Skip to main content

Posts

Showing posts from April, 2020

நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்

நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன் அழகான கண்ணாடிப் பேழைக்குள் பூத்திருக்கும் கேக்குகளை என் பிராயத்தில் இவ்வளவு வண்ணங்கள் இல்லை இவ்வளவு வடிவங்கள் இல்லை இவ்வளவு அலங்காரம் இல்லை இவ்வளவு உயரமோ தடிமனோ இல்லை. நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன் உலகத்து இன்பங்களையெல்லாம்  வழித்தெடுத்து  வந்து நான்கு அடுக்குகளாய் வடித்து வைத்த கேக்குகளை எச்சில் கொதிப்பது நின்று விட்டது எடுத்து ஒரு கடிகடிக்கத் தேவையில்லை இப்போது நான் பார்க்கத் துவங்கியிருக்கிறேன் என் சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் உள்ளது. ஆனாலும் நான் வெறுமனே பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.

திற !

ஒரு காம்பவுண்டு வரிசை வீட்டை எதேச்சையாகக்  கடக்கும்படியாகிவிட்டது. கிரிக்கெட் பந்தெனச் சீறி வந்து  தலையைத் தாக்கியது ஒரு சொல். " மூடு..."  ஜன்னலில் தெரிந்தாள் ஒரு பதுமை உண்மையில் அவள் அதை அவ்வளவு சத்தமாகச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவ்வளவு சத்தத்தில் ஒலித்துவிட்டது. அவள் கூனிக்குறுகிப் போய்விட்டாள். விருட்டெனத் தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி ஜன்னலை அடித்து தன்னைச் சாத்திக் கொண்டாள் செல்லமே! "மூடு" கூட இல்லாமலா   வீட்டில் இருக்க முடியும்? " மூடு" கூட இல்லாமலா   குடும்பத்தில் இருக்க முடியும்? " மூடு" கூட இல்லாமலா  உறவில் இருக்க முடியும்?  "மூடு" கூட இல்லாமலா உயிரோடிருக்க முடியும். மூடாதே திற!