Wednesday 30 November 2011

பாலசுப்ரமணியம் கவிதை


இந்த இரவில் விழித்திருந்து
இரவின் கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

முத்தமிட்ட இதழ்கள்
ஒற்றை மர உதிரும் மஞ்சள் நிற இலைகள்
மயக்கமூட்டும் மதுக்குடுவையின் மூடிகள்
காணவே காண முடியாத
தூரக் கிணறுகளின் ஆழ மீன்கள்
மற்றும்
என் நண்பர்கள் தங்கள் மனைவிகளோடு
உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன்

இந்த மழைக்காலத்தில்
வெய்யில் எவ்வளவு விருப்பமானதோ
அப்படித்தான்
எனக்கும் இரவின் கண்களைப் பார்ப்பதும்
ஆனாலும் பெரியதொரு குற்றச்சாட்டோடு

அப்போதுதான்
நான் கண்ணீர் நிரம்பிய மெத்தைகளில்
புரண்டு படுக்கிறேன்.

Monday 28 November 2011

மன்னவன் வந்தானடி தோழி !





சென்ற மாத்தின் ஒரு நள்ளிரவில்
நாச்சிமுத்து கொலைகாரனானார்.
நம்மை போல் தான் அவரும்.
கொலைசெய்வது பற்றியெல்லாம் நினைத்து கூட பார்த்தவரில்லை.
ஆனால் நம்மைபோலில்லை நாச்சிமுத்து
அவர் ஒரு கொலை செய்தார்.
“ நடிப்பிசை கதைக்கடலான” அவரைக் கொண்டு போய்
சிறையின் கும்மிருட்டுள் வீசினார்கள்.
அங்கு பத்மினியின்றி அவர் தனிமையில் வாடினார்.
திருட்டுத்தனமாக பாட்டு கேட்ட குற்றத்திற்காக
இரண்டு முறை பிடரியில் உதை வாங்கினார்.
மெய்மறந்து பாடிய சத்தத்தில் முன்பல் போனது.
அனேக இரவுகளில் அவர் அழுதுகொண்டிருந்தார்.
இன்று அதிகாலை கடன் கழிக்க கழிவறை சென்ற நாச்சிமுத்துவுக்கு
வெளியே வருகையில் ஒரு அம்சமான மீசை இருந்தது.
மார்பெங்கும் இரத்தினங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
தலையில் ராஜகீரிடம்...
அப்போது யாரோ இருவர் கொம்பூதி முழக்கினர்.
பொற்சரிகை பூண்ட அரையாடை துவள
அவர் நடந்து வருகையில்
பிண்ணனியில் ஒலித்தன ஜதியும் பாட்டும்.
தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த மன்னவன்
வரும் வழியெங்கும் கைகூப்பி எழுந்து நின்ற மரங்களை
கை அமர்த்தி அமரச் சொன்னார்.
அவை அமர்ந்து கொண்டன.

Saturday 12 November 2011

சென்னை என்றால்...

சென்னையில் தான் பெரிய ரயில்நிலையம் இருக்கிறது
சென்னையில் தான் எத்தனையோ விமானங்கள்
இறங்குகின்றன ஏறுகின்றன
சென்னையில் தான் முதலமைச்சர் இருக்கிறார்
சென்னைக்குள் தான் கோடம்பாக்கம் இருக்கிறது
சென்னையில் உயர்நீதிமன்றம் இருக்கிறது
சென்னை தான் எல்லா ஊர்களுக்கும் தலையாக இருக்கிறது
சென்னையில் எத்தனையோ பெரிய பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன
சென்னையில் தான் எத்தனையோ பெரிய மனிதர்கள் வாழ்கிறார்கள்
சென்னையில் வங்களா விரிகுடா அலையடிக்கிறது
உள்ளே சடைதிரண்ட ஒருவன்
“ சென்னைக்கு மாநிறம்..
அலைகுழல்..
அது வெறும் ஐந்தடி ஆறங்குலம்..”
என்று சொல்லி சிரிக்கிறான்.. அழுகிறான்.