Skip to main content

நிலையாமையின் ஜொலிஜொலிப்பு                                              
                      


  எல்லா ஆட்டமும் 40 வயது வரைதான். நாற்பதில் நரைத்தூதை அனுப்பி காலன் நம்மைக் கவர்ந்துகொள்வான் என்கிறது வளையாபதி. ஆனால் நாற்பதில்தான் நாய்க்குணம் துவங்குவதாகச் சொல்கிறது நம் நாட்டுப்புற மரபு. இந்த நாய்க் குணத்தை வாழ்வில் எரிச்சல் மிகுந்து குரைக்கத் துவங்கும் பருவம் என்று சொல்வதுண்டு. உடலிச்சை தணியாது நாய் போல் அலைந்து திரியும் காலம் என்றும் சொல்வதுண்டு. காமத்தின் வினோத ரூபங்கள் கதைகளில் சொல்வதைக் காட்டிலும் புதிரானவை.அச்சமூட்டக் கூடியவை. ஷகீலா படம் ஓடிய அரங்கிற்குள் காமம் கைத்தடியை ஊன்றியபடி நகர்ந்து , நகர்ந்து வந்ததை நான் கண்டிருக்கிறேன். சொன்னால், அய்யோ ! நீயா ? அங்கா? என்று கூப்பாடு போடுவீர்கள் என்றுதான் நான் எதையுமே சொல்வதில்லை. பாவம், அந்தச் சனியன் இந்த வயதிலாவது கிழவரை விடுவித்து விட்டிருக்கலாம். இளமை நிலையாததுதான். ஆனால், ஆசை நிலைத்தது போலும்.


 வலிக்காமல் ஒரு சாவு வந்துவிட்டால் தேவலை என்று அலுத்துக் கொள்கிற இந்த 40 வயதில் மட்டுமல்ல. வெற்றிகளின் கழுத்துரத்தம் காணத்துடித்த இருபதின் இளமையிலும் நிலையாமைப் பாடல்கள் என்னைப் பெரிதும் ஈர்த்திருக்கின்றன. ஆயிரம் பாடல்களுக்கு மத்தியிலும் அவை தனித்து ஜொலித்திருக்கின்றன. கன்னியரின் கடைக்கண் வீச்சு எப்படி மயக்கியதோ அது போன்றே, அதை நிந்தித்த பாடல்களும் மயக்கத்தில் தள்ளின. இந்த இடத்தில் வள்ளுவரின் பாடலொன்றை நினைவு கூரலாம். 
   
        கண் களவுகொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது “


  கள்ளத்தனமான அந்த சின்னஞ்சிறு பார்வை... அதுவே காமத்தில் பாதியை நிரப்பிவிடுகிறது என்று சொன்னாலே போதும். அதுவே பிரமாதம்தான். அதுவே வானத்தில் பறப்பதுதான். ஆனால் வள்ளுவன் வானத்திற்கும் அப்பால், மேலும் ஒரு  டைவ் அடித்து “ செம்பாகம் அன்று பெரிது “ என்கிறான். அதாவது அது செம்பாதியிலும் அதிகம் என்கிறான். தெய்வப்புலவனையே இவ்வளவு சீரழிக்குமெனில்,  சாதாக்கவிஞன் எவ்வளவு இரங்கத்தக்கவன்?


  இந்தக் குறள் எனக்கு மிகவும் பிடித்தது போலவே, இதற்கு எதிர் நிற்கும் நாலடியாரின் பாடல் ஒன்றும் மிகப் பிடித்தமானது.

  பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
  கனியுதிர்ந்து வீழ்ந்தற்று இளமை – நனிபெரிதும்
  வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
  கோற்கண்ணள் ஆகும் குனிந்து.

    வேற்கண்ணள் என்று இளம் பருவத்தே கொஞ்சப்படும் எல்லா அழகியரும், ஒரு நாள் கோலையே கண்ணாக ஊன்றி நடக்க நேரும் கிழப்பருவம் அடைவது உறுதி என்கிறது பாடல். நாலடியாரின் நிலையாமைப் பாடல்கள் குலையச்சம் தருபவை. ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தை “ செத்தாரைச் சாவார் சுமந்து “ என்று அசால்டாகச் சொல்லி விடுகிறது அது. எனவே அதை பெருஞ்செல்வர்கள், ஆணழகர்கள், பேரழிகிகள் தவிர்ப்பது நல்லது. ஆனால் அவர்களுக்காகத்தான் அவை எழுதி வைக்கப்பட்டுள்ளன.


