Skip to main content

Posts

Showing posts from October, 2021

கவிதையின் ஆசி

  ஒ ரு பூ  இயற்கையில் நழுவி உன் தலைமீது விழுகையில் நிச்சயம் அது ஒரு ஆசி நீ ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்! ஒரு பூ  இயற்கையில் நழுவி உன் தலைமீது விழுகையில் நிச்சயம் அது ஒரு ஆசி நீ அந்தப் பூவின் பெயரைச் சொல்!

அரிய உயிரும், எளிய உயிரும்

  சா லையின் நடுவே நின்று ஓர் ஆட்டோக்காரர் போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார் தூரத்தில் இருந்து பார்க்கையில் ஏதோ விபத்து போல் தெரிந்தது கிட்ட நெருங்க நெருங்க சாக்கடை உடைசல் என்று சந்தேகித்தேன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இரண்டு கல்வி நிறுவனங்களும் ஒரு வங்கியும்  நிறுத்தி வைக்கபட்டிருந்தன. கூடவே  சில வீடுகளும் எனக்கும் கைகாட்டி ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை  நிறுத்தி வைத்தார். அரியவகை பச்சோந்தி ஒன்று தேக்கித் தேக்கி சாலையைக் கடந்து கொண்டிருந்தது அது சென்று மறைந்ததும் "யாவும் இயங்குக!" என்று அறிவித்துவிட்டு ஆட்டோவில் ஏறிப்பறந்தது ஓர் அரிய உயிர்.