Skip to main content

Posts

Showing posts from March, 2018

இச்சாசக்தி

                            எனில், அந்த ராத்திரியில் நான் பக்கத்தில் இல்லாததுதான் பிழையா ? என்று கத்தினான். கண்களைத் தாழ்த்தியவாறு , " அப்படித்தான் நினைக்கிறேன்" என்றாள். அப்போது காவியங்கள் வெடித்துச்  சிதறும் பலத்த சத்தத்தைக் கேட்டான்.

அங்கிளுக்கு அஞ்சேல் !

                  40- ல் நிற்கும் போது ஒரு தூணையோ, கம்பியையோ  பிடித்துக் கொண்டு நிற்பது நல்லதென்று  ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டிருந்தும் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டேன். காலடியில் திறந்து விட்டது அங்கிளின் பாதாளம் எனினும் நாற்பதில்தான் வாழ்வு துவங்குவதாக  மேற்குலகு சொல்கிறது மேற்கோ, கிழக்கோ என்னைக் குஷிப்படுத்தும் படி யார் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுள் லேட்டாக வருபவரே ஒழிய,  வராமலேயே போய் விடுபவர் அல்ல நான் இன்னும் நம்புகிறேன் என் மீசைக்குள் கிடந்து அதிலொரு நரையை வளைத்து வைத்து முதிராத் திங்களென கொஞ்சும் ஒருத்தியை.

KIT- KAT

              அப்பா சாமியிடம் போய் விட்டதாக அவளும் நம்பத் துவங்கிவிட்டாள் தினமும் பார்ப்பேன் இதுவரை  ஒரு பேச்சும் பேசியதில்லை. அப்பாக்களைச்  சாமிக்குக் கொடுத்த குழந்தைகளின் பால் இரக்கம் சுரப்பது இயல்புதானே?  உள்ளதிலேயே பெரிய கிட்-கேட்டாகப் பார்த்து வாங்கிப் போனேன் இன்று. " அப்பனுக்குப் பதிலாக கிட் - கேட்டை நீட்டும்     இவனை   என்ன செய்தால் தகும் ?"    நரகத்தின் வாயிலில் யாரோ சீறக் கேட்டு      பதறி எழுந்தேன் நள்ளிரவில்

முருகேஷின் வாரம்

                புறவழிச்சாலையின்  சிடுக்கான சந்திப்பொன்றில் கோர விபத்து வாகனங்கள் உருக்குலைந்து 9 பேர் அங்கேயே இறந்து   விட்டனர் 4 பேர் உறுப்புகள் துண்டான நிலையில் மருத்துவமனையில் கிடக்கிறார்கள். பெட்டிக்கடை முருகேஷ்தான் சம்பவத்திற்கான நேரடி சாட்சியம் அவனுக்கு சுவாரஸ்யத்தின் தொடைக்கறி சிக்கிவிட்டது அந்த வாரம் முழுக்க  அவன் அதை வைத்து வைத்து உண்டதைக் கண்டேன்.

கழுத

        " வாழ்க்க எப்படி இருக்கு " என்று கேட்டாள். " அது கிடக்கு கழுத " என்றேன். பிறகு அவளும் நானும் வாழ்க்கைக்கு வெளியே பல மணிநேரம்  பேசிக் கொண்டிருந்தோம் இதையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனொருவன் " வாழ்க்கடா" என்று காதில் கிசுகிசுத்து விட்டுப் போனான். அந்தத் தருணத்து மரத்தடியில் தோன்றிய ஞானம் என்னவெனில், வாழ்கைடா என்று வாழ்த்துப் பெறுவதற்கு ஒரே வழி வாழ்க்கைக்கு வெளியே பேசுவது.