Skip to main content

Posts

Showing posts from August, 2012

ஒரு கழிவிரக்க கவிதை

ஒரு கழிவிரக்க கவிதை கண்ணை கசிக்கிக் கொண்டு என் முன்னே வந்து நிற்கிறது அதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம் ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை கண்டாலே எரிச்சலெனக்கு. “ போய்த்தொலை சனியனே.. கண்ணெதிரே இருக்காதே..” கடுஞ்சொல்லால் விரட்டினேன். காலைத் தூக்கிக் கொண்டு உதைக்கப் போனேன். அது தெருமுக்கில் நின்றுகொண்டு ஒருமுறை திரும்பிப் பார்த்தது நான் ஓடோடிப் போய் கட்டிக்கொண்டேன்.

லூஸ்ஹேருக்கு மயங்குதல் அல்லது காமம் செப்பாது கண்டது மொழிதல்

நான் எளியனில் எளியன். லூஸ்ஹேருக்கு      மயங்குபவன். மனம் போன போக்கில் தான் போகிறேன் மனம் போகிறது அதனால் போகிறேன். லூஸ்ஹேரில்   பரலூஸ்ஹேர் என்றொன்றில்லை. என் உடலொரு கருவண்டுக் கூட்டம். ஒவ்வொரு லூஸ்ஹேரின் பின்னும் ஒரு வண்டு பறக்கிறது. எப்போதும் என் முன்னே ஒரு சுழித்தோடும் காட்டாறு. காட்டாற்றைக் கடக்க உதவும் ஆல்விழுதே… உன்னை சிக்கெனப் பற்றினேன். எனக்குத் தெரியும். லூஸ்ஹேரை மயிரென்றெழுதி கெக்கலித்த ஓர் அறிவிலி கடைசியில் அதிலேயே தூக்கிட்டு மாண்டகதை. ஈரும் பேனும் நாறும் இடமென தவநெறி முனிந்தால், லூஸ்ஹேரின் நுனியில் தொங்கிச் சொட்டும் துளிநீரில் இவ்வுலகு உய்கிறது என்பேன் .                                        ( யாத்ராவிற்கு )

க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்

நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு பந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன் எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார் அணித்தலைவர் ஓடிவந்து பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று மறுபடியும் வலப்பக்கம் சுழன்று விழுமாறு வீசச்சொன்னார் நான் அவரது முகத்தையே பார்த்தேன் அவர் திரும்பி ஓடிவிட்டார் எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார் அவரின் சடாமுடி ருத்ரதாண்டவனை குறித்து நிற்கிறது அடேய் சுடலையப்பா…. இந்த பந்தை வானத்திற்கு அடி… திரும்பி வரவே வராத படிக்கு வானத்திற்கு அடி.