Skip to main content

Posts

Showing posts from August, 2020

ஊட்டு!

நெ ஞ்சே! இனிய கற்பனைகளை நிறுத்தாதே. நீ பார்த்துத் தீராத  உன் சமாதிகளில் ஏதேனும் ஒன்றில் மல்லாந்து படுத்தபடியே அடுத்த கற்பனையைக் கட்டு பலூனில் காற்றை ஊதுவது போல் உன் நெஞ்சில்  வாய் வைத்து ஊது. "மனிதன் அப்பத்தால் மட்டுமே வாழ்ந்து விடுவதில்லை" அவனால்  வானத்தில் பறக்காமல் பூமியில் நடக்க இயலாது. பாட்டி வடை சுடுவதை நிறுத்திவிட்டால் நிலவு வெடித்துவிடும் ஊட்டு! அன்னை ஊட்டுவது போல் உனக்கு நீயே உருட்டு உருட்டி ஊட்டு!

பூனைக்குட்டிகளைத் தடவித்தருவது..

  பூ னைக்குட்டிகளைத் தடவித் தருகையில் கொதிக்கும் சமுத்திரம் வாளிக்குள் தூங்குகிறது. புற்றுக்கட்டிகள் மெல்ல மெல்லக் கரைகின்றன பூனைக்குட்டிகளைத் தடவித் தருகையில் உலகம் இதமாகிறது. பொக்கிஷம் தென்பட்டவுடனே முகமூடிக் கொள்ளையரும் தென்பட்டுவிடுவதால் நமக்கு பூனைக்குட்டிகள் அவசியம். பூனைக்குட்டியைத் தடவித் தருகையில் நம் தலை  மாயத்தில் மறைந்துவிடுகிறது. என் அம்மா செத்துப்போய் அவளை  நடுவீட்டில் வைத்திருந்த ராத்திரியில் எனக்கு யாருமே இருக்கவில்லை. நான்  ரகசியமாக பெர்மூடாசுக்குள்ளிருந்து என் பூனைக்குட்டியை  வெளியே எடுத்து தடவித்தரத் துவங்கினேன். நன்றி ; காலச்சுவடு - ஆகஸ்ட் இதழ்

எரும எமோஜி

  அ ரைமணி நேரத்து பிரிவுக்கு அஞ்சி நீ அனுப்பி வைத்த எருமைகளில் சேறும்,  பாலும் கமழ்ந்தன. அதன் கொம்பிற்  மின்னியதொரு வனமலர். பிறகு வந்ததொரு  கொடுங்காலம்  எருமை வரத்து  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அருகி ஒழிந்துவிட்டது. என்னதான் ஆனதடி நம் எருமைகளுக்கு? நேற்று , அவை அருவெங் கானத்திடை துளிநீர் வேட்கையில்  மயங்கிய போழ்தில் உழுவை சீற, உள்ளம் நடுநடுங்கி கதவுடைத்து வந்து என் கனவுக்குள் ஒளிந்ததடி தோழி!!

சாலையில் ஒரு நாடகம்

ஒ வ்வொரு மனிதனும் தன் நெற்றியில் பொறித்துக் கொள்ள வேண்டிய வாசகமொன்றை ஒரு குட்டி "nano" காரின் முதுகில் பார்த்தேன். "SORRY" எனக்குக் கண்ணீர் முட்டிவிட்டது. nano தன்னைக் கடந்து செல்கையில் துருப்பிடித்து அனத்தும் ஒரு ஓட்டை TVS "பரவாயில்லை..." என்று சொல்லி கையசைத்துப் புன்னகைப்பதைக் கண்டேன்.