  நிலையாமைப் பாடல்கள் மறுக்கவே முடியாத உலக உண்மைகளைப் பேசுகின்றன. அவை பல்லாயிரத்தாண்டு மகிழ்வுற்றிருக்க விழையும் மனித மனத்தை அச்சுறுத்துகின்றன. இந்த அச்சவுணர்வு ஒரு வித விலகலையும், ஈர்ப்பையும் ஒரு சேர வழங்குகிறது.


   நமது சங்க அகப்பாடல்கள் காதலில் மூழ்கித்திளைப்பவை.அதற்கு நிலையாமை  ஒரு பொருட்டல்ல. ஆனால் புறநானூற்றில் அரிதாக சில பாடல்களைக் காண முடிகிறது. “ செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்போம் எனினே தப்புந பலவே “ என்று   தெளிவாகச் சொல்லிவிடுகிறது.

 இன்னொரு பாடல் என் பள்ளிப்பருவத்தில் பயமுறுத்தியது..

         “ ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
       ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
     புணர்ந்தோர் பூ அணி அணியப் பிரிந்தோர்
     பைதல்  உண்கண் பனிவார்பு உறைப்பப்
     படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
     இன்னாது அம்ம இவ்வுலகம்
     இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே.
              ( நெய்தல் - சாப்பறை )

ஒரு வீட்டில் சாப்பறை கேட்கிறது. இன்னொரு வீட்டில் முழவின் மங்கல வாத்தியம் இசைப்படுகிறது. தலைவனை கூடி மகிழ்ந்த மகளிர் இன்பத்தின் பூவைச் சூடிக் கொள்ள, தலைவனைப் பிரிந்து துயருற்றிருக்கும் பெண்களின் கண்களோ வருந்தி அழுகின்றன. இப்படி இரண்டையும் அருகருகே நிகழ வைக்கிற, ஒன்றையொன்று காணவைக்கிற பண்பற்றவன் நம்மைப் படைத்தவன். எனவே இன்னாதது இவ்வுலகு. அதன் இயல்புணர்ந்து இனிய காணப் பழகவேண்டும்.


  பெருந்தனக்காரர்களை ஒரு திருடன் மிரட்டுவது போன்றே, ஒரு புரட்சிக்காரன் மிரட்டுவது போன்றே, நிலையாமையும் மிரட்டுகிறது. சகடம் உருள்வது போல செல்வமும்  மனிதர் கைமாறிச் சுற்றும் என்று எச்சரிக்கிறது. நிலையாமைக்கும் புரட்சிக்குமிடையேயான இந்த கள்ளஉறவு சுவாரஸ்யமானது. “கயமை “ அதிகாரத்தில் ஒரு குறள் உண்டு..

  “ ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.

 பசித்தோர்க்கு ஈரக்கையைக் கூட உதறாத கயவர்கள், தாடையில் இரண்டு போடு போட்டால் தானாகவே தருவார்கள் என்கிறார் வள்ளுவர். நிலையாமை தாடையில் அல்ல , நெஞ்சத்தில் அறைய முயல்கிறது.
  
  எல்லா ஊரிலும் ஆலமரத்தடியில் அமர்ந்து நாய்க்கரம் ஆடிக்கொண்டிருக்கும் கூட்டம் ஒன்று இருக்கும். அவர்கள் ஆலமரத்திலிருந்து எழுந்து சாப்பாட்டுச் சட்டிக்குச் செல்வர். சாப்பாட்டுச் சட்டியிலிருந்து எழுந்து ஆலமரத்திற்கு வருவர். அவர்க் கடன் பணியற்றிருப்பதே. சும்மா இருக்கும் சுகத்தில் திளைப்பவர் அவர்கள். எங்கள் ஊரில் இப்படியான ஒரு நடுவயதுக்காரர் இருந்தார். சுவாரஸ்யமானவர். 
 யாக்கை நிலையாமைக்கு ஒன்று, செல்வம் நிலையாமைக்கு ஒன்று என இரண்டு   சித்தர் பாடல்களை நல்ல ராகத்தில் அடிக்கடி பாடுவார். ஏன் அப்படிப் பாடினார்  என்பது பள்ளிப்பருவத்தில் விளங்கவில்லை. இப்போது புரிவது போலத் தெரிகிறது. எப்படியான மனிதனுக்கும் தன் செயல்களுக்கு பின்னே இருக்கும் நியாயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. வலுவான தத்துவப் பின்புலம் மட்டும் சிக்கிவிட்டால் போதும் எவ்வளவு தியாகமும் பண்ணலாம் ... எத்தனை கொலைகளும் செய்யலாம்.
 நிலையாமையின் ஒரு முனை மனச்சோர்வோடும், ஊக்கமின்மையோடும் பிணைந்திருப்பது போலத் தோன்றினாலும், அதன் மறுமுனை சமதர்மத்தில் கட்டப்பட்டிருக்கிறது. “ யாதும் ஊரே ; யாவரும் கேளிர் “ என்கிற தமிழின் பெருமை மிகு வரி, “ நீர் வழிப்படும் புணை போல்,  ஆருயிர் முறை வழிப்படும்..என்கிற நிலையாமையின் நிழல் தோய்ந்த வரிகளின் மேல் காலூன்றியே நிற்கிறது.


