Skip to main content

அழகில் கொதிக்கும் அழல்

நாட்படு தேறல்

அழகில் கொதிக்கும் அழல்

முளைப்பன முறுவல்! அம்முறுவல் வெந்துயர்
விளைப்பன! அன்றியும், மெலிந்து நாள்தோறும்
இளைப்பன நுண் இடை ! இளைப்ப, மென்முலை
திளைப்பன, முத்தொடு செம்பொன் ஆரமே!

கம்பராமாயணத்தின் பாலகாண்டத்துள் நகரப்படலத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. அயோத்தி நகரத்துப் பெண்களை வர்ணிக்கிறார் கம்பர்.  

அயோத்தி நகரத்து நங்கையர் முகத்தில் எப்போதும் முறுவல் முளைத்து நிற்கும். அம்முறுவலோ துயர்  விளையும் அளவு அழகானது.  அவர்களது இடை நாள்தோறும் மெலிந்து மெலிந்து இளைக்கும். இப்படி இடை இளைக்க, அவர்களது மென்மையான முலைகளோ முத்தும், பொன்னும் பூட்டிய ஆரங்களை அணிந்து திளைக்கும்.

ஒரு வழக்கமான வர்ணனைப் பாடல்தானே என்று தோன்றக்கூடும். ஆனால் என்னால் "வெந்துயர் முறுவல்" என்கிற சொற்கட்டை தாண்ட இயலவில்லை. இப்பாடலை வாசித்த நாளில் ஆவேசமாக என் அடுத்த கவிதைத் தொகுப்பின் தலைப்பு "வெந்துயர் முறுவல்" என்று முகநூலில் அறிவித்தேன். இப்போது நூல் வேறு தலைப்பில் வந்தாலும் நூலில் உள்ள காதல் கவிதைகளின் பகுதிக்கு  இதுதான் தலைப்பு. 

அழகு ஏன் துயர் தருகிறது? அதுவும் வெந்துயர். அழகில் நம்மை மீறிய ஒன்று உள்ளது. நம் கைகளில் சிக்காதது. கவிதை உச்சத்தில்தான்  துவங்குகிறது என்று சொல்வதைப் போலே, அழகு அதீத்தில்தான் தோன்றுகிறது. காதலியர் வதனத்து ஊசிப்பரு அதீதத்தில்தான் முளைக்கிறது. எவ்வளவு வர்ணித்தாலும் நிறையாத ஒன்று அழகில் உள்ளது. அழகிற்கும் மனிதனுக்கும் இடையே பெரும் ஏக்கம் உள்ளது. அவ்வேக்கம் துக்கம். இப்பாடலில்  " அம்முறுவல் வெந்துயர் விளைப்பன" என்கிற வரிக்கு " அந்த முறுவல் அப்பெண்களின் காதலர்களுக்கு காம வேதனை அளிப்பன" என்பதாக உரை சொல்லப்படுகிறது.

'காமவேதனை' என்கிற சொற்றொடர் பேரிலக்கியங்களிலிருந்து காமக்கதைப் புத்தகங்கள் வரை இயல்பாக  புழங்கிவரக்கூடியது. மன்னுயிர் யாவும் அறிந்த ஒன்று. காமத்தின் இன்பமும், வேதனையின் வலியும் சேர்த்துக் கட்டப்பட்ட கச்சிதமான சொற்கட்டு இது. காமத்தை எண்ணி எண்ணி ஏங்கும் ஏக்கம் துயரமானது. ஆயினும் ஏக்கத்தில்தான் காமத்தின் தேன் சுரந்து வழிகிறது.  எவ்வளவு ஏக்கம் பூத்து நிற்கிறதோ அவ்வளவு  இன்பம் விளைகிறது.  காமமும் வேதனையும் அருகமர்ந்து உண்பவை.

கம்பராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் இராவணன்  முதன்முறையாக சீதையைக் காண்கிறான். அவள் அழகினைக் காண அவனுக்கு இருபது கண்கள் போதவில்லை. 

ஏயுமே இருபது?  இங்கு இமைப்பு 
இல் நாட்டங்கள் 
ஆயிரம் இல்லை! என்று
அல்லல் எய்தினான்

கரையே இல்லாத பேரழகுக் கடல் இவள் என்று ஏங்கி நிற்கிறான். " கரைஅறு நல்நலக் கடல்" என்கிறான் கம்பன். கடலின் முன் மனிதன் எவ்வளவு சிறியன்! .  இராவணன் சீதையை மிரட்டி அழைக்கிறான். பிறகு பதினான்கு லோகத்தையும் ஆளும் அரச செல்வத்தை அளிப்பதாக ஆசை காட்டுகிறான்.  கடைசியில் காமநோய் மிக்கு அவள் காலடியில் விழுகிறான்.

அணங்கினுக்கு அணங்கனாளே! ஆசை நோய்
அகத்துப் பொங்க ,
'உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை 
உதவி, உம்பர்க்
கணம்குழை மகளிர்க்கு எல்லாம் பெரும்பதம்
கைக்கொள்'  என்னா
வணங்கினன் -  உலகம் தாங்கும்
மலையினும் வலிய தோளான்.

காமத்தின் முன் மலையினும் வலிய தோள்கள் உயிரினை உதவக்கோரி மன்றாடுகின்றன.

திருக்குறள் காமத்துப்பாலின் முதல் அதிகாரமே " தகை அணங்கு உறுத்தல்" தான். தலைவன் தலைவியை முதன்முறை காணும் அதிகாரம் இது. முதன்முறை காணும் போதே அவளை அணங்காகத்தான் காண்கிறான்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

இவள் பெண்ணோ?  இல்லை மயிலோ ? இல்லை உயிரை வருத்தும் அணங்கு தானோ? என்று குழம்பி வருந்துகிறான் தலைவன்

மயிலின் அழகில் அணங்கின் பயங்கரத்தையும்  காண்கிறான் தலைவன். 

