Skip to main content

Posts

Showing posts from May, 2023

நடுவயதில் ஒரு நாள்

தி டீரெனக் கண்டேன் சுவரில் மிதக்கும் ஒரு ஒளிக்குழம்பை. ஆனந்தக் குழப்பத்துள்  தலைகுப்புற வீழ்ந்தேன். சேறும் சகதியும் ஊரும் புழுவும் மொய்க்கும் ஈயும் மல்லாந்து கிடக்கும் ஒரு பல்லியின் சடலமும் சேர்ந்த ஒரு சிறு குட்டையில் எங்கிருந்தோ வந்த ஒரு சூரியக் கதிர் பட்டுத் தெறிக்கிறது. சுவரிலோ  சேரில்லை சகதியில்லை பல்லியின் சடலமும் இல்லை தெரிவதெல்லாம் முழு ஒளித் தளும்பல். பள்ளிப் பிராயத்தின் அறிவியல் வகுப்பில் ஒளிச்சிதறல், பிரதிபலிப்பு, எதிரொளிப்பு என்றெல்லாம் சொல்லப்பட்டனவே அவையல்ல இந்த நடுவயதில் கன்னத்தில் கைகூட்டி நெடுநேரம் இப்போது நான் கண்டு கொண்டிருப்பது

ஒன் மினிட்

க டற்கரையில் களித்திருந்த ஒரு குடும்பம் போட்டோ எடுத்துத் தரக் கோரியது. கடலையும் வானையும் அவர்களோடு கோர்த்து ஒரு சட்டகம் செய்தேன். க்ளிக் செய்யப் போன கடைசித் தருணத்தில் " ஒன் மினிட் ப்ளீஸ்" என்றொரு குரலுயர்ந்து தடுத்தது. அது ஒரு குட்டிப் பாப்பா. இந்தப் படம் எடுப்பவன் கடைசித் தருணத்தில் சொல்லத் தவறிய அத்தனை ஒன் மினிட்களிலும் மோதி ஒலித்தது அந்த ஒன் மினிட்.

தோரணை

பி ச்சைக்காரனுக்கும் இளம் பைத்தியத்திற்கும் இடையில் இருந்தான் அந்தச் சிறுவன்.  அர்த்தங்கள் அவசியப்படாதவன் என்பதால் சொற்களற்ற சத்தங்களால் கூவிக் கொண்டிருந்தான். பிச்சைக்காரனோ பைத்தியமோ இப்போது அவன் காலடியில் வந்து நிற்கிறது  ஒரு நாய்க்குட்டி அதுவரை தொங்கிக் கொண்டிருந்த  கையைத் தூக்கி அதுவரை  அழுக்கில் ஊறிய இடுப்பில் கூட்டி சாய்ந்த கோணத்தில் ஒரு நோக்கு நோக்குகிறான். பிச்சைக்காரனிலிருந்து பைத்தியத்திற்குப் போகும் வழியில் நீர் எங்கு வந்தீர் மகாராஜா!

கவிதை என்பது எது?

  த ட்டச்சு இயந்திரத்தில் பியானோ வாசிப்பதுதான் அது.

புழுதிவீரன்

  எ ல்லா ஊரிலும் உண்டு ஒரு வழிகாட்டி பயணிகள் பலரையும் உரிய வழிகளில் ஆற்றுப்படுத்தியபடி முன்பு அவனும் ஒரு பயணிதான் புழுதி மறைக்கும் புரவியேறி வந்தவன் எந்த வழி தன் வழியென்றறியாது குழம்பித்  தவித்து பதறித் துடித்து தாரை தாரையாய் கண்ணீர் உகுத்து அந்தோ...! நான்கு முனைச் சந்திப்பொன்றில் பலகையாய்ச் சமைந்துவிட்டான்.