Skip to main content

Posts

Showing posts from November, 2018

சேலம் மற்றுமொரு ஊரே

                                                                                                                                      நண்பனும் கவிஞனுமான  வே.பாபு  11/11/2018 அன்று மாலை சுமார் 6  மணியளவில்  உடல் நிலை கோளாறு காரணமாகக்   காலமானான்.  1974 ல்  பிறந்த பாபு  தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வந்தவன். எனினும் 100- கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளான். தக்கை  என்கிற சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவன்.   பாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளை பலகீனமானவை என்று சொல்லி விடலாம். ஆனால் எல்லா தருணங்களிலும்  பலத்தால்  மட்டுமே பிரகாசித்து விட  முடியாது.  பலகீனம்  பளீரிடும் தருணங்களும் உண்டு. அங்கு துலங்குபவை அவன் சொற்கள். அவை தன் எளிய உடலால் வலிய மனங்களையும் அசைத்துப் பார்த்தன .    தாமிரபரணி படுகொலை, ஈழப்பிரச்சனை, வர்க்க முரண்கள்  என்று சில கவிதைகள் எழுதியபோதும் பாபு ஒரு எளிய  லெளகீக கவிதான். லெளகீகம் அவ்வளவு எளிதில்லை என்பது கூடவே சொல்லியாக வேண்டிய ஒன்று. அவ

காமமோ பெரிது!

        கடைசியாக கண்டடைந்தான் அந்தப் பதுங்கு குழியை. தாவிக் குதித்துவிட்டான் அதனுள். இனி அவனை கொல்வது அரிது வதைப்பது சிரமம் காண்பதே கடினம்

துப்புரவு

                        வெறிச்சோடிக் கிடக்கும்  ரயில்வே பளாட்பாரத்தில்  ஒரு கடப்பா கல்லில் கிடக்கிறேன்  பக்கத்துக் கல்லிற்கு வந்து   சேர்கிறாள்  ஒரு துப்புரவுத் தொழிலாளி  பேச்சோ, சிரிப்போ ஒன்றுமில்லை  சும்மா படுத்திருக்கிறாள்  ஆயினும்,  என் கால்விரல்களில் சொடக்கு  முறிகிறது.  மண்டைக் கொதிப்பு மெல்லத் தணிகிறது   ஓய்ந்திருக்கும் வேளையிலும்  பணி செய்யவே செய்கிறாள்  இந்த இரண்டு கற்களும்  ஒரே கல்லின்  பாதிதான் போலும்   இப்படியே இரு  இப்போதைக்கு எழுந்து விடாதே

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

திருவிளையாட்டு

                           சிக்னல் பொழுதில் கருப்புக் கண்ணாடிக்கு அப்புறம் மங்கலான தோற்றத்தில்    அவ்வளவு ஆதூரமாய் கையாட்டிச் சிரிக்கிறது ஒரு குழந்தை. கண்ணாடிக்கு அப்புறம் மங்கலான தோற்றத்தில் அற்புதங்கள் கையாட்டிச் சிரிப்பதுவோ  மொத்த வாழ்வும்? அடீ... அன்னை ! கண்ணாடிகளைக் கீழிறக்கு இல்லையெனில் உன் பிள்ளைகளை அடக்கு                 நன்றி : உயிர்மை : நவம்பர்- 18

கண்ணே !

                                                   மறுநாளை உபத்திரம் செய்யாத தேர்ந்தெடுக்கப்பட்ட  உயர்ரக மதுப்புட்டி  கொதிக்கும்  குளிரில் ஒரு குளிர்பானம் காரத்தில் திளைக்கும் மட்டன் பெப்பர் சுக்கா முழுக்கவும் மின்னேற்றப்பட்ட துல்லியமான ஆண்ட்ராயட் அதில் சுடச்சுட விற்கப்படும் எண்ணற்ற விஷயங்கள் மறுமுனையில்  கடமைகளிலிருந்து விடுவிக்கபட்ட நண்பர்கள் ஒழுக்கத்திற்குத்  தப்பிப் பிழைத்த தோழியர் சின்ன மகிழ்ச்சியின்  குட்டி முயலை வீழ்த்த எத்தனை ஆயுதங்களை எறிவாய் கண்ணே !                 நன்றி : தினகரன்- தீபாவளி மலர்

ஸ்தோத்திரம்

    உளச்சோர்வும், விசனமும், கண்ணீருமான இந்நாளிற்குள் பாம்பொன்று புகுந்து விட்டது. பாம்பின் முன்னே சோர்ந்திருக்கலாகாது; செயலாற்றியாக வேண்டும். பாம்பின் முன்னே கண்ணீர் சிந்த இயலாது; வீறு கொண்டாக வேண்டும். பாம்பைக் கொன்ற பிறகு மகிழாமல் இருப்பது கடினம் பாம்பு கொன்று விட்டாலோ விசனமும் மடிந்துவிடும். உளச்சோர்வும், விசனமும், கண்ணீருமான நாளை பாம்பை விட்டு பளபளக்கச் செய்தீரே, உமக்கு ஸ்தோத்திரம் ஐயா!

துள்ளி எழுதல்

                                                                   சுமாரான பாடகனொருவன் கைதியானான். கைதியானவுடன் பாடகனவன் துள்ளி எழுந்தான் வெளியே அவனும், பாட்டும் , 1008 விஷயங்களும் புழங்கி வந்தன 1008 விஷயங்களால் சிறை மதிலைத் தாண்ட இயலவில்லை. கம்பிகளுக்கிடையே அவனும், பாட்டும் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்  வெளியே திரிகையில் அவனால் புல் நுனியைச் சரியாக காண இயலவில்லை. எனவே அதைப் பாடக் கூடவில்லை. உள்ளே புல்நுனிப் பனியுள்ளும் பார்க்க முடிந்தது அவனால். இது வரை கைவராத அத்தனை அழகுகளும் மகிழ்ந்து குலாவின அவன் கீதத்தில். சத்தியமாக மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்றவனின் குரலல்ல இது.                                                                                                   நன்றி  : கல்குதிரை இதழ் - 30