Skip to main content

Posts

Showing posts from June, 2021

காயம்

சை க்கிள் சறுக்கி தரையில் விழுந்துவிட்டாள் சின்னஞ்சிறுமி. முதல் காயம் முதல் குருதி வீறிட்டு வீறிட்டுக் கதறுகிறாள் மருத்துவத்திற்கு ஒத்துழைக்க வைக்க மூன்றுபேர் சேர்ந்து போராட வேண்டியிருந்தது. காயத்தைத் துடைத்து மருந்திட்டுக் கட்டினேன் அழுகை தேய்ந்து முனகலான போது கட்டுத் துணியைப் பார்த்து ஏனோ "கொக்கு போல் இருக்கு" என்றாள் அப்போதே அந்தக் காயம் எழுந்து பறந்து போவதைக் கண்டேன்.

பூனையல்லாத பூனை

  யா னை தன் காட்டில் அசைந்து அசைந்து செல்வதைப் போலே  இந்தப் பிரதான சாலையைக் கடந்து கொண்டிருக்கிறது ஒரு தூவெண் பூனை பூனை ஒரு இடத்திலிருந்து  இன்னொரு இடத்துக்கு செல்வது தன்னிலிருந்து தனக்கு சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும்  ஒருவன் நிலை தடுமாறி ப்ரேக் அடித்து காலூன்றி நிற்கிறான் பொதுவாக அது ஒதுங்கி ஒளிவது ஓடி மறைவது இன்றென்னவோ ரொம்பத்தான் பிலுக்கு " உங்கப்பன் போட்ட ரோடா?" என்றவன் கேட்கவில்லை. ஆனால் அதன் நடை அப்படித்தான் சொல்லியது.

பிஸ்கட்

எ ப்போதும் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு என் நாயிற்கு எறிவேன் அரை பிஸ்கட்டிற்கு முழு உடலால் நன்றி செலுத்தும் பிராணி அது இரண்டு முறைகள் அந்த நன்றியைக் கண்டு களிப்பேன் இரு முறையும் அது என்னைப் போற்றிப் பாடும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை அவ்வளவு ஏக்கத்தோடு பார்த்துக் குழையும் இரண்டாம் துண்டு என் இஷ்டம் இரண்டு துண்டுகளுக்கிடையே அதன் நெஞ்சம் அப்படிக் கிடந்து தவிக்கும் உச்சியில் இருக்கும் எதுவோ இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் என் பிஸ்கட்டை ஆயிரம் துண்டுகள் ஆக்கி வைத்தது.

பாட்டின்பம்

ஊ ர்ந்து செல்லும் மோட்டர் சைக்கிளில் எதையோ  விற்றுக்கொண்டு போகிறான் எவ்வளவு செவி கூர்ந்தாலும் என்ன என்பது விளங்கவில்லை என்ன விற்பது என்று தெரியாமல் எப்படி வாங்குவார்கள்? ஆரம்பத்தில் அவன் விற்கத்தான் செய்தான் ஏதோ ஒரு கணத்தில் சட்டென அவனொரு பாட்டில் ஏறி விட்டான் இதோ... பாடிக்கொண்டு போகிறான். பாட்டில் ஏறிய பிறகு அவன் எதையும் விற்பதில்லை யாரையும் அழைப்பதுமில்லை.