Skip to main content

Posts

Showing posts from October, 2022

பிள்ளை விளையாட்டு

   ஆ று சந்துகள் கொண்ட இந்த நெடிய வீதியில் உனது வீடு எதுவென்று கண்டுபிடித்து விடுவேன் சங்குபூக்கள் முறுவலிக்கும் முற்றத்தில் ஒரு அல்சேஷன் குதூகலிக்கும் இளம்பச்சையில் சுடரும் அதோ, அந்த வீடு பிராயத்து வானத்தில் எனக்கென்றே ஒரு மீன் இருந்தது ஒவ்வொரு இரவிலும் என் மீனென்று நான் சுட்டும் மீன்  அது எந்த மீனாயினும் என் சொந்த மீன்தான்.

ஏரித்தாமரை சொன்ன கதை

   மு றைத்தபடியே புகைப்படத்திற்கு நிற்கும்  தகப்பனின் கன்னச்சதையை இழுத்துப் பிடித்து " கொஞ்சம் சிரி..." என்று அதட்டுகிறாள் சிறுமகள். அப்புறம் அவருக்கு சிரிப்பை அடக்க அவ்வளவு நேரம்... அவ்வளவு நேரம் பிடித்தது.

இழுபறி நீடிக்கிறது

   இ ன்னும் ஆற்ற வேண்டிய கடமைகள் மிச்சமிருக்கின்றன. இன்னும் வெல்ல வேண்டிய கோட்டைகள் காத்திருக்கின்றன அன்னையின் மீது செய்து கொடுத்த சத்தியங்களில் இரண்டு அநாதைப் பிள்ளைகள் ஆகி விட்டன. ஆயினும் நேற்றிரவு  உன் நினைவு உலுக்கியெடுக்க இன்ஸ்டாகிராமை "install " செய்தேன். விடிந்ததும் லட்சியங்களின் காட்டுக் கூச்சல் தாளாது  ஆக்ரோஷமாக அதை " uninstall " செய்தேன். அவை  உறங்கப் போய்விட்ட வேளை பார்த்து மீண்டும் "install" செய்தேன். எதையுமே பிடிக்காத உச்சி வெயிலின் உக்கிரத்தில் "தொலைந்து போ..." என்று "Uninstall" செய்தேன். தூரத்து வானில் வண்ணங்கள் நீந்தும் இந்த அந்திப் பொழுதில் இதோ, "install" ஆகிக் கொண்டிருக்கிறது.

ஆம்!

  உ ன்னையல்ல நீ வாழும் வீட்டைக் காணவே உன் தெருவில் அலைந்தேன் உன்னையல்ல நீ வசிக்கும் தெருவைக் காணவே இந்த ஊரில் திரிந்தேன் உன்னையல்ல நீ  திகழும் ஊரைக் காணவே இவ்வளவு தூரம் வந்தேன் உன்னையல்ல உன் ஊருக்குச்  செல்லும் வழியைக் காணவே காடு மலை கடந்தேன் உன்னையல்ல நீ வாழும் பூமியைக் காணவே இந்த பூமிக்கு வந்தேன்.

மாதுமை

  நீ உன் காதலைச் சொன்னாய் காரிருளை கதிர்  விழுங்கிச் செரிக்கும்படிக்கு நீ  உன் காதலைச் சொன்னாய் எனது நரைக்கூட்டம் அஞ்சி நடு நடுங்கும்படிக்கு

