பியானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘sharp" - பை தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை கண்களில் காட்ட 47 ஆண்டுகள் வேண்டுமோ உமக்கு? |
கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே ஆப்பிள் ஒரு இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக் கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல் அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம் எதுவென்றுரைத்தால் அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

Comments