கம்பளி போய்விட்டது ஆண்டாள் போய் விட்டாள் ஆயர்பாடி போய் விட்டது காய்ச்சலும் இருமலும் போய் விட்டன. கூம்பு ஹாரன்கள் போய் விட்டன. 'நாய்க்கூட்டம்' போய் விட்டது. குளிர் காய்ச்சிய தேநீர் போய்விட்டது விக்ஸ்புட்டிக்குள் ஒளிந்திருக்கும் காமம் காணாமல் போய் விட்டது உள்ளங்கைகள் ஒன்றோடொன்று உரசும் காட்சிகள் போய் விட்டன உதட்டு வெடிப்புகள் போய் விட்டன. ஓயாத பொங்கல் மணம் ஓய்ந்து போய் விட்டது. மாட்டுத்தொழுவத்து லீலி மலர் போய் விட்டது. முற்றத்துக் கோலங்கள் போய் விட்டன. அதனோடே போய்விட்டன குதிகால் பிறைகளும். நீர்த்துளிகள் மொய்க்கும் விரிநறுங்குழலிர் ஐயோ...! போயே விட்டனர். இவை போல் இன்னும் பல பரிவாரங்கள் உனக்கு இத்தனையும் கூட்டிக் கொண்டு எங்குபோய் மறைந்தாய் மார்கழி?  | 
                       என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது.   வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம்   சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன   அதற்குள் அவ்வளவு அவசரம்    வாழ்வைக் கண்டு பிடிக்க    இப்படிக்   கிளம்புபவர்கள்   பொதுவாக திரும்பி வருவதில்லை   கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை     அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்    எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல்   அவனுக்குத் தெரியும்    வாழ்வின் அர்த்தம்     ஆடென.                  நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18    
Comments