Skip to main content

Posts

Showing posts from October, 2020

கையது கொண்டு மெய்யது பொத்தி..

வெ ளிச்சம் சகலத்தையும் துலக்கிவிடுகிறது என்னைக் காண எனக்கு அவ்வளவு பயம் என்னைக் கண்டு அழுகை பொத்துக்கொண்டு வருகிறது எனக்கு வெளிச்சம் சிரிக்கிறது எங்குதான் ஓட? எங்குதான் ஒளிய? நின் பதமலரில் துளிவிரல் திற அதில் விரியுமொரு மதுர இருள். அதனுள் சுருள்வேன்.

பயங்கர அழகே!

ப யங்கரம்  ஒரு அட்டவணையில் இருந்தது அழகு  வேறொரு அட்டவணையின் கீழ் இருந்தது ஆயினும் இரண்டும்  கண்ணொடு கண் நோக்கி அமர்ந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அழகு பயங்கரமாகி வந்தது. பயங்கரம்  அழகு கொண்டு எழுந்தது. அழகிற்காக மனிதத் தலையொன்று  மண்ணில் துண்டாகி வீழ்ந்தபோது அழகு பயங்கரமாகிவிட்டது. பயங்கரம் என்று அறிந்திருந்தும் அதைத் திரும்பத் திரும்ப காண உந்தும்  துடிதுடிப்பில் பயங்கரம் அழகாகிவிட்டது. பயங்கர அழகே! நான் சின்னஞ்சிறுவன் எனக்கு வழிவிடு!

ததும்பு

ஏ ரியைக் கடக்கும்போது அந்தியில் மனமழிந்து வண்டியை நிறுத்தாதே பார்த்துக்கொண்டே  கடந்து போ ஏரி உன்னுள் பாய அரைநொடி போதும் "ஒருகை பார்க்கிறேன்" என்று அதன்முன் சம்மணமிட்டு அமராதே நமக்குத் தெரியாதா என்ன? யுகயுகமாக நம் கண்கள் எவ்வளவு பெரிய கொள்ளிக் கண்கள். பார்த்துப் பார்த்து அதை துண்டு துண்டாய் உடைக்காதே வாயை அகலப்பிளந்து மொத்தமாய் விழுங்கிவிடத் துடிக்காதே உன் நினைவில் ததும்பட்டும் அது வீட்டிற்கு அழைத்துப் போ ஏரியை.

உணவாவது

  தொ லைதூர கிராமங்களிலிருந்து சென்னைக்குள் வந்துவிழுந்த  ஐந்து இளைஞர்கள் நான்கு மாடிக்குடியிருப்பொன்றில் கீழ்தளத்தில் தங்கியிருந்தார்கள். முறைவைத்துச் சமைத்து முறைவைத்துக் கழித்து குறைவான சிக்கல்களோடு காலம்தள்ளி வந்தார்கள். எவ்வளவுதான் முறைவைத்தாலும் குறைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆகவே முறையும் குறையுமாக வாழ்ந்துவந்தார்கள். அதிலொருவனுக்கு  அன்று திடீரென ஒரு மகிழ்ச்சி உதித்துவிட்டது. "மொட்டைமாடியில் வைத்து உண்போமா?" எல்லோரிடமும் அது பற்றிக்கொண்டது. படி வரிசையில் கைமாறி மைமாறி  மேலே செல்கின்றன பாத்திரங்கள். சுமை தோன்றுகையில் நகைச்சுவையும் தோன்றிவிடுகிறது. பாத்திரங்களோடு பாத்திரமாக சேர்ந்துகொள்கிறது சிரிப்பு.  உண்ணத்தயார் நிலையில் உள்ளது உணவு. ஆனால் ஏதோ ஒன்றை  அவர்கள் ஏற்கனவே பகிர்ந்து உண்டிருந்தார்கள். "கொலப்பசி..." என்று துரிதப்படுத்திய ஒருவன் இப்போது நிலவைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான்.

