Skip to main content

Posts

Showing posts from September, 2019

பற்றி எரியும் குடிசை

             சிறியமலருக்கு  எட்டு ராட்சத டயர்கள்  மந்தரித்த கயிரில் தொங்கும் ஒரு எலுமிச்சை வேறு  எருமைக் கூட்டமொன்று அதன் மேல் நிற்கிறது அந்த வழியே போன கவிஞன் பற்றி எரியும் குடிசையைக் காண்பதைப் போல் இதைக் காண்கிறான் இப்படித்தான் அவன் நாய்கடிக்கு ஊசி போடப் போன இடத்தில் கணவனால் கடித்து  வைக்கபட்ட லில்லிபுஷ்பத்தைக் கண்டான் லில்லிபுஷ்பத்தை கடித்து வைக்கும் உலகத்தில் வாழ்ந்து வருவதை எண்ணி எண்ணிக் குமைந்தானவன். லில்லிபுஷ்பம் தன்னை லில்லிபுஷ்பம் என்றறியாததால் கணவனுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்க  மருந்தக வரிசையில் நிற்கிறாள் .  சிறியமலர்  தானொரு சிறிய மலரென்று அறிந்து கொண்டால்  மீனைச் சுமக்க முடியாதென்று பாதியில் நின்று விடாதா?

பொன் பூத்தல்

எடுத்து வைக்கவோ செருகிக் கொள்ளவோ இயலும் சூட வேண்டும் ஒரு முகூர்த்தம் பூவும் இருந்து கூந்தலும் இருந்துவிட்டால் சூடிக் கொண்டு விட இயலாது.

CANCELLATION

டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன். ஜன்னலோரத்து வயல் கொக்குகள் சட்டெனப் பறந்து விட்டன.  மூன்று நாட்களின் முந்தைய தாடிக்குத்  திரிகிறது முகம். தூக்கித் தூர எறிந்தவை நமட்டுச் சிரிப்புடன் எழுந்து வருகின்றன டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன் திரும்பவும் நெக்குவிட்ட  உள்ளாடைகளுக்கு மாறுகிறேன் அதே நிலவின் பழைய கிரணங்கள் களிகூர்ந்து கட்டியணைக்க வந்த நண்பன் மனைவியின் வாயிற்குள் சென்று மறைகிறான். டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன். பியர் பாட்டிலின் பீறிட்டடிக்கும் ஊற்று உள்வாங்கி சீலிட்டுக் கொள்கிறது. தானே தன் கல்லறைக் கல்லை அடித்து மூடுகிறான் ஒருவன்.

அந்தோ அப்பாவி !

ஒரே  நாளில் ஒன்பது முறைகூட சொதப்பலாம். ஆயினும் அன்பே, "இச்"சுக் கொட்டாதே எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தின் முன் எவ்வளவு சின்ன " இச்"சைக் கொட்டுகிறாய் நீ மேலும், நமது "இச்" சுக்கள் சேர்ந்து சேர்ந்தன்றோ ஊதிப் பெருக்கிறது அந்தப் பிரம்மாண்டம்.

முட்டிக் கொண்டவர்கள்

18 ஆண்டுகள் கழித்து எதேச்சையாக முட்டிக் கொண்டோம். ஆனந்தப் படபடப்பில் இமைக்காது, நிறுத்தாது பேசிக் கொண்டேயிருக்கிறாள் அந்தப் பழைய பையனிடம். கெட்டுப்போன தாடியை சொரிந்தபடி ஒரு ஓரமாய் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சக்திக்கூத்து

இத்தனை இன்பங்களுக்கிடையே என்னை இறக்கி விட்டுவிட்டு அதே விமானத்தில் பறந்துவிட்டாள் அன்னை. போகும்முன் என்னை ஆரத்தழுவி முகமெங்கும் முத்தமிட்டு அவள் சொன்னதாவது... " எதையும் தொட்டு விடாதே! "

தேடு

ஜிகினா சட்டை பளபளத்து மின்னுவது துவராடை பரிசுத்தத்தில் ஆழ்ந்திருப்பது இரண்டுமே உனக்கு அழகுதான் தம்பி தேடு ஜிகினா இழையோடாத தூய  துவரை.             அல்லது துவரின் சாந்தம் படியாத தூய ஜிகினாவை.

தேநீர் விருந்து

டேபிளே, எங்கே நான் நொறுங்கிவிடுவேனோ என்கிற ஆத்திரத்திலும் வேதனையிலும்தான் உன்னை ஓங்கி ஓங்கிக் குத்திவிட்டேன். கடவுளின் கிருபையால் அப்படி ஒன்றும் ஆகவில்லை. நல்லவேளையாக உனக்கும் ஒன்றும் நேரவில்லை. ஒரு டீ சாப்பிடலாமா?