  நமது காப்பியங்களும் நிலையாமையை வலியுறுத்திப் பேசவே செய்கின்றன. “ ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் “ என்கிறது சிலப்பதிகாரம். மணிமேகலை பேசும்  யாக்கை நிலையாமை இது ...

     வினையின் வந்தது / வினைக்கு விளைவு ஆயது
   புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
   மூப்பு , விளிவு உடையது / தீப்பிணி இருக்கை
   பற்றின் பற்றிடம்/ குற்றக் கொள்கலம்
   புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை
   அவலம், கவலை, கையாறு ,அழுங்கல்
   தவலா உள்ளம் தன்பால் உடையது
   மக்கள் யாக்கை இது என உணர்ந்து...

 ( புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை – புற்றில் துஞ்சும் அரவம் போல , சினம் துஞ்சும் இடம் இவ்வுடம்பு )
சுடுகாட்டுச் சித்திரமொன்று...

 யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
 தவத்துறை மாக்கள்,  மிகப் பெருஞ்செல்வர்
 ஈற்றிளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான், இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப
இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் களியாட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?

   பரந்து பாழ்பட்டிருக்கிற இச்சுடுகாட்டில் தவமுனிவர்,  பெருஞ்செல்வர், பிரசவித்த தாய்மார், அறியாப் பாலகர், முதியோர், இளையோர் என அனைவரும் எவ்வித இரக்கமோ, பேதமோ இன்றி எமனால் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். அழலின் வாயானது இப்படி எல்லோரையும் தின்பதை அறிந்திருந்தும் செல்வக் களியாட்டுகளில் மூழ்கித் திளைக்கும் மக்களைக் காட்டிலும் மடையர்கள் உண்டோ? என்று கேட்கிறது மணிமேகலை.


 தன் மேல் காதல் மிக்கு வந்த உதயகுமரனுக்கு, அருகிலிருக்கும் மூதாட்டியைக் காட்டி “ இளமை நிலையாமை “ யை உணர்த்த முயல்கிறாள் மணிமேகலை. முப்பது வரிகளுக்கு நீள்கிறது இப்பகுதி. இளமையில் மின்னிச் ஜொலித்த ஒவ்வொரு அங்கமும் இன்று எப்படி அழுகி நாறுகிறது பார் என்று விளக்கிச் சொல்கிறாள்.

  “ பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
    தூசினும் அணியினும் தொல்லோர்  வகுத்த
    வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் ! “ 

           ... என்று நல்லறிவு புகட்ட முயல்கிறாள். பூக்களாலும், சந்தனக் கலவையாலும் புலால் நாற்றத்தை நீக்கி , ஆடைகளாலும், அணிகலன்களாலும் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் வஞ்சம் இந்த யாக்கை என்கிறாள். ‘ பார்த்தாயா, முதுமையின் கோலத்தை! ‘  என்று கேட்கிறாள் மேகலை. நானாக இருந்திருந்தால் “ அதனால்தான் சொல்கிறேன் அன்பே , இளமையிருக்கும் போதே இனித்துக் கிடப்போம் வா..என்று அழைத்திருப்பேன். உதயகுமரன் அப்படிச் சொல்லவில்லை. அல்லது சாத்தனார் அப்படிச் சொல்ல விடவில்லை.


