Monday 18 July 2011

குட்டி குட்டியாக சில பிரமாதமான வாழ்க்கைகள்

” இந்த வாழ்வு தாறுமாறான பீட்டில் பாடப்படும்
மோசமான பாடல் ”
என்று சொல்வார் சின்னதங்கம் பீட்ட்ர்ஸன்.
அதனால் தான் அதற்குள்
குட்டி குட்டியாக சில பிரமாதமான பாடல்கள்.
ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும்
ஓட்டிச் செல்கிறது..

ஒரு நாள்,
அது சைக்கிள் சிறுவர்கள்
கையசைத்து கடந்து செல்கிற
PBS வாகனம்.
பெருநகர சாலையின்
வெள்ளைக் கோட்டிற்கு இப்புறம்
கருங்குயில்கள் பறந்து திரியும்
நந்தவனம்...

மறு நாள்,
அது பித்தம் முற்றிய ஒரு மேற்கத்தியனுடையது.
ஹாரனின் ஊளையை இன்னொரு கருவியிசையாக்கிக் கொண்டு
நூலிடைச்சந்துகளில் புகுந்து வளைந்து
களிபீடித்தாடுவது...

ஒரு பாடல் என்னையும் என் வாகனத்தையும்
ஓட்டிச் செல்கிறது...

நானும் ஆண்ட்ரியாவும்
கடவுளாகிக் கொண்டிருக்கையில்
குறுக்கிட்டதொரு பெரிய டேங்கர் லாரி
மண்டை உடைந்து இரத்தம் வழிகிறது
ஆனந்தம்..
பரமானந்தம்..

( ஜான் சுந்தருக்கு..)

Friday 15 July 2011

என் பொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன்

என் மொறாமையை அவிழ்த்து விடப் போகிறேன்
அது கன்னங்கரு குகையில் அலைந்து திரியும்
கன்னங்கரு மிருகம்.
வன்மத்தின் கொள்ளி மின்னுகிற கண்கள்
அதன் உருவம்.
இந்த உலகத்தின் ஒவ்வொரு புன்னகையும்
அதன் கொள்ளியில்
வாய்வைத்து ஊதுகிறது.
சொர்க்கபுரியின் கூச்சல்களை சதா உன்னித்திருக்குமது
அதை சகிக்கவொண்ணாத தருணத்தில்
ஒரு இடியை உறுமுகிறது.
கடவுள்
அந்தரத்தில் மறைகின்ற மாமிச துண்டங்களை
அதற்கு வீசியெறிந்தார்.
எனவே அது பக்கத்து தட்டை பார்க்க வேண்டி வந்தது
அழுகையில் ஊறி நைந்த இரவுகளில் இருந்து
திசைதெறிக்க ஓடி வருமதன் குறுக்கே
நீதியை முழங்கும் கனவானை
அது வாயைதிறவாமலேயே மென்று விடுகிறது.

Saturday 2 July 2011

கவிதை நூல் விமர்சனம்

ஏரிக்கரையில் ஒலிக்கும் அம்மணனின் தனிப்பாடலும்
கொஞ்சம் சேர்ந்திசையும்
( ஸ்ரீ நேசனின் “ஏரிக்கரையில் வசிப்பவனை” முன் வைத்து.. )


இத்தொகுப்பில் ஏரியோ, மலையோ பொருளாகவோ அல்லது சொல்லாகவோ இடம் பெறாத கவிதைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.ஆனால் “இயற்கையை ரசித்தல்” என்கிற வகைக்குள் இவை அடங்கி விடுவதில்லை.மாறாக தான் ஒன்றுமற்ற அம்மணனாகி , பெரிய மலைக்கு முன்னால் குழந்தைக்கும் குழந்தையாகிக் கிடக்கவும், ஏரியிலொரு சின்னஞ்சிறு மீனாகி நீந்தவும் விரும்புகிறார் நேசன். ஏரியும் மலையும் தனக்கு பலவற்றையும் கற்றுத்தருவதாக அவர் நம்புகிறார்.எல்லாவற்றையும் கொண்டு வந்து அவர் ஏரியோடும் மலையோடும் சேர்க்கிறார். போதையின் “உச்சத்தை” அவர் பெரிய மலையோடு கொண்டு வந்து சேர்க்கையில் நாம் களிப்புற்றுத்தான் போகிறோம். (திரவ மலை; ப:எண்: 33).தொகுப்பை படித்து முடிக்கையில் இப்படி எல்லாமுமாக இருக்கும் அந்த ஏரியையும், மலையையும் ஒரு முறை போய் பார்த்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக நமக்கு நேசனின் கண்கள் இல்லை.

