Skip to main content

Posts

Showing posts from June, 2020

குளியல்

கா தலி  உங்கள் நண்பனோடு ஓடிப்போய்விட்டாள் என்பது நிச்சயமாக ஒரு பெரிய இடி அடுத்து அழகானதொரு வெறுமை பொழியும் அந்த இடியை சோப்புத் துண்டாக்கி நன்றாக குளித்து முடித்துவிட்டால் பிறகு நீங்கள் காலாற ஒரு மாலைநடை  போய்வரலாம்.

அபயம்

வீ ட்டிலிருந்து இதயங்களிலிருந்து அறிவிலிருந்து ஆலயங்களில் இருந்து போதைகளில் இருந்து பொருட்களிலிருந்து ஒளிந்து கொண்ட  ஒவ்வொன்றிலிருந்தும் ஓட ஓட விரட்டப்பட்டேன் தண்டவாளத்தில் ஒளிந்து கொள்ள அவ்வளவு பயம். ஒரு கவி செம்பருத்தியின் குழலைக்காட்டி " இதற்குள் இரு" என்கிறான். இவ்வளவு பெரிய நான் இதற்குள் ஒடுங்க இயலுமா? ஆனால் இது புதிதாக இருக்கிறது. இனிதாக இருக்கிறது. ஒளிந்து கொண்டது போலவே ஆகிவிட்டது.

ஊர் அடங்கு

எ ல் லாமும் மூடிக்கிடந்தன. எங்குதான் போவது? நல்லவேளையாக ஒரு ஏரி திறந்திருந்தது. எல்லாமும் இறுக மூடிக்கிடந்ததால் அவ்வளவு ஆழத்தில் திறந்திருந்தது அந்த ஏரி.

அயலான்

அ ண்டைவீட்டு மனிதன் பால்கனியில் கையில் அழகான காபி கோப்பையை ஏந்தியபடி ஷோக்காக அமர்ந்து கொண்டு ஒரு புத்தகத்துள் ஆழ்ந்திருந்தான். நான் அனிருத்தை இன்னும் கொஞ்சம் அலறவிட்டேன். அவன் முகந்திரிந்து கோணுவதைக் கண்டேன். கோணிய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி சட்டென மலர்ந்துவிட்டது. கைகள் ஆனந்தித்து தாளமிட்டன. இவ்வளவுதான் சத்தம் இதற்குமேல் திருகினால் குழாய் உடைந்துவிடும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நண்பனொருன் என் திருமணப்பரிசாக வழங்கிய அந்த தடித்த புத்தகத்தை எடுத்துவந்து ஆக்ரோஷமாக வாசிக்கத் துவங்கிவிட்டேன்.

நறுமணம்

அ ந்த செவ்வரளிக் கூட்டம் பாட்டிக்கு எட்டவில்லை. நடைப்பயிற்சியில் மூச்சிரைத்துக் கொண்டிருந்தவனை  நிறுத்தி உதவக் கோரினாள். நான் அதைப் பறிக்கப் பறிக்கவே சமர்ப்பித்து விட்டேன். பறிக்கப்பறிக்கவே வேண்டிக் கொண்டு விட்டேன். பறிக்கப் பறிக்கவே வேண்டியதைப் பெற்றுக் கொண்டேன். பாட்டிக்கு எட்டாத உயரத்தில் மலர்ந்த மலரே! பாட்டிக்கு எட்டாத உயரத்தில் மலர்ந்த மலரே!

பருவங்கண்டழிதல்

வ ழிப்போக்கன் ஒருவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு போனான் "கார் வருகிறது" திடுக்குற்ற இன்னொருவன் உள்ளதிலேயே வலுவான தடியைத் தேடி அங்குமிங்குமாய் ஓடுகிறான், தாவுகிறான். ..

வேட்டையில் ஒன்றும் சிக்காத வேங்கை

க டைசியில் அவமானங்களுக்கு நான் "ஐஸ்கிரீம்" என்று பெயர் சூட்டிவிட்டேன். இவ்வளவு பெரிய மோசடியை அவை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆத்திரம் தலைக்கேற பெருந்திடலில் ஒன்று கூடி "நாங்கள் அவமானங்கள்!" "நாங்கள் அவமானங்கள்! " என்று  காட்டுக் கத்தலாய் கத்துகின்றன நமட்டுச் சிரிப்பை ஒளித்தபடி “ஐஸ்க்ரீம்களே! “ஐஸ்கிரீம்களே! என்று  கூவி   அழைத்தேன்.