                                     
            இளமை நிலையில்லாதது எனில்,  “ பருவத்தே பயிர் செய் “ என்று சொல்லலாம். ஆனால் துறவு பேசும் நம் இலக்கியங்கள் அப்படிச் சொல்வதில்லை. இளமை எங்கே சென்று விடப் போகிறது ? என்கிற மெத்தனத்தில் அதன் இன்பங்களை தவறவிட்டோர் பட்டியல் நெடியது. இப்படித்தான் என் முப்பதின் ஒரு நாளில் பெட்டிக்கடை மறைப்பில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். நிமிர்ந்து பார்த்தால் நாற்பது வந்துவிட்டது.  “அந்திமம் “ என்கிற ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று எப்போது படித்தாலும் கண்ணீர் பெருக வைப்பது..

                          அந்திமம்

           பூ உதிர்ந்த முல்லைக் காம்பாய்
           மரம் பட்ட சாலைக் கென்னை
           அனுப்பு முன்
           பேரைக் கொஞ்சம்
           சோதித்துப் பாருங்கள் ஸார்.

  புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு.. பாடியது தொடித்தலை விழுத்தண்டினார். தன்  இளமைக் காலத்து இனிய நினைவுகளை எண்ணி வருந்தும் ஒரு முதியவரைப் பற்றிய பாடல் அது. அதில் முதுமையின் துயரத்தை குறிக்க ஒரு சொற்றொடரை ஏவுகிறார் புலவர். சரியாகச் சென்று இதயத்தை தைக்கிறது அது.. “ இருமிடை மிடைந்த சில சொல் “... அதாவது ஓயாது வருத்தும் இருமல்களுக்கிடையே எப்போதாவது பேச வாய்க்கும் சில சொற்களை உடையதாம் முதுமை.

  பக்தியிலக்கியப் பாடல்களும் ஊனுடலை வெறுத்து பற்றுகள் நீங்கி கடவுளை அடைய இறைஞ்சி நிற்கின்றன.

   பொத்தை ஊன்சுவர் புழுப் பொதிந்துளுத்து அசும்பொழுகிய பொய்க்கூரை
   இத்தை மெய்யெனக் கருதி நின்று இடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை
   முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
   அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டோமே.

     பொத்து புழுப்பொதிந்து உளுத்து ஒழுகும் இயல்புடைய உடல் ஒரு பொய்க் கூரை. அதை மெய்யென்று எண்ணி இடர்க்கடலின் சுழியில் சிக்கித் தவிக்கும் என்னையும் சோதிமயமான என் அப்பன் தன் அடியரோடு சேர்த்து அருளிய அதிசயத்தைக் கண்டோம்

                  என்கிறார் மாணிக்கவாசகர்.

   உயிர்குலம் மொத்தமும் மயங்கிக் கிடக்கும் இடத்தை “ மலமுடை ஊத்தை “ என்று பழிக்கத் துணிகிறார் பெரியாழ்வார்.

       மலமுடை யூத்தையில் தோன்றிற்றோர் மலவூத்தையை
  மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை
  குலமுடைக் கோவிந்தா! கோவிந்தா ! என்றழைத்தக்கால்
  நலமுடை நாரணன் தம்மன்னை நரகம்புகாள்.

  மலமுடைய ஊத்தைக்குழி வழியே வந்து பிறந்த குழந்தைக்கு, இன்னொரு ஊத்தைக்குழியில் இருந்து வந்த அற்ப மானிடர்களின் நாமத்தை  சூட்டக்கூடாதாம்.  கோவிந்த நாமமே உகந்ததாம். அப்படி நாராயண நாமம் சூட்டிய அன்னையர் யாரும் நரகம் புகுவதில்லை என்கிறார்.

  சித்தர் பாடல்களைப் படித்தால் பொதுவாக கிளுகிளுப்புக் குறைய வேண்டும். கூடுகிறது என்று ஒருவன் சொன்னால் அவனை எதில் கட்டிவைத்து எதனால் விளாசுவது?

   முள்ளும் கல்லும் முயன்று நடக்கும் 
   உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும் ..
 என்று துவங்கும் பட்டினத்தாரின் வரிகள் பிரசித்தமானவை. அதையடுத்து வரும் வரி

“ வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால்
  துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும் “  என்கிறது
               
            கணைக்காலை வரால் என்று எண்ணலாகாது என்கிறார் அடிகள். நானோ அதையே எண்ணி எண்ணி அழிந்தேன்.

