Skip to main content

Posts

Showing posts from July, 2021

வாடா!

  நெ டுநாட்களுக்குப் பிறகான சந்திப்பில் ஒருவரை நோக்கி ஒருவர் கிட்டத்தட்ட ஓடி வருகிறோம் வீதிக்கு வீதி விழுகின்றன பிணங்கள் ஆம்புலன்ஸின் நாசஊளை நின்றபாடில்லை. மகன் தன் தகப்பனின் உடலைக் காண மறுத்துவிடுகிறான் கவசஉடை  அணிந்த எவனோ ஒருவன் தன் பிள்ளையின் பிணக்கட்டை குழிக்குள் தள்ளிவிடுவதை டி.வி யில் பார்க்கிறாள் ஒரு தாய் நமது காவியங்களின் கிரீடத்தில் பொத்தல்கள் விழுந்துவிட்டன தொற்றுக்கு எதிராக  கடுமையாகப் போராடுகிறது அரசு. மக்களின் நலம் வேண்டி ஓயாமல் உபதேசிக்கிறது இப்போது உனக்கும் எனக்கும் இடையே உள்ளது ஒரு கண்டிப்பான விதி அது நம் சட்டைக் காலரைப் பிடித்து பின்னோக்கி இழுக்கிறது இரண்டடி  இடைவெளியில் நின்று தயங்குகின்றன  நம் கால்கள் வாடா! முத்தமிடா விட்டாலும் செத்துத்தான் போவோம்.

வித் அவுட்

  த ன் 52 வது வயதில் அவனொரு அழகிய "coffee mug" - ஐ கண்டான் கண்ட கணமே மதியழிந்து போனான். தூவெள்ளையில் வயலெட் வண்ணத்தின் உட்சபட்ச கலைமயக்கம் அதைக் கையில் ஏந்தி கண்ணாடி முன் நின்றால் மொகலாயப் பேரரசனொருவன் ஹூக்கா புகைத்தபடி தோன்றுகிறான். தன் பழங்கிழட்டு கிராமத்தின் மங்கிய சில்வர் டம்ளர்கள் அவன் நினைவில் கசந்து தொண்டையை அறுத்தன. 230 ரூபாய்க்கு கோப்பையை வாங்கிவிட முடிந்தது. பிறகுதான் தெரிந்தது அதனுள்ளே அவன் மருத்துவர் இருப்பது. கொண்டைப் பிரம்பை சுழற்றித் திரியுமவர் சர்க்கரைப் பைகளை எரித்துப் போட்டுவிட்டு உயிரற்ற திரவத்தை அதில் நிரப்பி அனுப்புகிறார். அதைக் காபியின் சடலம் எனலாம். கோப்பையைத் தூக்கிக் கொண்டு ஒரு சூறை எழும்பி ஓடுகிறது தன் 22 வது பிராயம் நோக்கி