Skip to main content

Posts

Showing posts from July, 2019

முதல்கழுகு

ஈயும் எறும்பும் மொய்க்க நாற்றமெழுப்பிக் கிடக்கிறேன். அதிகாலையில் என்னைக் கண்ட முதல்மனிதன் ஆண்டாண்டு காலமாய்  நான் தூக்கிச் சுமந்த பெயரை அழித்துப் போட்டான். சின்னஞ்சிறு கொலைகளிலிருந்து என்னை விடுவித்துவிட்டமைக்காக அவனுக்கு என் நன்றி. நொடிக்கு நொடி என்னை அறுத்துக் கொண்டிருந்த அச்சத்தின் மீது ஏறிப் போயிருக்கிறது ரயில். எனில், இனி நான் ஏறப் போவது இரண்டாவது சொர்க்கரதம். உச்சிவானில் முதல் கழுகு உதித்து விட்டது. நாய்களின் மூளையில் திருவிழாக் கனவு தவறி என் நெஞ்சத்தை கொத்தி ஏக்கத்தை உண்டுவிட்ட காகமொன்று கொஞ்ச தூரத்தில் எரிந்து விழுகிறது.

காலன்

" காலத்தின் மீது கருஞ்சாந்தை அள்ளிப் பூசிக்கொள்ளவா? " எனக் கேட்டு ஒரு செய்தி அனுப்பினேன் சகிக்கு. வந்தபதில் வருமாறு... "அன்பே! திரும்பவும் கருக்க இயலாத படிக்கு நரைத்துவிட்டதுனக்கு. அது உன் வரிகளில் தெரிகிறது பார் ! "

நெறியர்

தினந்தவறாது ஒவ்வொரு அதிகாலையிலும் உளுந்து வடைகளுக்கெதிராய் பெரிய மைதானத்தில் ஐந்து வட்டங்கள் ஓடுபவர் தன் மருத்துவப் பரிசோதனை முடிவை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இருதயவால்வு ஒரு தனி உறுப்பு அதற்குக் காதுகளில்லை இதயமுமில்லை. அதன் முன்னே நீதியின் மணிநாவை ஆட்ட இயலாது. மண்டியிடவும் ஏலாது.

பூஞ்சோலையில் ஒரு காட்சி

ஒரே மகனை அவசர சிகிச்சைப்பிரிவுக்குள் அனுப்பி விட்டு தலைமேற் கைகூப்பி " கடவுளே..!" என்று மருத்துவரின் காலடியில் சரிகிறாள் அன்னை. வெளிறிய முகங்கொண்ட கடவுள் " கடவுளை நன்றாக வேண்டிக் கொள்.." என்கிறது.