  “ கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்
   அச்சமில்லை ! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே.. “

  என்பது பாரதி வாக்கு. பாரதி பரவாயில்லை. இன்னொருவர் முகப்பருவிற்கெல்லாம் அஞ்சியிருக்கிறார். முகப்பரு காமத்தைக் கிளர்த்தும் என்பது 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முளைவிடத் துவங்கி ,  21 ஆம் நூற்றாண்டில்  “ மலர் டீச்சரின் வருகைக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட ஒரு சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.ஆனால் 9 – ஆம் நூற்றாண்டிலேயே ஒருவர்  வஞ்சியர் முகப்பருவைக் கண்டு அஞ்சி நடுங்கியிருக்கிறார். அவர் மாணிக்கவாசகர்..ஸ்வாமி, தைரியமாக இருக்க வேண்டும்.. இதற்கெல்லாம் பயந்தால் எப்படி? 

“ ......   ஒருத்தி வாய் துடித்த வாறும்
துகிலிறையே சோர்ந்த வாறும் , முகங்குறுவேர் பொடித்தவாறும்
இவை உணர்ந்து கேடு என்றெனக்கே சூழ்ந்தேனே

      இதழ்கள் துடிப்பதைக் கண்டும், துகில் நெகிழ்ந்து விலகுவது கண்டும், முகத்தில் குறுவேர் அரும்பி நிற்கும் அழகு கண்டும் மயங்கிய என்னை கேடு  சூழ்ந்து கொண்டது என்கிறார்.

     ஒரு சுவாரஸ்யமான கதை.. பத்திரகிரியார் ஒரு அரசர்.அவர் பட்டினத்தடிகளின் திருச்செய்கைகளைக் கண்டு,  நிலையாமையை உணர்ந்து, அரசாட்சியைத் துறந்து துறவு மேற்கொள்ளத் துணிகிறார்.வெறும் ஓட்டைக் கையில் ஏந்தி,  பிச்சை ஏற்று தன் குருவான பட்டினத்தாருக்கு அளித்து, தானும் உண்டு வாழ்ந்து வருகிறார். ஒருநாள் குருவிற்கு உணவளித்துவிட்டு, தான் உண்ணத்துவங்கும் போது பசி மிகுதியால் நாயொன்று அவரைச் சுற்றி வருகிறது. அதற்கும் கொஞ்சம் உணவளிக்கிறார். அப்போதிருந்து நன்றியுணர்வால் பீடிக்கப்பட்ட அந்த நாய் அவரோடே தங்கி விடுகிறது .இந்நிலையில் ஒரு நாள் பட்டினத்தடிகளிடம் சென்று ஒரு துறவி பிச்சை கேட்கிறார். அவர்  என்னிடம் கோவணத்தைத் தவிர ஏதுமில்லையப்பா.. இப்படி மேற்குப் புறமாக சென்றீரென்றால், அங்கு ஒரு ஓடும், ஒரு நாயுமாக சம்சாரியொருவன் அமர்ந்திருப்பான் அவனிடம் சென்று கேளுங்கள்...என்று சொல்லி அனுப்புகிறார். அந்தத் துறவி பத்திரகிரியாரிடம் சென்று பட்டனத்தடிகள் சொல்லி அனுப்பியதைச் சொல்கிறார். இதைக் கேட்ட்தும் அதிர்ந்து போன பத்திரகிரியார் ஒரு ஓடும், ஒரு நாயும் இப்படி என்னை சம்சாரி ஆக்கிவிட்டதே “ என்று வருந்துகிறார். ஓட்டைத் தூக்கி வீச, அது நாயின் தலையில் விழுந்து நாய் செத்து விடுகிறது.ஓடும் உடைந்து விடுகிறது என்பதாகக் கதை முடிகிறது.


  இந்தக்கதை ஒரு ஓடும், ஒரு நாயும் இருந்தாலே அவனை சம்சாரி என்கிறது. இன்றைய சம்சாரிகளுக்கு என்னென்ன தேவையிருக்கிறது என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது. ஒவ்வொருவரும் தனிஊர், தனிநாடு, தனிகண்டம், என்கிற கற்பனையில் வாழ்கின்றனர். அநேகமாக அம்பானிகளுக்கு யாருக்கும் தெரியாமல் தனிக்கிரகம் இருந்தாலும் இருக்கும்.


