Skip to main content

Posts

Showing posts from December, 2019

ஆன்லைன் கவிதைகள்

உலகத்தை அணைத்துவிட்டு இருள்கிறது ஒரு பச்சை.               ## பச்சை பாடும் பாடல் கேட்டிலையோ..? " வாராய் நீ வாராய் ! "               ## ஞாயிறு உதிக்கிறது. திங்கள் உதிக்கிறது. வெள்ளி உதிக்கிறது. பச்சை உதிக்கிறது.              # நம்பு தம்பி நம்மால் முடியாது உண்மையில் அது சிவப்பு.            ## ஒரு பச்சை கண்ணீர் விட்டது. ஒரு பச்சை ஆற்றிவிட்டது. கண்ணீர் நின்றுவிட்டது. ஆறுதல் நின்றுவிட்டது. நிற்குமோ பச்சை?              ## பச்சையுள் விழுந்து பச்சையில் எழுகிறோம்.           ## பச்சைக்குப்  பயந்தவர்  எவரோ அவரே கடவுளுக்கு பயந்தவர்.               ##           நீலப்படம். மஞ்சள் புத்தகம் பச்சை விளக்கு.           ## எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேலென்று அவ்வளவு வறட்சி.             ## பச்சை நிறமது கொழுந்துவிட்டு எரிவதைப் பார்!

அம்மையுடன் ஓர் உரையாடல்

                          ஒளிப்புள்ளிகள் ஒன்றிணைந்து          அம்மை எழுந்தருளல் "மகனே ! என்னதான் உன் வேதனை?" "தனியன்.." "பொய்" "நிஜமாகத்தான்.." " உன்னோடு யாருமே இல்லையா?"  " இருக்கிறார்கள்" பிறகு? " இருப்பதுபோல் இருக்கிறார்கள்"  "உறுதியாக இருக்க வை.." "போய்விடுவார்கள்.." " கலங்காதிரு மகனே! " " இதற்கு இது பதிலில்லை."  "வண்டிச்சக்கரம்.. மன்னிக்க ..   காலச்சக்கரம்...  அது சுழலத்தான் செய்யும்" " பரவாயில்லை.. வண்டிச்சக்கரமே புதிதாக உள்ளது" " நன்றி !" "அது ஏன் சுற்றிக் கொண்டேயிருக்கிறது?" "சுழன்றால்தானே அது சக்கரம்?" "நன்றாகச் சுழலட்டும்....ஆனால் அது ஏன் எப்போதும் என் வீட்டு முன்பாகவே சுற்றுகிறது?" " மகனே ! அது மொத்த உலகிற்கும்தான் சுழல்கிறது... அப்படியே உன் வீட்டுப் பக்கமும் வருகிறது" "இருக்கலாம்.  ஆனால் என் வாயிலில் மட்டும் கொஞ்சம் வேகமாகச் சுற்றுகிறது"

ஜெகக்காரணி

காற்று இப்படி வீசுமா என்ன? குழல் இப்படிக் கலையுமா என்ன? தானாக வீசும் காற்று இப்படியா வீசும்? தானாக கலையும் குழல் இப்படியா கலையும்? நீயே காற்று! உனதே குழல்! நீயே எல்லாவற்றையும் கலைக்கிறாய் உனது குழல் உட்பட.

மயக்கம்

ஓடினால்தான் துரத்துமென்று பாவம் ,அவனுக்குத் தெரியவில்லை. ஓடுகிறான் கண்ணாமுழி பிதுங்க நுரையீரல் வாய்வழியே தெரித்து விடும்படிக்கு. அடேய்.. ஓடாதே ... ஓடினால்தான் துரத்தும். ஓடினால்தான் துரத்துமென்று அவனுக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் ஓடுகிறான்.

அம்போ !

இரயிலில் இருந்து இறங்கினார் ஒரு குருடர். தண்டவாளங்களைக் குச்சியால் தட்டித் தட்டி தடுமாறினார். கருணை சுரந்து வழிய எழுந்து ஓடினேன். கைபிடித்துக் கடக்கச் செய்தேன் பத்திரமாக. நன்றியை வாங்கிக் கொண்டு அவ்வளவு தூர தூரத்திற்கு முன்னே அவரை அம்போவென்று விட்டுவிட்டுத் திரும்பினேன்.

மன்றாட்டு

நீ அப்படிச் சொல்லாதே அதுதான் உண்மையென்றாலும் அதுதான் விதியென்றாலும். நீ சொல்லச் சொல்ல என் ஓடு விழுந்து என் நாய் மடிந்து வருகிறது அப்படிச் சொல்லாதே !

ராஜமாதா

அம்மாவை சந்தைக்குள் அனுப்பி விட்டு காதுகளில் ஓயரைத் திணித்தபடி சங்கீதத்தில் குதித்து விட்டான்  மகன். பெரிய பையை முழுக்க நிரப்பிக் கொண்டு  திரும்புகிறாள். ரொம்பவும் கனக்கிறது போலும்? கைமாற்றி கைமாற்றி இழுத்து இழுத்து நடந்து வருகிறாள். மூன்றடி தூரத்தில் நின்று அழைக்கிறாள் மகனை ம்கூம்... அவன் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். டே.. டேய்.. டே..விஷால்... ஒவ்வொரு விளிக்கும் கொதிப்பில் ஏறிக் கொண்டே போனவள் சட்டென செல்லம் தட்ட சர்ர்ர்ர்ரென  இறங்கிவிட்டாள். கையிரண்டும் இடுப்பில் கூட்டி இதழ்க்கடையில் முத்தரும்ப " அடேய்... என் வெல்லக்கட்டி.." என்பது போல முறைக்கிறாள்.