பழுதான ஒன்றிலிருந்து பறந்துவரும் மயில்

பு தன்கிழமைதோறும்  என் ஊருக்கு தடுப்பூசி போடவரும் நர்ஸக்கா அம்மாவுக்குச் சிநேகிதம். நாள்முழுதும் உபயோகித்த ஊசிகளின் முனைகளை ஓய்ந்த மாலையில் என் வீட்டுவாசலில் அமர்ந்து வெட்டுவாள். அந்த எலிப்பொறி போன்றதொரு இயந்திரத்தை கண்கொட்டாது பார்த்து நிற்பேன். அவள் ஒவ்வொரு முறை நறுக்கும்போதும் அதிலிருந்து மயிலொன்று அகவும். புதன்கிழமைதோறும் வீட்டுமுற்றத்தில் மயில்கூட்டம். பலநாட்கள் இரகசியம் காத்த மயில்கதையை  ஒரு நாள் சொல்லியேவிட்டேன் அவளிடம். அதைக்கேட்டு அழகாக சிரித்தபடியே என் தலைசிலுப்பிச் சொன்னாள்... "ஏதோ ஒரு சின்னக் கோளாறு.. எண்ணெய்விட்டால் சரியாயிடும்..." அக்கா... அக்கா எண்ணெய்விட்டால் மயில் பறந்து போய்விடாதா?

நார் இல் மாலை - சங்கத்து மாலைக்காட்சிகள்

அ.முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலொன்றில் இதுபோலச் சொன்னார். “சங்க இலக்கியங்கள படிச்சாவே போதும்...எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சில சமயம் தோன்றும்..”. எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படித் தோன்றியதுண்டு. அகப்பாடல்களின் முதற்பொருள் நிலமும் பொழுதும். அவை நிலத்தையும் பொழுதையும் விரித்துப் பேசியவை. தொல்காப்பியம் வகுத்துச் சொல்லும் ஐவகை நிலங்களை நாம் அறிவோம். பொழுதுகளில் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரண்டுண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்கள் பெரும் பொழுதாகவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் போன்ற பொழுதுகள் சிறுபொழுதுகளாகவும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் மாலையைப் பற்றியே நம் அகப்பாடல்கள் அதிகமும் பாடியுள்ளன. சங்கத்து மாலைக்காட்சிகளில் நான் கண்டு மயங்கிய சிலவற்றை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். சங்கப்பாடல்கள் எல்லா பொழுதையும் பாடியுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா பொழுதுகளும் அதில் உண்டு. “தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (கு

எதற்கு?

  நா ன் காத்திருக்கிறேன். எதற்கென்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு விடியலிலும் அவ்வளவு ஆவலோடு  கதிரவனிடம் கேட்கிறேன்... "இன்றெனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்..?" எனக்குத் தெரியும். அது எதுவும் பேசாது. நான் காத்திருக்கிறேன் எதற்கென்று எனக்குத் தெரியாது. எண்ணெய் படிய தலைவாரிக் கொண்டு சாலையின் இடதுபுறமாக அலுவலகம் போய் வருகிறேன். நான் காத்திருக்கிறேன் ஆனால் எதற்கென்று உறுதியாக எனக்குத் தெரியாது.

அழகான ஏற்பாடு

  க தவு என்பது அழகுணர்ச்சி கூடிய அவசியமானதோர் ஏற்பாடு என் வீட்டுக்கதவை நினைத்த மாத்திரத்தில் திறப்பேன் நினைத்த மாத்திரத்தில் அடைப்பேன். என்  ஒரு கதவைத் திறப்பதற்குள் எனது நான்கு கேடயங்கள்  உடைந்து நொறுங்கிவிட்டன. என் ஒரு கதவை அடைப்பதற்குள் எனது ஏழு குதிரைகள் வீழ்ந்து மடிந்துவிட்டன.

நிறைவு

" இ ன்னொன்று ...?"   என்று   கேட்டது   நா . நான்     அதை   அதட்டவில்லை . அன்பு   கொண்டு   ஒரு   முறை   ஆழ்ந்து     நோக்கினேன் . ஏனோ   பிறகு   அது   அனத்தவில்லை . இன்னொன்று   இல்லாத   காலி   வயிற்றில்   நிறைந்திருக்கும்   அந்த   ஒன்றை நாளெல்லாம்   தடவித்தடவிக்   களித்தேன் . மடியில்   எடுத்து   வைத்துக்   கொஞ்சினேன் .