  சித்தர் பாடல்கள் கொஞ்சமும் கருணையற்ற  கடுஞ்சொற்களால் நிலையாமை பேசுகின்றன. நம்மை அச்சத்தால் நிலைகுலையச் செய்கின்றன. அதிபயங்கரமான சொற்களால் கட்டியெழுப்பப்பட்டு ஒரு மல்லனைப் போல் எழுந்து நிற்கிறது அச்சம். அதனெதிரே அடங்கவே அடங்காத நம் ஆசை இன்னொரு மல்லனாகக் களம் இறங்குகிறது. ஆசை மல்லனும், அச்ச மல்லனும் கட்டிப்புரண்டு  போடும் யுத்தத்தின் முடிவில், ஆசை அச்சத்தைத் தூக்கி தன் தலைக்கு மேல் சுற்றி தூர எறிந்துவிடுகிறது. எனவே நமது இன்பத்திற்கு பங்கம் நேர்வதில்லை. ஞானத்திற்கும் பங்கம் நேர்வதில்லை.

 
  தனிப்பாடல் திரட்டின் சில பாடல்களில் “இளமை நிலையாமை “ பேசப் பட்டிருக்கிறது. தான் கட்டழகோடு, புத்தம் புதிதாய் இருக்கையில், தலைவனுக்கு  சுகமாய் இனித்ததையும், ஒரு பிள்ளை பெற்று கொஞ்சம் உடல் தளர்ந்ததும் கசந்து போனதையும் எண்ணி வருந்தும் தலைவியின் கூற்றுக்கள்  அப்பாடல்கள். இவ்வகையில் சுப்பிரதீபக் கவிராயரின் பாடல் ஒன்று எனக்குப் பிடித்தமானது..

         கச்சிருக்கும் போது கரும்பானேன் கைக்குழந்தை
         வச்சிருக்கும் போது மருந்தானேன் - நச்சிருக்கும் 
         கண்ணார் கரும்பானார் காணவும் நான் வேம்பானேன்.
         அண்ணாமலை அரசுக்கு.      

  தளராத கச்சணிந்து திமிர்த்த இளமையொடு திரிந்த காலத்தில் தலைவனுக்கு நான் கரும்பைப் போன்று இனித்தேன். ஒரு பிள்ளை பெற்று தளர்ந்து கைக்குழந்தையுடன் காணப்படும் இப்போதோ நான் கசக்கும் மருந்தாகிறேன். நச்சை கண்களில் தேக்கி வைத்திருக்கும் பரத்தையர் கரும்பாக, நான் வேம்பானேன்.

  முன்பு உனக்கு “உள்ளம் கைத் தேனானேன் இன்றோ  உள்ளம் கைத்தேன் உனக்கு நான் “ என்று வருந்துகிறாள் ஒரு தலைவி. இன்னொருத்தி “ பழையவரால் என்ன பயன் ? “ எனக் கேட்டு ஏங்குகிறாள்.

    “ காண்பதெல்லாம் மறையும் என்றால், மறைந்ததெல்லாம் காண்பம் அன்றோ ? என்று கேட்டவன் பாரதி. “பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும்: நமக்கேன் பொறுப்பு ? என்று தப்பித்துக் கொள்கிறான் அவன்
        
             மாதரோடு மயங்கிக் களித்தும்
               மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
          காதல் செய்தும் பெறும் பல இன்பம்
               கள்ளின் இன்பம், கலைகளின் இன்பம்
           பூதலத்தினை ஆள்வதின் இன்பம்
                 பொய்மை அல்ல இவ்வின்பங்கள் எல்லாம்
             யாதும் சக்தி இயல்பு எனக் கண்டோர்
              இனிய துய்ப்பர் இதயம் மகிழ்ந்தே

  என்று பாடி நம்மை நிம்மதி அடையச் செய்கிறான்

        
         “ யாதும் எங்கள் சிவன் திருக்கேளி 
          இன்பம் யாவும் அவனுடை இன்பம் "

என்கிற வரிகள் கஞ்சா இலைகளைத் துணிந்து நசுக்கப் போதுமானவை.

  சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி காலமானார். பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். “ ஸ்ரீ தேவிக்கெல்லாம் மூப்பே வராது என்று நினைத்திருந்தேன் ; சாவே வந்து விட்டது “ என்று மனுஷ்யபுத்திரன் எழுதினார். “ஸ்ரீ தேவி இன்றில்லை எனும் உலகு “ என்கிற கவிதையையும் எழுதினார். அவர் கமல் ரசிகர் என்கிற போர்வையில் போய், ஸ்ரீ தேவியைத்தான் அந்தப் படங்களில் கண்டு வந்திருக்கிறார் என்பதை அக்கவிதை நமக்குக் காட்டித்தந்தது. “ நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு..  என்கிற மகத்தான குறளின் மீது சாய்த்து வைத்து எழுதப்பட்ட கவிதையிது. எனக்கோ “ ஸ்ரீ தேவி இன்றில்லை எனும் குஷி “ என்று ஒரு எதிர்க்கவிதை எழுதத் தோன்றியது. ஏற்கனவே மாளத்துயரில் இருக்கும் அவரை மேற்கொண்டு வருத்த வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.


