Skip to main content

வானமாமது

                                

                                        

                                              அழகு


சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்  
நாடகத்தைச் செய்கின்றாள்;  அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் 
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிலத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்

  ( அழகின் சிரிப்பு- பாரதிதாசன்)

ஆங்காங்கே வலிந்து துணிக்கப்பட்ட  முற்போக்குக் கருத்துகள் உண்டுதான் என்றாலும் "அழகின் சிரிப்பு" வாசிப்பது எனக்கு சுகமான அனுபவமாக இருந்து வருகிறது. 'மண்ணில் நிகழும் வர்க்க வேறுபாட்டின் கொடுமை தாளாமல், அதை நாளெல்லாம் கண்டு நிற்கும் கோபத்தில்தான்  இரவில் வானம் விண்மீனாய் கொப்பளிக்கிறது'  என்று சொல்லும் மனத்தால் ‘நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவு நாடத்தையும்’ காண முடிந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமே. பாரதிதாசனின் கொள்கை முழக்கம் துருத்தாமல் கச்சிதமாக வந்து விழுந்த வரிகளும்  இதில் உண்டு. 

"இத்தரை, கொய்யாப்பிஞ்சு
நீ   அதில்  சிற்றெறும்மே"

 என்பது எனக்கு மிகவும் பிடித்த வரி. 

நமது சங்கப்பாடல்கள்  இயற்கையால் நெய்யப்பட்டவை.  அகப்பாடல்களின்  திணை இலக்கணமே இயற்கையால் ஆனது. அதில் நிலமும் பொழுதும் விரவியுள்ளன .  வெறுமனே உரிப்பொருளை மட்டும் பாடாமல் ஐவகைத் நிலத்தில் காணப்படும்  விலங்குகள் தாவரங்கள்,  நீர் நிலைகள், தொழில்கள் ,தெய்வங்கள் என்று யாவும் விரித்து உரைக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை போன்ற அளவில் சிறிய பாடல்களில் கூட ஒரு மலரோ,  மலையோ, விலங்கோ வந்துவிடுகிறது. அடிகளின் எண்ணிக்கை கூடக் கூட இந்த இயற்கைச் சித்தரிப்பு நீண்டு செல்வதைக் காண முடிகிறது. "நாட்டுவளம் உரைத்தல் " என்கிற துறை காதலரின் நாட்டு வளத்தை விரித்துக்கூறுகிறது. புறப்பாடல்களிலும் இந்த நாட்டுவளம் உரைத்தல் உண்டு.

"ஒரு பிடி படியும் சீறிடம்
 எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே?"

 என்கிறது புறநானூறு.

ஒரு பிடியானை படுத்துறங்கும் சிறிய இடத்தில் ஏழு களிற்று யானைகள் உண்ணப் போதுமான விளை பொருளை விளைவிக்க வல்ல வளமிக்க நாட்டின் தலைவன்.

பல புலவர்களின் பெயர்கள் தெரியாமல் அவர்கள் எடுத்தாண்ட இயற்கை நயமிக்க உவமைகளாலேயே அழைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ‘அணிலாடு முன்றிலார்’ , ‘விட்ட குதிரையார்’ , ‘ மீனெறி தூண்டிலார்’ போன்றவை உதாரணங்கள்..

யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் 
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே            

(குறுந்தொகை)

நான் இங்குதான் இருக்கிறேன். என் மகிழ்ச்சியோ என்னிடத்தில் இல்லை. அது மீன் சிக்கிய தூண்டிலை விரைந்து மேலே  எடுப்பது போலே, திணைப்புனத்தை காப்போர் கல்லெறியும்  ஓசைக்கு அஞ்சி , காட்டு யானை தான் வளைத்துப் பிடித்திருந்த மூங்கிலை சட்டென விட்டுவிட்டு நீங்கும் காட்டைச் சேர்ந்த தலைவனோடு போய் விட்டது. 

"விட்ட குதிரையார்" இதே "கான யானை கை விடு பசுங்கழை" க்கு அவிழ்த்து விட்ட குதிரையின் விசையை உவமை சொல்கிறார். இப்பாடல்களிலெல்லாம் இயற்கைச் சித்தரிப்புகள் வெறும் பின்புலமாக இல்லாமல் உள்ளுறையாக பாடலின் கருத்தை வலியுறுத்திச் சிறப்பிப்பதைக் காணலாம்.

 "புதல் மிசை நுடங்கும் வேழ் வெண் பூ 
 விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்...."  

  என்கிறது ஐங்குறுநூறு.

பசும்புதர்களுக்கு மேலே அசைந்து நிற்கும் வேழத்து வெண் பூக்கள்,  வானத்தில் பறந்து செல்லும் குருகைப் போல் உள்ளனவாம். 

"காவிரி மலிர் நிறை அன்ன நின் மார்பு" என்று தலைவனை ஏசுகிறாள் தலைவி. வெள்ளம் புரளும் காவிரியைப் போன்ற அகன்ற மார்பு கொண்டவன் தலைவன். அப்போதுதானே எண்ணற்ற பரத்தையரை அதில் அணைக்க இயலும். 

பொழுதும் சங்கப்பாடல்களில் விரவிக் கிடக்கின்றன. அதில்  அந்தியின் அழகும், அது தலைவிக்கு தரும் துயரமும்  குறித்து ஏற்கனவே "நார் இல் மாலை" என்கிற தலைப்பில்  ஒரு விரிவான கட்டுரை எழுதியிள்ளேன் . மாலை அதிகமும் ஒரு  வில்லன் பாத்திரம் ஏற்று வருகிறது.

" தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வந்தது வைகறை" என்று வைகறையை நோகிறாள் ஒரு தலைவி. புணர்ச்சியில் இருக்கும் இருவருக்குமிடையே ஒரு வாள்போல் இறங்குகிறதாம் வைகறைப் பொழுது. 

திருக்குறள் இரண்டே அடிகளால் எழுதப்பட்டிருந்தாலும் அதனுள்ளே அனிச்சமும்  அன்னமும் , குவளையும் யானையும் வந்துவிடுகின்றன. 

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

மனிதர்கள் திட்டமிட்டுக் காத்திருந்து, சரியான தருணத்தைத் தட்டித் தூக்கி,  கட்டியெழுப்பும் லட்சியக் கோட்டைகள் நாசமாய்ப் போகட்டும்... எனக்கு இந்தக் கவிதையின் காட்சி அழகும், சந்த நயமுமே போதுமானது

சிலப்பதிகாரம் ‘மா மழை போற்றுதும், ஞாயிறு போற்றுதும்,திங்களைப் போற்றுதும்’ என்று வேண்டியே துவங்குகிறது. கம்பன் தன் காவியத்திற்குள் நுழையும் முன் கோசல நாட்டை செழிக்கச் செய்யும் சரயு நதியை   20 பாடல்களில் விரிவாகப் பாடுகிறான். 

இயற்கை நம்மோடுதான் வாழ்கிறது. நம்மை குணப்படுத்தவும், துயர்ப் படுத்தவுமாக அவை நம் வாழ்வில் ஒரு தவிர்க்க இயலாத பகுதி. வானத்து மீனிற்கும், கோயமுத்தூர் பூனைக்கும் இடையே உறுதியாக ஒரு கோடு உள்ளது. " அற்றைத் திங்களுக்கும், பாரி மகளிர்க்கும் என்று சொன்னால் நாம் பலமாகத் தலை அசைத்து ஒத்துக் கொள்வோம்.

கம்பராமயணத்தில் ஒரு காட்சி...

அன்னவள் கூறுவாள்,
‘அரசர்க்கு, அத்தையர்க்கு,
என்னுடைய வணக்கம் முன்
இயம்பி, யானுடைப்
பொன் நிறப் பூவையும்,
கிளியும், போற்றுக என்று
உன்னும் என் தங்கையர்க்கு
உணர்த்துவாய்’ என்றாள்.

இராமனையும் சீதையையும் காட்டில் விட்டுவிட்டு நாடு திரும்பப் போகும் சுமந்திரன் என்ற அமைச்சரிடம் சீதை சொல்லும் பாடல் இது...

‘முதலில் என் வணக்கத்தை அரசர்க்கும் அத்தைக்கும் தெரிவியுங்கள். பிறகு நான் அன்போடு வளர்த்து வந்த மைனாவையும், கிளியையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி என் தங்கையரிடம் சொல்லுங்கள்’

வாழ்வு தலைகீழாகப் புரண்டு கிடக்கும் தருணத்திலும்  கூட அவள் மைனாவையும், கிளியையும் மறந்துவிட வில்லை. கற்பின் கனலி எவ்வளவு பேதைப் பெண்ணாகவும் இருக்கிறாள் என்பதை அழகாக உணர்த்திவிடுகிறார் கம்பர். இன்னொரு பாடலில் எங்கே தன்னைக் கண்டால் இராமனுக்கு சீதையின் விழிகள் நினைவு வந்து வருந்தும்படி ஆகிவிடுமோ என்றஞ்சி நீருள் ஓடி ஓடி ஒளிந்து கொள்கின்றன மீன்கள் என்று எழுதுகிறான்.

களிப் படா மனத்தவன்
காணின், ''கற்பு எனும்
கிளிப் படா மொழியவள்
விழியின் கேள்'' என,
துளிப்படா நயனங்கள்
துளிப்பச் சோரும்' என்று,
ஒளிப் படாது, ஆயிடை
ஒளிக்கும் மீனது.

பாரதி குயிலின் பாட்டை ‘உவமையிலா இன்பம்’ என்கிறான். 

காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில் 
பாட்டினைப் போல் ஆச்சர்யம் பாரின் மிசை இல்லையடா!......

ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே

ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ?

மது ஒரு பருப்பொருள் திரவம் என்பது எதார்த்தம். பாரதி அதை ஒரு நிலையாக்கி உன்னத அனுபவங்களுக்கு இட்டுச் செல்கிறான். மது எங்கும் நிறைந்த ஒரு மதுர நிலையாகி விடுகிறது.

மது நமக்கு, மது நமக்கு, மது நமக்கு விண்ணெலாம்...
மது நமக்கு மதியும் நாளும், அது நமக்கு வான மீன்.
மது நமக்கு மண்ணும் நீரும்,  அது நமக்கு மலையெலாம்.

நிலவுப் பாட்டு

வாராய் நிலவே வையத் திருவே
வெள்ளைத் தீவில் விளையுங் கடலே
வானப் பெண்ணின் மதமே, ஒளியே
வாராய், நிலவே வா.
மண்ணுக்கு உள்ளே அமுதைக் கூட்டிக்
கண்ணுக்கு உள்ளே களியைக் காட்டி
எண்ணுக்கு உள்ளே இன்பத் தெளிவாய்
வாராய்,  நிலவே வா
இன்பம் வேண்டின் வானைக் காண்பீர்
வான் ஒளி தன்னை மண்ணில் காண்பீர்,
துன்பம்தான் ஓர் பேதைமை அன்றே!
வாராய்,  நிலவே வா
அச்சப்பேயை கொல்லும் படையாம்
வித்தைத் தேனில் விளையும் களியாய்
வாராய்,  நிலவே வா.

இருட்டில் டார்ச்லைட்  பாம்பு அச்சத்திலிருந்து பாதுகாப்பது போலல்ல நிலவுக்காப்பு. அது அகத்தே விளையும் இருளையும், அந்த இருள் தரும் அச்சத்தையும் விரட்டிவிடக் கூடியது 

காற்று
காற்றே, வா
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை
மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா.
இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து ,மிகுந்த
ப்ராண- ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு 
காற்றே, வா
எமது உயிர் நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்து போய் அதனை அவித்து விடாதே.
பேய் போல் வீசி, அதனை மடித்து விடாதே.
மெதுவாக நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று
வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்
உன்னை வழிபடுகின்றோம்.

"கலை கலைக்கானதே!'  என்றும் கலை மக்களுக்கானதே! என்றும்  உளுத்துப் போன , சண்டையிடுவதற்கு வசதியான மேற்கோள்களைப் பிடித்துக் கொண்டு நாம் தொங்கிக் கொண்டிருக்கிறோம். 

உண்மையையும் அழகையும் எதிர் எதிரே நிறுத்திப் பார்ப்பதில்  நமக்கு  ஆர்வம் அதிகம் என்று தோன்றுகிறது. ஆனால் எமிலிடிக்கின்சனின் ஒரு கவிதை உண்மையும் அழகும் உடன் பிறந்தவை என்கிறது.

நான் அழகிற்காக இறந்தேன்
கல்லறையில் வைக்கப்பட்டேன்
உண்மைக்காக உயிர்விட்ட ஒருவர்
என்னருகே படுக்கவைக்கப்பட்டபோது
அஞ்சினேன்
நான் ஏன் இறந்தேன் என்று
அவர் கேட்டார்
‘அழகிற்காக’ என்றேன்.
‘நான் உண்மைக்காக,  நாமிருவரும்
சகோதரர்கள்’  என்றார் அவர்
அவ்வாறாக உறவினர்களைப் போல
இரவு முழுக்க உரையாடினோம்
புல் வளர்ந்து பரவி
எங்கள் உதடுகளை மூடி
எங்கள் பெயர்களை மறைக்கும் வரை.

உண்மை, நன்மை, அழகு என்பதெல்லாம் ஒன்றின் வேறு வேறு பெயர்கள் மட்டுமே என்கிறார் எமர்சன். ஒரு அப்பாவி உயிரைத் துடிக்கத் துடிக்க கொன்றுவிட்டு, அந்த இரத்தக் கறையோடு பியானோ வாசிக்கும் வில்லன்களை சினிமாக்கள் காட்டுவதெல்லாம் அவனொரு கொடூரமான விதிவிலக்கு என்பதை  நிறுவத்தான். உண்மையைக் கொல்லும் போது அழகையும் சேர்த்தேதான் கொல்கிறான். எனவே பியானோ வாசிப்பதில் அவனுக்கு நடுக்கமேதுமில்லை

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று...

முகவரிதாரரிடம்
இந்தக் கனத்த பொதியை
மழையில் நனையாமல்
ஒப்படைத்துவிட வேண்டும்
பூட்டிய கதவில்
ஒரு சிலந்திமனிதனின் ஒட்டுப்படம்.
மின்தடையில்  அழைப்புமணி
ஒத்துழைக்கவில்லை.
அங்கிருந்த
முட்டைத்தோடை விட்டு
நெடுந்தூரம் வந்திராத ஒரு
குட்டிபல்லி இடம் மாறியது
வேறொரு கண்டத்திற்குப் பறப்பது போலத்
தாவியதில் அது எங்கு விழுந்தததோ?
பின் வாங்கியதில் என் மேல் உரசியது
காட்டமான வாசனையுடன் அரளிக்கொத்து
இதுவரை பார்க்காத
ஒரு துருவேறிய நிறத்தில்
ஏழெட்டுக் காளான்கள் வரிசையாய்
உபரியாக ஒரு தேரைத் துள்ளலும்
தரைச்சக்கரம் போல் சுருண்ட
வளையல் பூச்சியும்.
“ ரொம்ப நேரமாக நிற்கிறீர்களா?”
கதவைத் திறந்த கைவளையல்கள்
கனிவுடன் சரிந்தன மணிக்கட்டின் மெலிவில்.
சொல்லவில்லை நான், 
இத்ததனையும்  பார்க்க
நின்றால்தான் என்ன
எத்தனை நேரமும் என்று.

பொதுவாக நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு இருப்பதில்லை. சிலர் இமயமலைப் பயணத்தின் போதும் ‘இலவசமாக’ எதிர்வீட்டுக்காரனை அழைத்துப் போய்விடுகிறார்கள்.  நீலத்தையே காணாமல் கடற்பயணத்தை நிறைவு செய்துவிட நம்மால் முடியும். மாறாக எங்கு நிற்கிறோமோ அங்கு பார்க்க முடிந்தால் எவ்வளவு பார்க்க முடிகிறது , கைவளைகள் மணிக்கட்டில் கனிவுடன் சரியும் காட்சி உட்பட.   

மனிதர்களின் பிரமாண்டங்களாலும், ஆர்ப்பாட்டங்களாலும் நெருங்கவே இயலாத ஒரு திருவிழாத் தருணத்தை கைப்பற்றி தன் கவிதையில் வைத்து கொண்டாடி மகிழ்கிறார் ஷங்கர் ராமசுப்பிரமணியன்

திருவிழா

மழையில் குளித்த 
மாமரம் 
சற்றே தாழ்ந்து
முருங்கைக்கிளை மீது வடிக்கிறது
துளிபாரம் தாளாத
இலைகள்
தங்கையென நின்றிருக்கும்
பப்பாளி இலைகளில்
சொரிகிறது.
தொடங்கிவிட்டதா
உங்கள் பண்டிகை

"இயற்கையை அறிதல் " நூலில் எமர்சன் சொல்கிறார்...

" கற்பனை என்பது என்ன? ஞானம் பருப்பிரபஞ்சத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதம்தான் அது...... ஜடப் பிரபஞ்சத்தின் இருப்பு பற்றி ஒரு போதும் ஐயப்படாத ஒருவன் ஆன்மீகத் தேடலுக்குத் தகுதியற்றவன் என்று உறுதியாகவே கூறிவிட முடியும்”

சரக்கொன்றையும், கருங்குருவியும் இங்கு நமக்காகப் படைக்கப்படவில்லை. நமக்கு கண்காட்சி காட்டுவது அவற்றின் பணியல்ல. ஆனால்  அத்தனை அழகையும் அள்ளிப்பருகும் வாய்ப்பு மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோஜாக்களுக்கு நீருற்றி நீருற்றித்தான் மனிதன் செழிக்க இயலும். மலரில் ததும்பும் ஒன்று நம்மை வாழ்வை நோக்கி அழைக்கிறது. இயற்கை நம்மோடு உரையாடுவதில்லை. நம் சிக்கல்களுக்கு  ஆலோசனைகள் வழங்குவதில்லை. நமது  காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டுவதில்லை. ஆனால் கட்டைவிரலளவு கருங்குருவியால் நம்மை “ தான்” என்கிற சகதியிலிருந்து வெளியே அழைத்துச் சென்றுவிட முடியும்.


                                                           நன்றி: காலச்சுவடு- ஜூன்- 2022


                                                   

   

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம