்டு விட்டது. நான் இப்படி சொல்வதின் அர்த்தம், கவிதை சத்தமிடக்கூடாது என்பதல்ல.சன்னமான குரலில் நுட்பமான அரசியலைப் பேசும் கவிதைகளையும் அக்கட்டுரை பிரதிநிதிதுவப்படுத்தி இருக்கலாம் என்பதே நான் சொல்ல வருவது.
மதியத்திற்கு பிறகு பழந்தமிழ் கவிதைகள் வாசிக்கும் அமர்வை இளஞ்சேரல் ஒருங்கிணைத்தார். அவர் ஒரு மருத்துவ நூலில் இருந்தும். சிற்ப்சாஸ்திரம் நூலில் இருந்தும் இரண்டு கவிதைகளை வாசித்தார். அந்த அமர்வை நான் மிகவும் ரசித்தேன். .{ எத்தனை காலம் தான் இப்படி பாட்டன் சொத்திலேயே உக்காந்து சாப்பிட்டு கொண்டிருப்பது]. சில திட்டங்கள் தோன்றியவுடன் ஜெயித்து விடும். நாங்கள் அந்த அமர்வை நடத்த யோசித்தபோதே அது வெற்றிகரமாக நடந்தேறி விட்டது. அம்சப்ரியா, வெய்யில் இருவருமே வெள்ளிவீதியாரின் ஒரே கவிதையை எதேச்சையாக தெரிவு செய்து வந்திருந்தார்கள். என்றாகும் ஆகச்சிறந்த அந்த கவிதை இரண்டு முறையும் அவையில் வாசிக்கப்பட்டது. மாங்குடி மருதானாரின் பரத்தை குறித்த பாடல் ஒன்றை லிபி ஆரண்யா வாசித்தார். அனைவரும் அதை வெகுவாக ரசித்தார்கள். அன்பின் ஐந்திணையைத் தவிர கைக்கிளை. பெருந்திணை போன்ற திணைகள் கலித்தொகையிலேயெ இடம் பெறுகிறது என்று சொன்ன கண்ணகன், ஒரு நெடிய பெருந்திணைப் பாடலை வாசித்தார்.
அவரின் பிரமாதமான வாசிப்பு முறையும். தெளிவான் விளக்கமும் அந்த நெடிய பாடலை பின் தொடர உதவியது. நான் தனிப்பாடல் திரட்டிலிருந்து இரண்டு பாடல்களை வாசித்தேன். இறுக்கம் தளர்ந்து எல்லோரும் சத்தமிட்டு சிரித்தனர். ஆனால் அது ஒரு சிரிப்பு கவிதை அல்ல என்பதையும் எல்லோரும் உணர்ந்திருந்தனர். அந்த பாடல் இது.. பாடியவர் பலபட்டை சொக்கநாதப் புலவர்.
” உனக்கின்றி யான் செய்த குற்றமொன்று மில்லை- உனைப்பிரிந்தால்
வனக்குன்றில் ஏறி விழ அறியேன்; வண்ணம் சேர் மயிலே
எனக்கென்று வட்டமிட்டு அண்ணாந்து விம்மி இருக்கும் உந்தன்
தனக்குன்றில் ஏறி விழுவேன் நின் அல்குல் தடாகத்திலே”
பொன். இளவேனில் திருவாசகத்தில் இருந்தும், சங்கர் நற்றிணையில் இருந்தும் பாடல்களை வாசித்தார்கள். பிறகு யவனிகா சிறி ராம் தமிழ்க்கவிதையின் மாற்று அழகியல்கள் என்கிற கட்டுரையை வாசித்தார். அது ஆழமும், தீர்க்கமும் மிக்கதாக இருந்தது. என்ன அரசியலைப் பேசினாலும் அவரோடு ஒரு கவிஞன் ஓடி வந்து கொண்டே இருக்கிறான். அவர் மூன்றாம் உலக நாடுகள் என்கிற சொற்றொடரைப் பயன் படுத்தும் தருணத்திற்க்காக நண்பர்கள் யாவரும் தவிப்போடு காத்திருந்தோம். ஆனால் அவர் அதை கடைசி வரை பயன்படுத்தாமல் ஏமாற்றி விட்டார். விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய லீனா மணிமேகலை, நவீன பெண்கவிகள் உடலை எழுதுவதின் அரசியல் வேறாக இருக்கும் போது அவர்களின் கவிதைகளை சங்ககவிதைகளோடு ஒப்பிட்டு பேசுவது அபத்தம் என்று சொன்னார். மேலும் சங்கப்பாடல்கள் நிலபிரபுத்துவ மதிப்பீடுகளையே கொண்டிருக்கின்றன என்றும் வாதிட்டார்.
மோகனரங்கன் கவிதையும் கவிதையியலும் என்கிற தன் கட்டுரையை வாசித்தார். அவருடைய எல்லா கட்டுரைகளையும் போலவே இதுவும் தெளிவான் பார்வையோடு இருந்தது. மற்ற வெளிப்பாட்டு வடிவங்களுக்கும், கவிதைக்குமான வேறு பாட்டை கவித்துவம் மிக்க சொற்களால் விவரித்தார்.தமிழில் கவிதையியல் சார்ந்து வந்திருக்கிற நூல்களை பட்டியல் இட்டார். தன்னடக்கம் காரணமாக அவர் எழுதிய “ சொல் பொரும் மவ்னம் “ அதில் இடம் பெறவில்லை. யாழன் ஆதி தலித் கவிதைகள் பற்றியும், தலித் கவிஞர்களைப் பற்றியும் தன் உரையில் பேசினார். ஒரு தலித் எழுதி இருக்கும் பட்சத்திலும், அது தலித் பிரச்னைகளை பேசாத பட்சத்தில் அது ஒரு தலித் படைப்பு ஆகாது என்று பேசினார். இந்த கட்டுரையை ஒட்டி நீண்ட விவாதங்கள் நடந்தன. மணி 5 ஆகி விட்டது. நான் அதிகமும் சோர்ந்து விட்டேன். கவிதை வாசித்தலின் இரண்டாம் அமர்வை நடத்தாது விட்டு விடலாமா என்று யோசித்தோம். கடைசியில் குடிலின் உரிமையாளரிடம் சிறப்பனுமதி வாங்கி அதையும் நடத்தி முடித்தோம். கவிதைகள் சிறப்பானதாகவே இருந்தன. விஷ்ணு புரம் சரவணன், நிலாரசிகன், ச.முத்துவேல், மணிவண்ணன், ஜி.தேவி, பெரியசாமி, செந்தி ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர். ச.முத்துவேலின் கவிதை இது..
நீ-யும்
கேரம் போர்டில்
இப்போது உன்முறை
நீ
வெற்றிகளை அடுக்கவில்லை
வெற்றியை நோக்கி முன் நகரவில்லை
எதிராளியின் வெற்றிக்கு தடைபோடவில்லை
துணை போகவில்லை
ஒருமுறை சுண்டிவிட்டாய்
எதிலும் தொட்டுக்கொள்ளாமல்
சென்றுவந்தது
இம்முறை
விளையாடிவிட்டாய்
நீயும்
o
கடைசியில் பொன். வாசுதேவனின் நன்றி உரையோடு விழா முடிந்த்து. விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டே இருந்தோம். இளங்கோ, “ஏண்டா, இப்படி மூஞ்சியக் காட்டிட்டே இருக்க. ஃப்ரியா இருடா” என்று திட்டினான்.காலையில் துவங்கிய பொறுப்பின் பதற்றம் விழா முடிந்து நண்பர்கள் அவரவர் ஊர்களுக்கு பத்திரமாக போய்ச் சேர்ந்தார்களா என்று விசாரித்து தெரிந்து கொள்ளும் வரை நீடித்தது.எல்லோரையும் கட்டி அணைத்தேன் என்ற போதிலும் அது கட்டிக்கொண்டது போலவே இல்லை. ஒரு சடங்கு போலத் தான் அதை உணர்ந்தேன். லீனாவை அதிகாலையில் எழுப்பி பெட் காஃபி தந்த போதும் என்னை ஒரு நிகழ்ச்சி நடத்துபவனாகவே உணர்ந்தது அபத்தமாக இருந்தது. யாரோடும் ஒழுங்காக பேசாமல் வியர்க்க விறுவிறுக்க நான் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை நண்பர்கள் கிண்டலடித்த படியே இருந்தனர். யாரோடும் பேசியது போலவே இல்லை என்பதால் விழா முடிந்து கிளம்புவதாக சொன்ன பாபு, சாகிப் போன்றோரை வேண்டாம் என்று இருக்க சொல்லி விட்டேன். பொள்ளாச்சியில் ஒரு விடுதியை அமர்த்திக் கொண்டு வாயார பேசிய பின் திங்கள் கிழமை பிரிந்து சென்றோம்..