Skip to main content

Posts

Showing posts from February, 2022

சு.ரா வின் மந்திரம்

   மோ னைகளின் மயக்கம் ஏதுமில்லை ஒரு எதுகையும் இல்லை அதன் சந்தமாவது நம் நெஞ்சத்து ஏக்கம் அதில் லயம் கொள்வது குருட்டு நம்பிக்கைகளின்  இதம் மந்திரம் போல் இல்லாததொரு மந்திரம் அது ஆயினும்  மிக உறுதியாக மந்திரம் நம் கைவசம் உள்ள கடைசி மந்திரம் மந்திரங்களுக்கு ஆற்றல் உண்டு மந்திரங்களில் மாயம் உண்டு. நண்பா, உன் ஒரு கையை நெஞ்சில் வைத்துக் கொள்ள வேண்டுமா? வைத்துக் கொள்! அழுகை பீறிட்டு வருகிறதா? அதை அடக்க முனையாதே!  நாம் ஒரே குரலில் சேர்ந்து சொல்வோம்... எல்லோரும்... எல்லோரும்... சற்று... சற்று... நிம்மதியாக.... நிம்மதியாக.... வாழும்... வாழும்... காலம் ஒன்று வரும். காலம் ஒன்று வரும்.

ஒரு மர்மக்கதை

  நே ற்று மேலும் ஒரு பொன்மொழியை உண்டேன். அது என் அறிவை அகண்டமாக்கியது எலும்பை இரும்பாக்கியது. பொன்னாக மாறிவிடத் துடிதுடிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் என்பதால் விடாது பொன்மொழிகளில் மூழ்கி  வருகிறேன். அவை ஒருவன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் வல்லமை மிக்கவை என்பதால் புரண்டுவிழத் தயார் நிலையில் அமர்ந்தே வாசிக்கிறேன். ஆயினும் இரும்புகள் மீண்டும் எலும்பாகும் மர்மம் எங்குதான் நிகழ்கிறது?  வாழ்வு முழுக்க கூடவே வருவேன் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்த காதலியின் திருமண ஆல்பம் போல் புன்னகைக்கின்றன  இந்தப் பொன்மொழிகள். உணவை உண்டால் அது கொஞ்சம் சக்தியாகும் கொஞ்சம் வெளியேறும் அள்ளி அள்ளி நான் உண்ட  பொன்மொழிகள் அத்தனைக்கும் என்ன ஆகிறதோ? ஏது ஆகிறதோ?

நடனத்தை நடனத்திற்காக ஆட வேண்டும் என்றார் ஒருவர்

  கு ரங்கினத்திலொரு குரங்கு முதன்முறையாக ஒரு கனியிலிருந்து இன்னொரு கனிக்குத் தாவாமல் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவியது. மனித இனத்திலொரு மனிதன் முதன்முறையாக கிழங்கைத் தோண்ட ஓடாமல் நிலவை நோக்கி நடந்தான். பல யுகாந்தரங்களுக்குப் பிறகு தோன்றியது ஒரு மொழி. அம்மொழியில் இவை "நடனம்"  என்றழைக்கபட்டன.

களிற்றுநிரைகளின் காலி

க ம்பளி போய்விட்டது ஆண்டாள் போய் விட்டாள் ஆயர்பாடி போய் விட்டது காய்ச்சலும் இருமலும் போய் விட்டன. கூம்பு ஹாரன்கள் போய் விட்டன. 'நாய்க்கூட்டம்' போய் விட்டது. குளிர் காய்ச்சிய தேநீர் போய்விட்டது விக்ஸ்புட்டிக்குள் ஒளிந்திருக்கும்  காமம் காணாமல் போய் விட்டது உள்ளங்கைகள் ஒன்றோடொன்று உரசும் காட்சிகள் போய் விட்டன உதட்டு வெடிப்புகள் போய் விட்டன. ஓயாத பொங்கல் மணம் ஓய்ந்து போய் விட்டது. மாட்டுத்தொழுவத்து லீலி மலர் போய் விட்டது. முற்றத்துக் கோலங்கள் போய் விட்டன. அதனோடே போய்விட்டன குதிகால் பிறைகளும். நீர்த்துளிகள் மொய்க்கும்  விரிநறுங்குழலிர் ஐயோ...!  போயே விட்டனர். இவை போல் இன்னும் பல பரிவாரங்கள் உனக்கு இத்தனையும் கூட்டிக் கொண்டு எங்குபோய் மறைந்தாய் மார்கழி?

திடீரென

  அ ந்த ஸ்கூட்டிப் பெண் திடீரெனக் குனிந்து முன்னே நின்றிருக்கும் தன் சின்ன மகனின் கன்னத்தில் முத்தம் வைக்கிறாள். எதற்கு? என்கிற  வினாவை அதற்குள் அவன் கற்றிருந்தான். எதுக்கும்மா? எதுக்கும்மா? என்று வழிநெடுக நச்சரித்துக் கொண்டே வருகிறான் சிறுவன். சிரித்துச் சிரித்து மழுப்புகிறாள் அந்த அன்னை.

தீந்துளி

  கா ட்டுவழிப் பயணத்தில் கண்டேன் மண்ணில் புரண்டு கொண்டிருந்தன இரண்டு காடைக்குஞ்சுகள் வாகனச் சத்ததிற்கஞ்சி அவை உந்தி எழுகையில் மங்கலான உருவத்தில் கூடவே எழுந்தன இரு புழுதிக் காடைகள் ஒரு நொடியே ஆகி அழிந்த தீந்துளி காடைகள் அப்போதே பறந்து போய்விட்டன இதோ இந்தக்கனவு வரை வந்துவிட்டன புழுதிக் குஞ்சுகள். கண்ட கணமே மறைந்து விடும் ஒன்று கூடவே வருமோ?

இனிப்பு தானா அது?

  கா ரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்ந்தால் அதனை அப்படி உற்றுப் பாராதே! துவக்கி விடாதே ஆராய்ச்சிகள் எதையும் சந்தேகித்துக் கடந்து விடாதே! அதுவே கதியென்று  அழுது கொண்டே அமர்ந்துவிடாதே! காரணமற்று  இனிக்கும் கணத்தை பேப்பரில் பிடிக்க முயலாதே! அப்போது வந்து விடுகிறது பார் ஒரு காரணம் ஒழுகி விடுகிறது பார் அந்த இனிப்பு காரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்கையில் அப்படிப்  பதறிப் பதறித்  துடிக்காதே!  இனிப்பு தானே அது?

பொறாமையிடம் கொஞ்சம் இரக்கமாயிருங்கள்!

  பொ றாமையை ஆழ்ந்து நோக்கினால் அது அன்பாக மாறிவிடும் என்று சொன்னார்கள். நான் நோக்கத் துவங்கினேன் அவ்வளவு ஆழமாக அவ்வளவு திடமாக அது  ஆடவில்லை அசையவில்லை நானும் விடவில்லை நோக்கிக் கொண்டே இருந்தேன். திடீரென்று அதன் கண்களிலிருந்து தாரைகள் வழிந்து வழிந்து வந்தன. நிற்காமல் அழுதாலும்  அது அன்பாக மாறியது போல் தெரியவில்லை. அழுகிற பொறாமைக்கு என்ன பெயர் வைப்பதென்று  எனக்கும்  தெரியவில்லை.