 உண்மையில் சாம்ராஜ்யங்கள் சரியும் போது, அரசியல் தலைகள் உருளும் போது, தங்கத்தாரகைகள் உதிரும் போது சாதாரண அற்ப மனத்தில் ஒருவித வினோத குஷி பிறக்கிறது. தாரகைகளும் ஒரு நாள் கருகி உதிர்ந்துவிடும் என்பதைக் காண்பதில் குடிசைகளின் அரிக்கேன் விளக்குகளுக்கு ஒரு சின்ன நிம்மதி இருக்கிறது. அந்த “அச்சச்சோ.. க்களுக்கு  பின்னே ஒரு “ ஆஹா “ ஒளிந்திருக்கவே செய்கிறது.


 நிலையாமையோடு உறவாடும் இரண்டு சமகாலக் கவிதைகளோடு கட்டுரையை நிறைவு செய்யலாம். கார்த்திக் நேத்தா வின் கவிதை ஒன்று..

            சும்மா இரு

அதுபற்றிக்
கவலை வேண்டாம்
அதில் உன் பங்கு
எதுவுமில்லை
கேள்
சும்மா இருந்தால்
ஞானம் தலைக்கேறும்
பிதற்றவோ பெருமை அடிக்கவோ
அருகதை இல்லை உனக்கு
நீ வாங்கவுமில்லை துவைக்கவுமில்லை
காயப் போடவுமில்லை
கொடிக்கயிற்றில் காயும் வெயிலை
எடுத்துப்போக இரவால் மட்டுமே முடியும்
சும்மா இருந்து ஞானமடைவதில்
உனக்கென்ன சிரமம்?

 இன்னொரு கவிதை குணா கந்தசாமியுடையது.. எளிய புறக்காட்சியின் பாவனையில் இருப்பது.. ஆனால் என்னளவில் 5 வரியாலான நீண்ட பெருமூச்சு..


            தனிமைப் பாலை

அந்திமக்கால ஒட்டகங்கள்
மூப்பின் துர்வாசனையோடு
காட்சிப்பொருளாய் நடக்கும்
நகரத்தின் சிமெண்ட் தெருக்களில்
மங்கைகள் இறகுப்பந்து விளையாடுகிறார்கள்

  எப்படியும் எனக்கு அந்திமம் வரும். எப்படியும் நான் ஒட்டகம் ஆவேன். எப்படியும் மருத்துவர் நடைப்பயிற்சி போகச் சொல்லி மிரட்டுவார். கூகுள் எவ்வளவோ வசதிகளை நமக்கு வழங்கி விட்டது.  இன்று மங்கைகள் எத்திசையில் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் “ என்று அறிந்து கொள்ளும் வசதியையும் என் அந்திமப் பருவத்திற்குள் அது எப்படியும் வழங்கி விடும். கொஞ்சம் காசையும், மிக்க நன்றியையும் அதற்கு காணிக்கையாக்கிவிட்டு அது சுட்டிய திசைக்கு எதிர்திசையில் அச்சமின்றி நடை பயில்வேன்.


                      நமது இலக்கியங்கள்  இம்மையில் செய்த வினைகளின் பயன் மறுமையில் விளையும் என்கின்றன. சிலம்பு இதை “ வினைவிளை காலம் “ என்கிறது. எனவே நம்மை அறம் செய்ய வலியுறுத்துகின்றன. புறநானூற்று பாடலொன்று இதை கடுமையாகச் சாடுகிறது. “ அறவிலை வணிகம் “ என்று இதைப் பழிக்கிறது. ஆம்..அறங்களை முதலீடு செய்து இன்பத்தை அறுவடை செய்து கொண்டால் அதற்குப் பெயர் வியாபாரம் தானே? சொர்க்கத்தில் துண்டு வீசி வைப்பதுதானே?  இப்படி வியாபாரமாக அல்ல, வாழ்வின் இயல்பான நெறியாகவே அறம் ஆற்ற வேண்டும் என்கிறது அப்பாடல். 21 ஆம் நூற்றாண்டுப் பிள்ளைகளான நம்மால் அவ்வளவு தூரம் குரலுயர்த்திக் கூவ முடியுமா என்பது தெரியவில்லை.ஆயினும் எண்ணெய்க் கொப்பரைகளுக்கு அஞ்சியேனும் அவ்வப்போது அறம் செய்து வைப்போம் நண்பர்களே !

  ( அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்திய “ பொன்மாலைப் பொழுது “ நிகழ்வில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் )


                        நன்றி : காலச்சுவடு : ஏப்ரல் - 2018 Comments

உத்தமவில்லன் அண்ணன் கவிஞர் இசை அவர்களுக்கு நன்றி - "டொண் டொண் " என்கிறது தங்கள் உரை

Popular posts from this blog

தெய்வாம்சம்

தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.

  வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிமை. தனிமையிலேயே நம்மை நாம் அதிகம் உணர்கிறோம். படத்தில் வாத்தியக் கலப்பற்று ஒலிக்க வ…

“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “

இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்..
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில  மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “  “சின்ன “ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான். கல்யாண்ஜியை பார்த்துவிட்டு வந்து பிறகு அவனிடன் சொன்னேன். “ நண்பா அந்தாளுகிட்ட கொஞ்சம் ஜாக்கிரையாத்தான் இருக்கனும் போல.. அவர் என்னை சத்யன் ன்னு கூப்டறார்டா.. “ ஏதோ ஒரு மந்திரவாதியைப் பற்றிய கதைகளைப் போல அவரைப் பற்றிப் பேசிக்கொண்டோம். என் அம்மா, அப்பா இருவரைத் தவிர  வேறு யாரும் என்னை சத்யன் என்று  அழைத்ததில்லை. இப்படியாக முதல் சந்திப்பிலேயே அவர் என்னை ’’திட்டமிட்டு உருக்கிவிட்டார்.   என்னை நானே உற்சாகமாக்கிக் கொள்வதற்காக வெளியிட்ட என் முதல் தொகுப்பை யாரும் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளங்கோ, சுகுமாரன் இருவர் வீட்டில் மட்டும் அது இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை கல்யாண்ஜி வீட்டிலும் அது இருக்கலாம். அப்போது அவரது நிலா பார்த்தல், வண்ணதாசன் கடிதங்கள் ஆகிய புத்தகங்களால் வசீகரிக்கப்ட்டிருந்தேன். புத்தகத்தோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அது அவரது மொழியிலேயே இருக்க வேண்…

ஊடுருவல்

சோமனூர் பஸ்  ஸ்டாண்டில்
கொய்யாப் பழம் விற்கும்
சமூக விரோதியிடம்
கிலோவுக்கு ஒன்று குறைவதாக
சண்டையிட்டுக் கொண்டிருந்தான்
நக்சல்.
தன் உடலெங்கும் அரியவகை மூலிகைகளால் ஆன தைல டப்பாக்களை தொங்க விட்டிருக்கும்
தேசவிரோத  சக்தி
நக்சலின் தோளைத் தொட்டு
வத்திப்பெட்டி கடன் கேட்டான்.
பெட்டி இருந்தது ஆனால் அதில் குச்சி இல்லை.
இருவருமாய்ச் சேர்ந்து
கடப்பாரை, மண் வெட்டி சகிதம்
14 பி க்கு காத்திருக்கும் தீவிரவாதியை அணுகினர்.
அவன் தானும் தீயின்றித்தான் தவிப்பதாகச் சொன்னான்.
 கழிப்பறை வாசலில்  அமர்ந்து கொண்டு
" ஆச்சா... சீக்கிரம் வா..."     "ஆச்சா...சீக்கிரம் வா"  என்று கத்திக் கொண்டிருந்தான்  விஷமி
அவனிடம் ஒரெயொரு குச்சி இருந்தது.
அந்த உரிமையில்
அவன் ஒரு பீடி  ஓசி கேட்டான்.
இப்படியாக
ஒரு நக்சல், ஒரு தேச விரோத சக்தி,  ஒரு தீவிரவாதி, ஒரு விஷமி
ஆகிய நால்வரும்
ஒரேயொரு குச்சியில்
4 பீடிகளைக் கொளுத்திக் கொண்டனர்.
அப்போது
இமயம் முதல் குமரி வரை
எங்கெங்கும் பற்றியெரிந்தது.