Skip to main content

Posts

Showing posts from 2026

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

அன்புடையீர்!

  "நா ன் உன்மீது கோபமாக உள்ளேன்" என்றொரு செய்தி வந்தது. நானும் கூட  என் மீது நெடுநெடுங்காலமாக கோபமாகவே உள்ளேன். என்னை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை அதுவேதான் அன்புடையீர் உமக்கும்

மலைச்சாரலில் மையல் யானைகள்

கபிலர் கவித்துவத்திரட்டில் ' குறிஞ்சிப் பாட்டு' குறித்து எழுதியுள்ள கட்டுரை  அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது. காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ? இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு. கட்டுரையை முழுமையாக வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது. https://akazhonline.com/?p=12685

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

வருக! வருக!

  செ ழு செழுத்துச் சிவந்து நிற்கும் மே ஃப்ளவர் மரத்தை  இந்த அதிகாலையில்  கண்ணுறும்   நாய்க்குட்டி ஒன்று மெல்லென  நாலு குரை குரைக்கிறது  புதிய விருந்தை வரவேற்கும் முகமாய்

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே!

கபிலர் கவித்துவத் திரட்டின் அடுத்த கட்டுரை இன்றைய அகழ் இதழில் வெளியாகியுள்ளது  மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “ என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு… பிடிச்சா கட்டிக்குங்க…” என்று ஒரு தமிழறிஞர் தமாசு செய்தார். கபிலர் என்கிற புலவர்க்குப் பதில் இப்போது பட்டிமன்ற நடுவர். பலரும் ஏற்க மறுக்கும் கட்டங்கரிய பெண்களாக பாரி மகளிர். இவ்வளவும் தற்செயலா? கச்சிதமா? ஒரு இயக்குநரின் தனி மூளையில் உதித்த காட்சியாக இது எனக்குத் தெரியவில்லை. நமது ‘ பெரியோர்கள் பலரும் சேர்ந்து நடத்திய நாடகம் ‘ என்றே எண்ணத் தோன்றுகிறது... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு  கீழே உள்ளது. https://akazhonline.com/?p=12062

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

பழந்தமிழ்க் கவிதைகள் ‘ஸ்வீட் பீடா’ க்கள் அல்ல : இசை

"அகழ்" மின்னிதழில் சிறிய நேர்காணல் வந்துள்ளது. கொஞ்ச காலமாக என்னுள் தலைமறைவாகியிருந்த விளையாட்டுப் பையனை மீட்டுக் கொண்ட உரையாடல் என்று இதைத் சொல்லலாம். உடன் உரையாடிய ஆனந்த் இதற்கு ஒரு முக்கியமான காரணம். அவனுக்கும் அகழ் இதழுக்கும் என் அன்பு. "பழந்தமிழ் கவிதைகள் 'ஸ்வீட் பீடா' க்கள் அல்ல" நேர்காணலை வாசிப்பதற்கான இணைப்பு கீழே உள்ளது. நன்றி : அகழ் https://akazhonline.com/?p=11156

பரிசு உண்டு; வெற்றி இல்லை

கபிலர் கவித்துவத்திரட்டின் நான்காவது கட்டுரை அகழ் இதழில் இன்று வெளியாகியுள்ளது. பிரிந்து செல்வோர் ஏன் திரும்பிப் பார்க்கிறார்கள்? பச்சைப் புண்ணுள் கூரியதைச் செலுத்தி, பெருகும் குருதியைக் காண்பதில் அப்படி என்ன ஆனந்தம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே உள்ளது https://akazhonline.com/?p=11732

