Skip to main content

Posts

Showing posts from December, 2020

நலம் பெறுதல்

  கீ தா பேக்கரியின்  விசாலமான முற்றத்தில் நின்றுகொண்டு தன்னந்தனியாக அண்ணாந்து வான் நோக்குகிறேன் அதில் பொங்கி வழிகிறது பிறைமதி இவ்வளவு தேசங்களுக்கிடையே இவ்வளவு ஊர்களுக்கிடையே இத்தனை இத்தனை கல்லுக்கும், மண்ணுக்குமிடையே கடல்களுக்கும், மலைகளுக்குமிடையே ஒரு விநாடி கீதா பேக்கரி முற்றத்தைக் கண்டுவிட்டது நிலவு. அது  நலமா? என்றது. நான் நலமே! என்றேன்.

பொய்யா மாரி

தெ ருவில் குந்தியிருக்கும் அவருக்கும் தெருவில் படுத்துறங்கும் நாய்களுக்கும் எப்படியோ சிநேகம் உருவாகிவிட்டது. காவல்பணி முடித்து அதிகாலையில் வீடு திரும்புகையில் நான்கு ஜீவன்களை அழைத்துக் கொண்டு பேக்கரிக்கு ஊர்வலம் போவார். ஒரு கட்டு பிஸ்கட்டை உடைத்து மழையைத் தூவுவது போல் தூவிவிடுவார். அவருக்கும் நாய்களுக்கும் இடையே இருந்த பிஸ்கட் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நாளடைவில்  வேறொன்று பூத்துவிட்டது. இப்போதெல்லாம் மாதக் கடைசிகளில் அவர் தூவுவது போல் தூவுகிறார். அவை உண்பது போல் உண்கின்றன.

அணிலாட்டம்

மொட்டைமாடியை மூன்று வட்டம் அடித்த அந்த அணில்குட்டி கைப்பிடிச்சுவர்களில் குறுக்குமறுக்குமாக ஓடி அடுத்தவீட்டு ஆஸ்பெட்டாஸில் துள்ளிக் குதித்து காம்பவுண்டு சுவரில் ரோஜா செடிகளில்  ஆட்டமாடி பக்கத்தில் நின்றிருந்த தீக்கொன்றையில் ஓடோடி உச்சிக்கிளையேகியது. அங்கிருந்து  அருகிருக்கும் மின் கம்பத்திற்கு அந்தரத்தில் தாவுகிறேன் நான்.

இளஞ்சூட்டு முறுவல்கள

  அ திகாலைத் தேநீரோடு வழக்கத்திற்கு மாறாய் இரண்டு பட்டர் பிஸ்கட்டுகள் சொன்னேன். அதிகாலையிலேயே அதனோடு சேர்ந்து நீயும் வந்துவிட்டாய். கொட்டிக் கவிழ்க்கப்பட்டிருந்த விதவிதமான பதார்த்தங்களுள் அன்று  நீ ஏன் பட்டர்பிஸ்கட்டைத் தேர்ந்தெடுத்தாய்? அவ்வளவு பண்டங்களுக்கிடையே பட்டர் பிஸ்கட் ஜெயித்துவிடுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதோ இன்று நானும் இந்த பிஸ்கட்டுகளுமாக எஞ்சியிருக்கிறோம். நானும் எழுந்த போன பிறகு எஞ்சியிருக்கும் சில பட்டர் பிஸ்கட்டுகள். அவை இங்கு எவ்வளவோ காலமாய் வாழ்ந்து வருகின்றன. எத்தனையோ பேர்களை வாழ்விக்கின்றன.

கூழின் சரிதம்

  நே ற்று இரயில் முன் பாய்ந்து கூழாகிப் போனவனுக்கு எண்ணற்ற நண்பர்கள் நாலைந்து காதல்கள் அத்தனை தோள்கள் அத்தனை மடிகள் அவனது ரயில்  எப்போது கிளம்பியதென உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அது நெருங்க நெருங்க ஒவ்வொரு தோளாக மாயத்தில் மறைந்தன. ஒவ்வொரு மடியாக விலகிப்போயின. ஆழிசூழ் உலகு அவனும் இரயிலுமாக அவ்வளவு சுருங்கிவிட்டது  அவன் அந்த இரயிலை எதிர்நோக்கி நின்றிருக்கிறான். அனந்தகோடி  தோள்களும் அனந்தகோடி மடிகளும் கொண்ட அது அதோ அவனை நெருங்கிவிட்டது.

கொக்கின் கீதம்

  ஏ தோ ஒரு தூரதேசம்… புல்வெளிப்பரப்பின்  பின்னணியில் நின்று கொண்டு பாடிக்கொண்டிருக்கிறான்  ஒரு பாடகன். மேலே மழைக்கருப்பின் ரம்மியத்தில் பூத்திருக்கிறது வானம். அப்போது அந்நிலக்காட்சியை ஊடறுத்துப் பறந்ததொரு கொக்கு ஐயோ…! அது  அவன் பாட்டையே தூக்கிக்கொண்டு பறக்கிறது. பாட்டு பறக்க அவனும் பறந்தான். அவனோடு பறந்தன பச்சையும் கருப்பும். பார்த்திருந்த நானும் பறந்தேன் சேர்ந்து.