Skip to main content

Posts

Showing posts from September, 2021

ஒரு பாடலில் பாடுவது எது?

    ந ஸ்ரத் அலிகான் தன் ஒற்றைக் கரத்தால் வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம் எனக்குத் தெரியும் அந்த வானம்தான் பாடுகிறது ஒருவர் காலியிடமொன்றை உற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார். அங்கு என்னென்னவோ தோன்றித் தோன்றி மறைகின்றன. எனக்குத் தெரியும் காலியில் நிரம்பி வழிபவை எவையோ அவைதான் பாடுகின்றன. ஒருவர் பாடுகிறார் கண்களை இறுக மூடியபடி. உள்ளே அவ்வளவு வெளிச்சம் எனக்குத் தெரியும்  அந்த வெளிச்சம்தான் பாடுகிறது ஒருவர் பாடுகிறார் கரங்களிரண்டையும் புறம் விரித்து ஒரு யாசகன் இறைஞ்சுவது போலே எனக்குத் தெரியும் அந்த பிச்சைதான் பாடுகிறது ஒருவர் பாடுகிறார் எதிரில் ஒருவர் தலையை தாழ்த்திக் கொண்டு கைக்குட்டையால் துடைத்துக் கொள்கிறார் எனக்குத் தெரியும் அந்தக் கண்ணீர்தான் பாடுகிறது சஞ்சய் சமயங்களில் இரண்டு கைகளையும்  முறுக்கிப் பிழிந்து குஸ்தி செய்கிறார். எனக்குத் தெரியும் அந்தக் குஸ்திதான் பாடுகிறது குரல்வளை வெறுமனே ஒரு பாடலைத் துவக்குகிறது  அல்லது முடிக்கிறது.

புதிர்வழியில் ஒருவன்

  தா கமேதுமில்லை ஆயினும் தண்ணீர் கேட்கிறேன். நீ போத்தலை நீட்டுகிறாய் உன் சுண்டுவிரல் நகத்தில் சமைந்து நிற்பது உன் அழகல்ல நீதான் அதை முட்டி முட்டிப் பருகிறேன்.

அன்னையர்

    அ ப்பர் பெர்த்திலிருந்து உருண்டு விழப் பார்க்கிறது குழந்தை ஜன்னல் வழியே உலகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள் அன்னை அதை உதறியெறிந்துவிட்டு பதறியெழுந்து கை விரித்து நிற்கிறாள் அதே கணத்தில் அனிச்சையாய் ஆங்காங்கே எழுந்து கைவிரித்து நின்றனர் சில அன்னையர். நானும் ஒருகணம் அன்னையாகிவிட்டு எனக்குத் திரும்பினேன்.

ஒன்று

  அ ந்தியை படமெடுக்க  கோணம் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அங்கேயும் இங்கேயும் ஓடி கடைசியில்  ஓரிடத்தைக் கண்டுபிடித்து  முழந்தாளில் அமர்ந்தாள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதனோடு பேசத் துவங்கிவிட்டாள். " இடுப்பில் கை வைத்து நில்"   தன் சின்ன மகளை அதட்டுவது போலே அதட்டுகிறாள். அந்தியை அழகி படமெடுக்கையில் அவளைப் பார்த்தால் போதும் அந்தியைப் பார்த்தது போலே.

மினி

  ஆ தாமிற்கும் ஏவாளிற்கும் இடையே  உறவு கனிந்து 90 நாட்கள் கழிந்திருந்தன. 91 வது நாள் இரவில் அவள் அவனை விட்டுவிட்டு ஓடி விட நினைத்தாள். அப்போது முதல் துறவு பூத்தது. பிறகு உறவெனவும் துறவெனவும் வளர்ந்து வந்தது மனித குல வரலாறு சித்தார்த்தன் துறவு போய் பெருஞ்செல்வம் கொண்டு வந்து சேர்த்தான் வாழ்வைக் கண்டடைய விரும்பிய சிலர்  துறவு வழியே கிளம்பிப் போனார்கள். வாழவும் தெரியாத சாகவும் துணியாத  சிலர் துறவுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். உறவு பல்வேறு கிளைவிட்டு செழித்தது போலவே துறவும் செழித்துச் செழித்து கூடவே வந்தது நேற்றிரவு நான் என் DP யை நீக்கிவிட்டேன். இப்போது சின்ன வட்டத்துள் ஒரு சூன்யம் இது ஒரு மினி துறவு பல்லி நீளத்துச் சவுக்கால் சில இதயங்களை சுளீரென விளாசுவது.

குப்பைவண்டிக் கவிதைகள்

1. குப்பை வண்டிக்கு ஒரே ஒரு சோகம்தான். குப்பை ஏதும் இல்லாத போதும் அதைக் குப்பை வண்டி என்றே அழைப்பதுதான். 2.  சமயங்களில் இரண்டு குப்பைகள் தமக்குள் பேசிக்கொள்ளத் துவங்கும். அப்போது நீ அங்கிருந்து ஓடி விட வேண்டும் 3. குப்பை வண்டியில் கிடக்கும் வாடிய ரோஜா நேற்று  ஒரு நறிய கூந்தலில் வீற்றிருந்தது. அதன் மீது ஒரு கவிதை கூட  புனையப்பட்டிருந்தது. 4. குப்பை வண்டி ஒரு தேவாலயம் அதன் முன் மண்டியிடு! 5.  முதன்முதலில்  குப்பை வண்டியைத் தொட்ட போது  என்னுள் இருக்கும் எதையோ தொட்டேன்.  அவ்வளவு மிருது அது. 6.   குப்பை வண்டியை வண்டியாக்கி விட்டால் பிறகு ஒரு சிறுவனைப் போல அதை உருட்டி உருட்டி விளையாடலாம்.