பிறந்தநாள் பெண்

  அ வள் புத்தாடை அணிந்திருக்கிறாள். பு த்தாடை கொண்டு வந்து சேர்க்காத புதிதால் வீதியை இன்புறுத்தியபடியே மெல்ல மெல்ல நடந்து செல்கிறாள் சிவா என்கிற ஒருவன் மிகச் சரியாக 12; 01 - க்கு  மறக்காமல் வாழ்த்திவிட்டதாக  பேசிக்கொண்டு போகிறாள் நீராடிய கேசத்தை "யாவும் செழிக்கட்டும்" என்பது போல படரவிட்டிருக்கிறாள். இரவு கொட்டிய மழையால்  வீதிக்கு வந்துவிட்ட சாக்கடை நீருள் குளிர்ந்த ஆற்றில் மெல்ல இறங்குவது போல  அடி  எடுத்து வைக்கிறாள் வேறு வழியேயின்றி கொஞ்சமாய்  இறைத்துவிட்ட சேற்று நீருக்காய் ஓட்டுநர் அவளிடம் வருத்தம் சொல்கிறார் "படவேயில்லை..." என்று சொல்லிவிட்டு நடக்கிறாள் இன்று இனிப்பைப் பிட்டு  அவள் எல்லோருக்கும் ஊட்டுவாள் எல்லோரும் இனிப்பைப் பிட்டு அவளுக்கு ஊட்டுவார்கள். அவள் ஒரு மக்குப் பெண்ணாக இருக்கலாம் ஆனாலும் ஆசிரியரால் இன்று அவளை   வசைபாட இயலாது. இன்று அவளது பிறந்தநாள். இன்றுஅவளை  யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

தனியூர்

  இ ப்போதெல்லாம் நீ என்னோடு இருக்க வேண்டியதில்லை. பார்க்க வேண்டியதில்லை பேச வேண்டியதில்லை புகைப்படங்கள் தேவையில்லை நாம் பிணைந்து கிடந்த நாட்களை தோண்டி தோண்டி முகர வேண்டியதில்லை. உனது ஊரின் பெயர் தாங்கிச் செல்லும் பேருந்துகளில் எதுவுமே என்னை கிளர்த்துவதில்லை. தகவல் தொடர்பின் எண்ணற்ற சாத்தியங்கள் தலை மேட்டில் தூங்கும் இந்தக் காலத்தில் அதில் ஒன்று கூட இப்போது  எனக்கு அவசியப்படுவதில்லை. எனக்குத் தெரிந்துவிட்டது. நீ இல்லாது உன்னோடு இனித்திருக்க.

மானுடமே!

  எ ங்கோ கணக்கு பிசகிவிட்டது. அதைச் சரிக்கட்ட  எத்தனையெத்தனை தெய்வங்கள் ஒரு ஆதிதெய்வம் அதற்கு ஒரு துணை தெய்வம் அதைச் சுற்றி  சில தெய்வங்கள் அதன் வழி நூறு தெய்வங்கள் இந்தத் தெய்வங்களைப் பின்னி கொட்டிக் கவிழ்க்கப்படும்  கொத்துக் கொத்தான கதைகள் அந்தக் கதைகள் சொல்லும் ஆகச் சிக்கலான நீதிகள் பெரிய தெய்வங்களோடு பேச முடியாதவர்களுக்கென எண்ணற்ற  குட்டித் தெய்வங்கள் தெய்வமில்லை ஆனால் தெய்வம் போல என்பதாக சில பாதி தெய்வங்கள் தெய்வங்களை விரட்டியடிக்கப்போவதாக சூளுரைத்து வந்து நின்ற அறிவியல் தொங்கிய தலையுடன் பின்வாங்கிய போது ஆங்கு முளைத்தெழுந்த ஆயிரமாயிரம் தெய்வங்கள் தெய்வமே இல்லை என்று வாதாடும் மூர்க்கர்களுக்கென செய்து வைத்த சில வேறு தெய்வங்கள் அபாரம்...! அபாரம்....! இப்போது  கணக்கு சரியாகி விட்டதா மானுடமே?

அப்பொழுது

வா சகன் ஒருவன் வந்திருந்தான் பொடிநடை போகையில் சொன்னேன்.. " ‘கவிதையின் ஆசி’ கவிதை  இந்த மரத்திலிருந்துதான் விழுந்தது..." ஓட்டைப் பற்களுக்குள் உலகமே தெரிய அண்ணாந்து அவன் அதனைப் பார்த்தான். தெய்வமே...! அப்பொழுது நான் அவனைப் பார்த்தேனே!