Skip to main content

Posts

Showing posts from November, 2021

தெய்வங்கள்

  ந டக்கவிருந்த பெரும் விபத்திலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய ஒருவன் காலூன்றி மனம் வீங்கி மயிர்கூசக் கூவுகிறான்... "தெய்வமே...! " நடக்கவே நடக்காதென்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று திடீரென நடந்துவிட்ட பொழுதில் கவலையின் படுகுழியிலிருந்து பரவசத்தின் அந்தரத்திற்குத் துள்ளும் ஒருத்தி தலைமீது கைகூப்பி ஏத்துகிறாள்.. "தெய்வமே ...! ஒன்றுமே நடவாத போது உள்ளதொரு தெய்வம் நான் அதன் பக்தன்.

இன்று நாள் எப்படி?

  சி றுபருக்கள் விளையாடும் முகத்தை டம்ளர் தண்ணீரில் கழுவி வாரிப் பின்னாத கலைந்த கேசத்தோடு வாய்க்குள் பிரஷ்சைச் செலுத்தி மேலும் கீழுமாய் வாசித்துக் கொண்டிருந்த ஒருத்தி பார்த்தும் பார்க்காமலும் பார்த்த லாவகத்தில் ஒரு சோகையான அழகிருந்தது இன்றைய நாள் இப்படி இருந்தால் போதும்.

காய்ச்சல் பாட்டு

  கா ய்ச்சல் என்பது கொஞ்சமாக மரணிப்பது இல்லாது போவதின் ஆசுவாசம் காய்ச்சல் என்பது சின்ன ஞானம் போதும் போதும் என்று போர்வையைத் தவிர யாவற்றையும் மறுப்பது காய்ச்சல் வந்தவுடன் அம்மா வந்துவிடுகிறாள் இப்போது நீ எங்கு தலை வைத்தாலும்  அது தாய்மடிதான் அனத்துதல் என்பது காய்ச்சல் பாட்டு அது காய்ச்சலைத் தாலாட்டுவது தூரத்திலிருக்கும் இதயத்தை அழைக்க ஆகச்சிறந்த பாட்டொன்று உண்டெனில் அது காய்ச்சல் பாட்டுத்தான்.