Skip to main content

Posts

Showing posts from September, 2020

இரங்கற்பா

உ ன் மது செத்துவிட்டது நீதான் அதனைக் கொன்றாய் கத்தியால் அடிவயிற்றில் ஓங்கி ஓங்கிக் குத்தினாய். உன் மது விறைத்துக் கிடக்கிறது. உயர்ரகத்து மூலப்பொருட்கள்.. துல்லியமான கலவை.. விண்ணையே சமைக்கும் விற்பன்னர்.. ஆயினும் மதுவை அங்கு காணவில்லை. உன் நடனம் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது போல அதுவும் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது.

இளவரசி

  நூ று இளைஞர்கள் தன் பின்னால் ஓடி வரும் கனவொன்று அடிக்கடி வரும். அவளைக் கிறங்கடிக்கும் கனவது. யவனத்தின் மதர்ப்பில் செழித்திருந்த காலத்தே மூக்கு நுனியில் விழுந்தது முதல் வெண் பொட்டு. பிறகது தீயைப் போல உடலெங்கும் பரவியது. இளைஞர்களைப் போன்றே நாய்களையும் பிடிக்கும் அவளுக்கு. "நாய்களோடு வாழ்ந்து கொள்கிறேன்" என்றவள் துள்ளி எழுந்த போது நச்சரவமொன்று அவள் படுக்கையிலிருந்து இறங்கி கொல்லை வழியே சென்று மறைந்தது. ஒரு குட்டி நாயை ஸ்கூட்டியில் ஏற்றிக் கொண்டு இரண்டு செவலைகள்  பின்னே ஓடி வர நகர் வலம் வருகிறாள். அது ஒரு தேரோட்டம். ஏதேனும் ஒன்று  தன் பின்னே ஓடி வந்து கொண்டிருக்கும் வரை அவள்தான் இளவரசி.

அழகன்

  சொ ட்டைத்தலை யுவன் ஒருவனைக் கண்டேன். காதில்  ஒரு கடுக்கன் அணிந்திருந்தான். அவ்வளவு பெரிய வெற்றிடத்தை ஒரு சின்னஞ்சிறு துண்டை வைத்து நிரப்பத் துணிந்திருந்தான். ஆயினும் அப்படியே ஆகிவிட்டது தம்பி!

ஆட்டுவித்தல்

  பா லக்காடு பைபாஸில் ஒரு இருசக்கர வாகனத்தைப் பார்த்தோம். யுவதி தன் காதலனின் கழுத்தைச் சுற்றி வளைத்திருப்பது போல அந்த இளைஞனின் உயிரில் பற்றிப் படர்ந்திருந்தார் எம்.எஸ்.வி "சம்போ.....ஓ..ஓ.. சிவசம்போ...." எதையும் முந்தாமல் எல்லாவற்றையும் முந்திச் செல்லும் ரசவாதம். ததும்பித் ததும்பி இன்பத்துப் புழுதிக்குள் உருள்கிறது அந்த வாகனம்.. "லலா...ரீரரா... லலா... ரீரரா.. லலா...ரீ .ரரா...சிவ சம்போ...ஓ.ஓ.." நண்பன் சொன்னான்.. "சொர்க்கத்துக்கு போவது போல துள்ளித் துள்ளி பாய்கிறது அது.." நான் சொன்னேன்... "முட்டாளே!   இப்போதே அது சொர்க்கத்தில்தான் இருக்கிறது."

பாராதே

கா தலர்  பிரிந்து செல்லும் பாதையில் திட்டமிட்டு அமைத்தது போல் கொஞ்ச தூரத்தில்  ஒரு திருப்பம் வருகிறது. அது ஒரு அகழி அதைத் தாண்டிவிட்டால் பிறகு  எதையும் தாண்டிவிடலாம் உதைத்துப்போன கால்களுக்கு மிகச்சரியாக  அங்கே  நடை  திக்கிவிடுகிறது. இது பச்சைப்புண்ணில் திராவகத்தை ஊற்றுவது ஆயினும் ஊற்றி ஊற்றித்தான் எரிய வேண்டும். ஊற்றி ஊற்றித்தான் தணிய வேண்டும்.