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ  முலைமேல்  துகில்.

இவளின் மதர்த்த முலைமேல் அணியப் பெற்ற துகிலானது மதக்களிற்றின் மத்தகத்தில் விளங்கும் முகப்படாம்  போன்று உள்ளது.

முட்டிமுட்டிக் கொல்லும் மதக்களிறாகின்றன முலைகள்.  சாம்ராஜ்யங்களை சரிக்க வல்ல களிறு இது. நம் சங்கப்பாடல்களெங்கும் பூரித்துத் துடிக்கின்றன முலைகள். 

ஒளித்து மறைக்கப்படுவதால் அவை நினைவில் துள்ளிக் கொண்டிருக்கின்றன. தமிழன்  தன் கற்பனாசக்தியின் பெரும்பகுதியை முலைகளுக்குத்தான் செலவழிக்கிறான்.  

பாரதி ,  உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற துயரத்திற்கு இணையாக வைத்துப் பாடிய இன்னொரு துயரம்...

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசுபோதினும் 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

பாவம்,  எவ்வளவுக்கு  பயந்திருந்தால் இவ்வளவுக்கு  அலறியிருப்பான்!

பாரதியின் இன்னொரு பாடல்....

கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ!
காதிலே அமுது
உள்ளத்தில் நஞ்சு

அமுதில் இருக்கும் நஞ்சை  அறிய காதல்தான் சிறந்த வழி.  அமுது ஊட்ட, நஞ்சு கொல்ல, அமுது ஊட்ட , நஞ்சு கொல்ல என ஆனந்த வேதனை. இரண்டாக இருக்கும் ஒன்றொடு எப்படிப் போரிடுவது?  விதிகளைப் பின்பற்றாத எதிரியை  எப்படி வெல்வது?

மலர் வெறுமனே மலராக இருக்கும் போது மனிதன் வெறுமனே அதை வேடிக்கை பார்க்கும் போது அங்கு தூய இன்பம் நிலவுகிறது. அச்சிறு மலரின் முன் , தான் எவ்வளவு அற்பன் என்று எண்ணத்துவங்கிய மறுகணம் அழகு துயரமாகிவிடுகிறது. மலரின் மீது காதலை, காமத்தை ஏற்றும்போது மலரும் மனிதனும் சேர்ந்து எரியத்துவங்கி விடுகிறார்கள்.

அழகைக் காணும்போதெல்லாம்
பூரித்து அவளாய் நிற்கும்
மலரைக் காணும் கணம்தோறும்
என் தோல்வியில் சுருண்டு
சாவு என்று
என்னை நான் பலமுறை சபித்துள்ளேன்.

( ஷங்கர் ராம சுப்ரமணியன்)


மனிதன் ஓர் இழுபடும் தேர்.  அழகு மனிதனை வாழ்வை நோக்கித் தடதட வென இழுத்துச் செல்கிறது. பிறகு எதிர்திசையில் திரும்பி சாவுக்குள் உருட்டுகிறது. 

மலரில் இருப்பது சாந்தமா? உக்கிரமா? .அழகில் நடனிப்பவள் கலைமகளா? காளியா?. சமீபத்தில் வந்துள்ள கவிஞர் ஆசையின் கவிதைத் தொகுப்பின் பெயர் "அண்டங்காளி". இதில் காளிதான் காதலி. காளிதான் காதலியெனில் சிரிப்பு பேய்ச்சிரிப்பு தானே?

இருமுனை முடிவின்மையின்
நடுவெளி நர்த்தனம் நீ
தொடு ஊழி தரையிறக்கும்
தத்தளிப்பு நீ
கடல்புரியும்
தாண்டவத்தின் தெறிப்பும் நீ
எரிஜோதி இடைபறக்கும்
கொடும்பறவை நீ
அனலுமிழும் கனல் மயக்கும் 
பேய்ச்சிரிப்பு நீ
நாத்திகனின் கனவில் வரும்
நடனக்காளி நீ.


இன்னொரு கவிதை...

அம்பாளுக்கு வயது
எப்போதுமே
பதினாறுதான்
அவளைக் காதலால்தான் 
கும்பிட முடியும்.

காமம் பதினாறில் தோன்றி பதினாறில்  மடிகிற ஒரு பிறப்பு. அதற்குக் கிழடு தட்டுவதில்லை. அது தண்டூன்றுவதில்லை. 

இச்சை  எப்போதும் இளமையில் இருக்கிறது.  இளமைக்கு ஓய்வு இல்லை. நிதானம் இல்லை. ஆசுவாசம் இல்லை. இளமை ஓயாத பரபரப்பில் இருக்கிறது. ஆகவே அவ்வப்போது தவறி தாளாத துன்பத்துள் விழுகிறது.

காமம் காமம் என்ப
காமம் அணங்கும் பிணியும் அன்றே

என்பது சங்ககாலத்து எம்.எஸ். உதயமூர்த்தியார் வாக்கு. தணியாது சடசடக்கும் காமம்,  அணங்கும் பிணியும்தான். ஆயினும் அணங்கின்றி வாழ்வு ருசிக்காது. அணங்கைத் தழுவியும், அணங்கிற்குத் தப்பியும் வாழ்வதே வாழ்வு.

குணா கந்தசாமியின் கவிதை ஒன்று இப்படித் துவங்குகிறது...

நமது ஏக்கம்
ஒரு வாடாத
அழகிய மலராக இருக்கிறது.

 ஆம்.... அவ்வாடாத ஏக்கம் நம் வாழ்வை நிறைக்கட்டும்!
(நன்றி : சந்தன வேங்கை)

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம