Skip to main content

Posts

Showing posts from September, 2023

சத்தியமூர்த்தி

வா யில் தேன் ரப்பரோடு கிலு கிலுப்பைக்குச் சிரித்தபடி  மல்லாந்திருந்த பருவத்தில் எனக்குப் பெயர் சூட்டினார்கள். அதை  மூன்று முறை என் காதிலும் சொன்னார்கள் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. தமிழும் தெரியாது. தெரிந்திருந்தால் அந்தப் பெயரின் மீது அப்போதே  மூத்திரம் பெய்திருப்பேன். அவ்வளவு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி தலைமீது வைத்து விட்டு அந்தக் கழுத முண்டை பாடினாள்... பாடினாள்... பாடிக் கொண்டே இருக்கிறாள்... "கண் மூடு இரத்தினமே!" "கண் மூடு இரத்தினமே!" "கண் மூடு இரத்தினமே!" .

அமர காதல் கவிதை

இ ந்தச் சொற்கள் யார் மீது பாடப்பட்டதோ அவள் அதற்குத் துளியும் அருகதையற்றவள் இந்தச் சொற்களை எவன் பாடினானோ அவன் இதற்குமுன் இப்படி பலபேரைப் பாடியவன் ஆயினும் இரு ஈனர்களுக்கிடையே வந்து அமர்கிறது ஒரு அமர காதல் கவிதை அதைக்  காதலின் தெய்வீகம் எழுதுகிறது அதுவேதான் வாசித்தும் கொள்கிறது.

எளிய சேவை

நா ன் அவளைக் கண்ட பொழுது அவள் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள். புதிதாக  ஒன்றை அறிந்து கொள்வதன் மூலம் புதிதாக வந்து சேர்வதற்கென்று அவள் அழகில் துளி இடம் கூட இல்லை. ஆனால் போனால் போகிறதென்று  அவள் வாசித்துக் கொண்டிருந்தாள். என் சட்டைக்காலரைப் பிடித்து இழுத்தது அவள் தாழ்குழல். பின்னங்கழுத்தின் பிசிறுகளை சீராக்கி அதை ஒருமுறை வாரிச்சுருட்டி அவள் தோளில் இட வேண்டும் என்றொரு ஆசை பூத்தது. இந்த எளிய சேவைக்கும் இன்னொருவன் குதிரை மீதேறி வர வேண்டும் என்கிற உண்மை என்னை துக்கத்துள் தள்ளுகிறது.

ஸ்தலம்

ம ண்ணில் இருந்த கையை எடுத்து மடியில் ஏந்திப் பற்றிக் கொண்ட பின் ஆழ்ந்த குரலில் மெல்லக் கேட்கிறாய்... "இப்போது சொல்... எங்கு செல்லலாம்?" இல்லை... இல்லவே இல்லை... உன் கைகளைப் பற்றிக் கொண்ட பின் இனி போவதற்கென்று  இந்த உலகில் இன்னொரு இடம் இல்லை.

நன்றி!

  இ ந்த நாளிற்காகத்தான் பூமிக்கே வந்தது போல  எவ்வளவு நன்றிகள் இன்று! ஏழு வருடங்களாக பால் ஊற்றிவிட்டு வெறுங்கையோடு திரும்பும் பாட்டிக்கு  இன்று  முதன்முதலாக நன்றி சொன்னேன் உணவு விடுதியின் பரிசாரகருக்கு பில் தொகையில் பாதியை அன்பளிப்பாக அளித்தேன். கூடவே  ஒரு நன்றியையும்.  பொய்யான காரணத்தோடு விடுப்பிற்கு விண்ணப்பித்த எனது பணியாளிற்கு விடுப்பையும் நன்றியையும் சேர்த்து வழங்கினேன். தென்னங்கீற்றுள் ஒளிந்துள்ள குயிலே! தென்னங்கீற்றே!   உங்களுக்கு என் நன்றி!  இவருக்கும் அவருக்கும் எவரென்றே தெரியாத எல்லோர்க்கும்  நன்றி! நன்றி!! உயிருள்ளவை, உயிரற்றவை என்று சொல்லப்படுவனவற்றுள் காணக்கிடைக்கும் உயிர்த்தன்மை ஒவ்வொன்றுக்கும்  நன்றி! இந்தப் பாழும்  உடலில் இவ்வளவு நன்றிகள் இத்தனை காலமும் எங்குதான் இருந்தன! அய்யோ..! என் கும்மிருட்டின் பயங்கரத்துள் அவை எப்படி எப்படித்தான் அழுகித் தவித்தன! நன்றி! நன்றி! நன்றி! நன்றி  ஒரு போதும் செலவளிக்கவே இயலாத ஒன்று அது தரத்தரவே திரும்பி விடுவதைக் காண்கிறேன்.