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

செம்மறு என்கிற இரத்தக்கறை- கபிலர் கவித்துவத் திரட்டு

“போர் படு மள்ளர்” என்கிற சொற்றொடர்க்கு போர் வீரர்கள், போர் செய்யும் மள்ளர்கள் என்று பொருள் சொல்லலாம். ஆனால் நம் உரையாசிரியர்கள் “போரில் அல்லாமல் பிறவகையில் இறத்தலை விரும்பாத” என்றே உரை சொல்கிறார்கள். “படு” என்கிற சொல் அந்த உரைக்கு பொருத்தமாகவும்தான் இருக்கிறது. என்னதான் வீரமறக்குலத் தோன்றல் என்றாலுமே, ஒரு உயிர் அப்படி விரும்புமா என்பது குறித்து எனக்குக் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. “அவ்வளவு சந்தேகத்தோட நீ என்ன மயித்துக்குடா என் பாட்டனின் இலக்கியத்த பாடுற..?” என்று “இடும்பாவனம் கார்த்தி” கர்ஜிக்கும் ஓசைவேறு என் காதில் கேட்கிறது. முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே உள்ளது https://akazhonline.com/?p=11501

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘sharp" - பை தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?

மூன்று கவிதைகள்

உனது லட்சணம் இந்த முறை “போகிறேன்..” என்பதை அவ்வளவு திடமான குரலில் சொன்னாள் போய்விடுவாள்தான் போல? எழுந்தவள் எட்டு வைத்து நடக்கிறாள் பின்னோக்கி… பின்னோக்கி… உச்சிவெயிலில் மொட்டைப் பாறையில் நன்றாகச் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு ஆயுளுக்கும் அசையாத கதியில் அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்? காலிப்பொன் கனத்த செல்வமென கொஞ்ச காலம் உன்னை என் கைகளில் ஏந்தியிருந்தேன். இந்தக் கைகளில்.. இதே கைகளில்.. காலியாகிக் கிடக்கிற இதே கைகளில் இப்பவும் இவைதான் வெறுங்கைகள் ஆகுமோ ? கனத்த செல்வம் சுடர்ந்த கைகள் இளம் இசை மாணவனின் புத்துலகு நான்குமுனைச் சந்திப்பின் மூலையில் இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி ‘ரி’ யிலேயே நின்று கொண்டிருப்பார் அறிஞர் அண்ணா விளையாட்டுச் சிறுவர்கள் தூண்களுக்குப் பின்னே மறைந்து கொண்டு சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் ‘பதநி ‘ டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன. அந்தப் படகு ‘ஸரிகம’ வில் ஏறி ‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது ஒருவன் இன்னொருவனின் முகத்துக்கு நேரே ‘க’ வை நீட்டி வசை மொழிகிறான் ‘ க’ வை அவ்வளவு நெருக்கத்தில் கண்டவனின் கண்கள் இரத்தமாகின்றன. சப்தம் முடக்கப்பட்ட கலவிப் படத்தில் கவ்வி இழுத்து மெல்...

பல்லைப் பிடுங்குவது குறித்து

அ வருக்கு 7 பற்களை கட்டாயம் அகற்றியாக வேண்டும் இரண்டு தவணைகளில்  என்பது ஒரு சின்ன சலுகை. அவருக்குத் தேக பலமில்லை செல்வ வளமில்லை. அம்மா இறந்து போய்  ஆண்டுகள் இருபது ஆகிவிட்டன வந்த அம்மாக்களோ  சென்று விட்டனர் ‘வெடுக்’ , ‘வெடுக்’  என்கிற வலியைத் தவிர இப்போது அவருடன்  வேறு ஒருவருமில்லை பற்றும் கரங்கள் அற்றவருக்கு தவறும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை கடைவாய்ப் பஞ்சைத் தாண்டி  குருதி  வெளியே கொட்டினால் அதைத் துடைக்க கொள்ள அவரது இரண்டு கைகளும் நலமுடன்தான் திகழ்கின்றன. எளிதில்  அசைந்து தராத பல்லை குறடால் அழுத்தி வலு திரட்டி  இழுக்கையில் நினைத்துக் கொள்வதற்கென்றே அவருக்குச் சில நினைவுகள் உண்டு ஆகவே அவர் எதற்கும்  பயப்பட வேண்டியதில்லை