இவ்வாழ்கை மீது எந்த புகாருமற்ற தன்னொடு ஒடுங்கிய ஒரு மனிதனின் குரலை நாம் முதல் பாதி கவிதைகளில் கேட்கின்றோம். பாவம் ஒரு ஆன்மா ஏரிகரையில் படுத்து நிம்மதியாக துயிலட்டும் என்று நாம் விட்டு விடுகிறோம். ஆனால் அவர் திடீரென் அங்கிருந்து எழுந்து கொள்கிறார்.ஏனெனில் நேசனுக்கு ஒரு வீடிருக்கிறது. அந்த வீட்டில் அவர் மனைவியும், மக்களும் ஒரு அரைகுறையான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். எனவே நேசன் ஒரு அரைகுறையான வேலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அந்தப் பணி அவரை ஒரு அரைகுறை ஆளாய் மாற்ற முயற்சிக்கிறது.அங்கு அவருக்கு உயரதிகாரிகள் இருக்கிறார்கள்.உயரதிகாரிகளுக்கு சில உயரதிகாரிகள் இருக்கிறாகள். அந்த உயரதிகாரிகளுக்கு மேலே ஒரு அரசு இருக்கிறது. அரசுக்கும் சில உயரதிகாரிகள் இருக்கிறார்கள். நேசன் அந்த அரசின் தவிர்க்க முடியாத உறுப்பினராக இருக்கிறார். நேசன் பத்திரிக்கை வாசிக்கிறார். அதில் கொள்ளை கொள்ளையாய் ஊழல் நடக்கிறது. பக்கத்திற்ககு நான்கு கொலை நடக்கிறது. குண்டு வீச்சில் ஒரு காலை இழந்த குழந்தையின் புகைப்படம் அதில் வருகிறது. நேசனின் கிராமத்தை நகரம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. எல்லா நாடுகளிலும் மக்களாட்சியை கொண்டு வருவதின் நிமித்தம் அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆள்கிறது. விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி கொண்டு தடியடி நட்த்துகிறார்கள். தந்தை மகளை வண்புணர்ச்சி செய்து கொல்கிறான். ஒரு தலைக் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்பாக்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டி விடிய விடிய க்யூவில் நிற்கிறார்கள். நேசன் புகார் சொல்லத் துவங்குகிறார். தொகுப்பின் பின் பாதி கவிதைகளை எழுத துவங்குகிறார்.
சென்னை நகர விடுதி ஒன்றில் கவிஞரொருவர் ”என் மகள்களுக்கொரு கடவுள் வேண்டும்.. என் மகள்களுக்கொரு கடவுள் வேண்டும் ” என்று கன்னங்களில் நீர் வடிய அழுது கொண்டிந்ததைக் கண்டிருக்கிறேன்.நாம் எப்பாடு பட்டாவது நம் கடவுளை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம். கடவுளை கண்டுபிடித்து விட்டவர்களின் மேல் எனக்கு நிறைய பொறாமை உண்டு என்பதால் நேசன் தன் கவிதைகளின் மூலம் என்னை பொறாமை கொள்ளச் செய்கிறார்.அதுவும் அவர் கடவுள் தாய்மை பொங்கி பிரவகிக்கும் பெண்கடவுளாக வேறு இருக்கிறார். ஆசிரியர், தோழர் என்கிற சொற்களை இரு பாலுக்குமான பொதுசொல்லாக என்னால் கருத முடிந்ததே இல்லை. பள்ளியில் ஒரு முறை “ஆசிரியைகள் அறை” த்தேடி அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன்.கடவுள் என்கிற பொதுசொல்லையும் ஆண்பால் கடவுளாகவே என் ஆண்மனம் இது வரை கண்டு வந்திருக்கிறது. முதன் முதலாக நேசனின் கவிதையில் கடவுள் என்கிற பொதுப்பெயர் பெண்பாலுக்காக பயன்படுத்தப் பட்டிருப்பதை படித்த போது மகிழ்ச்சியும், குற்றவுணர்வும் ஏற்பட்டது.
“ அம்மாவும் அப்பாவும் குழந்தையுமான ஒரு குடும்பத்தை
விபத்து நடத்திக் கொன்றாள் கடவுள்
அம்மா நல்லவளாகையால் வலப்புறமிருந்த
சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தாள்
அப்பா கெட்டவன் எனச்சொல்லி இடப்புற
நரகத்தில் தள்ளி விட்டாள்.
( கடவுளின் தூளி; ப.எண். 47)

ஒரு நாத்திக கவிக்கு கடவுளைப் பற்றிய புல்லரிப்பு ஒரு கணம் தோன்றி மறையுமானால் அவரின் கவிமனம் அதை பதிவு செய்யவே விருப்பும்/ விருப்ப வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இது கருத்தியலை தாரைவார்த்துக் கொடுப்பதாகாது. மாறாக மாற்றுக் கருத்தியலுடனான உபயோகமான உரையாடலேயாகும். ஒற்றைக்கருத்தியலின் ”ஸமத்தான” மாணவனாக இருக்க கவிதை ஒரு போதும் சம்மதிப்பதில்லை. அது சொல் பேச்சு கேளாதது. அடங்கா பிடாரி. இத் தொகுப்பிலும் கடவுளைப் பற்றி வெவ்வேறு மனோநிலைகளில் எழுதப் பட்ட கவிதைகள் பல உண்டு.
“ ஒரு மரத்தைக் கடவுளைத் தவிர வேறு எவராலும்
இவ்வளவு அழகாக அசைத்து விட முடியாது”
என்று பரவசம் கொள்ளும் நேசன் தான்,
“ கடவுள் பார்த்துக் கொள்வார்
நம்புகிறாயா
நம்புகிறாயா நீ ..”
என்று ஆங்காரமாக கேட்கிறார்.
பஞ்சாலைகள் அதிகம் இருக்கும் கோவை மாவட்ட பள்ளிகளில்
ஆசிரியர்கள் மாணவர்களை திட்டுவதற்காக “ ஒழுங்கா படிக்கல.. உங்கப்பன மாதிரியே பஞ்சு புடுங்க போகவேண்டியதுதான்..” என்று சொல்லிதான் திட்டுவார்கள். அடிக்கும் போது “ உங்கப்பன் அங்க பஞ்சுலெ கெடந்து சாகறான்.. நீ இங்க கூத்தடிக்கிறயா..” என்று சொல்லிதான் அடிப்பார்கள். ஆனால் எங்களால் வாத்தியார் சொல்வதை உணர்ந்து கொள்ளவே முடிந்ததில்லை. மேலும் அவர்களை கிண்டல் செய்யவும் இந்த வாக்கியங்களைத்தான் பயன்படுத்துவோம். ஒரு வழக்கமான அறிவுரையை நேசன் தன் நெஞ்சார்ந்து சொல்லலின் கவித்துவத்தால் நல்ல கவிதையாக மாற்றிக் காட்டிவிடுகிறார்.
“ இங்கு உன் அம்மா அவமானப்படுவதை
அறிகிறாயா நீ மகனே “ ( ப. எண். 56)

ஆனால் இந்த ”நெஞ்சார்ந்து சொல்லலை” நம்பி எழுதப்பட்ட சில கவிதைகள் தோல்வி அடைந்திருக்கின்றன என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு இந்த கவிதை பிடிக்காமல் இதே வகைமையின் வேறோரு கவிதை பிடித்துப் போகலாம்.எப்படியாயினும் நெஞ்சார்ந்து சொல்லுதலின் மூலம் நாம் கவிதையை நெருங்குகிறோம் என்பதை இவ்வகை கவிதைகள் உறுதி செய்கின்றன.
நான் யார் ? எங்கிருந்து இங்கு வந்து சேர்ந்தேன் ? இங்கெனக்கு என்ன வேலை ? எங்கு செல்லப் போகிறேன் ? என்பன போன்ற கேள்விகள் அதர பழசானவை என்றாலும் நாம் இன்னும் தெளிவாக பதில் அளிக்காததால் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றன. நேசனுக்கும் இந்தக் கேள்வி வருகிறது. இப்படியான தத்துவார்தமான ஆன்மீகத் தேடல்களை அவரிடம் நிறைய காணமுடிகிறது. அவர் ஏரியிலும், மலையிலும் இதைத் தான் தேடுகிறாறோ என்னவோ ? இந்தக் கேள்விகளோடோ இருக்கும் ஒரு மனம் இவ்வகைக் கவிதைகளை ரசிப்பது போலவே, இந்தக் கேள்விகளை உதாசீனப் படுத்திவிட்டு நகர்ந்துவிட்ட ஒரு மனம் இவ்வகை கவிதைகளால் எரிச்சலடையவும் கூடும். புனைவின் கட்டற்ற சுதந்தரத்தில் பாலத்திலிருந்து வானில் செங்குத்தாக பாயும் “ ஏழு பெட்டி ரயில் ” என்கிற கவிதை திடீரென
“ ஓடிக்கொண்டிருக்கும் அந்த ரயில்
பார்த்துக் கொண்டிருக்கும் உனக்குள் நுழைந்து
ஏழுமலை
ஏழு கடல் கடந்து
ஏழ்பிறவிக்கு பின்
எனக்குள் வந்து நிற்கிறது “
என்று முடிகையில் நாம் நமது தத்துவத்தின் மண்டையைச் சொரிந்து கொள்கிறோம்.
பொறுப்புணர்வுக்கும் கவிமனத்திற்ககும் ஏன் இவ்வளவு காததூரமென்று தெரியவில்லை. எல்லா கவிகளும் குழந்தமையை நோக்கி ஓடுவது பொறுப்பற்றிருத்தலில் திளைத்திருக்கத் தானா? நம் அப்பாக்கள் தாங்கவொண்ணாத சுமையை சுமந்து கொண்டு இறக்கி வைக்க ஆளின்றித் தவிக்கிறார்கள்.அதனால் தான் அவர்கள் ஒரு மருத்துவரையோ, மென்பொருள் வல்லுனரையோ பெற்றெடுக்கிறார்கள்.( களைத்து வீடு திரும்பும் குழந்தைகளின் /அடையாள அட்டையை கழற்றுகையில் / குழந்தைகளின் கழுத்தில்/ ஸ்டெத் வளர்ந்து வருகிறதாவென பதற்றத்தோடு தடவிப்பார்கிறார்கள் – ”தப்புகிறவன் குறித்த பாடல்” : லிபிஆரண்யா )
நேசனின் கவிதையில் வருகிற ஒரு அப்பா மனைவியின் கருப்பையின் உள்ளேயே ஒரு பள்ளியை கட்டி விட முடியுமா என்று தீவிரமாக யோசிக்கிறார். இன்னொரு அப்பா இந்த மோசமான தொடர் ஓட்டத்தில் மகனிடம் குச்சியைக் கொடுத்து விட்டு மூச்சிரைப்பிலிருந்து விடுதலையாகும் தருணத்திற்காக காத்திருக்கிறார்.
”உடலுறவு” “ கவிதை என்னளவில் ஒரு அசாத்தியமே. ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற வினோதமான படிமங்களின் அறிவார்ந்த சேர்க்கை என்பது போல தோன்றுகின்ற இக் கவிதை, மறுவாசிப்புகளில் திறந்து காட்டும் வெளி நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது. ஒரு கவிதை வாசகன் கவிதை என்கிற வஸ்துவுடன் தொடர்பில் இருப்பதற்காக சந்தோசப் பட்டுக் கொள்ளும் கவிதை ஒன்றை நேசன் எழுதி விட்டார்.

எல்லா காலத்திலும் கவிதையில் ஒரு பொதுக்குரல் இருந்து வந்திருக்கிறது. அதற்காக அதை போலச்செய்தல் என்று சொல்லி விட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பல்வேறு வரலாற்று, அரசியல் காரணங்கள் இருக்கலாம். நேசனின் கவிதைகள் இன்றைய பொதுக்குரலுக்குள் வருகிற அதே சமயத்தில்,அதன் ஆன்மீக தத்துவ பரவசங்களால் தனிக்குரலாகவும் ஒலிக்கிறது. ஏரியே அவனாகி, அவனே ஏரியாகும் கவிதைகளை ஒரு புதுத்தலைமுறைக் கவிஞன் எழுதும் வாய்ப்பு குறைவே. அந்த மனம் முழுக்க சிதறடிக்கப்பட்டு விட்டது. ஒரு புள்ளியில் ஊன்றித் திளைத்து காணும் பேரானந்தம் அதற்கு அனுபவமாவதில்லை. அது அன்றாடத்தின் ஆயிரம் கண்ணிகளில் சிக்குண்டிருக்கிறது. எனவே ஆன்மீக உள்ளொளிப் பாய்ச்சல்களுக்கெல்லாம் அதனால் முகம் கொடுக்க முடிவதில்லை போலும். ஆனால் வெவ்வேறு வகையான மனிதர்களும் வெவ்வேறு வகையான மனங்களும் வாழும் இந்த வாழ்வில் எல்லா வகையான கவிதைகளுக்கும் இடம் இருக்கவே செய்கிறது.

- -இசை-