Skip to main content

Posts

Showing posts from November, 2020

தீபாவளி வாழ்த்துகள்!

அ ம்மா அப்பாவிடம் அவ்வளவு கனிவோடு சொன்னாள்... "தீபாவளியன்னைக்கு அஞ்சாறு குலோப் ஜாமூன்  சாப்டா அதெல்லாம் ஒன்னும் ஆயிடாதுங்க..." அம்மாவின் உறுதிப்பாடு கேட்டு க்ளூக்கோ மீட்டர், குலோப் ஜாமூன் இரண்டுமே ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டன. குலோப் ஜாமூன் ஏதுமறியா ஒன்று அம்மா  அதனுள் காலத்தைப் புகட்டிவிட்டாள். அது ஒரு சடப்பொருள் அம்மா அதில் உயிரைப் பற்றவைத்தாள். மனமற்ற அதனுள் இரக்கத்தைப் பெருகப்பண்ணினாள். அப்பா கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டார். அடுத்த முறையிலிருந்து "குருவிவெடி" நான்கு கட்டுகள் சேர்த்து வாங்கவேண்டும் குலோப் ஜாமூன் வெடிப்பதற்கு.

கடுகடுப்பானவர்கள்

தீ பாவளி வந்துவிட்டது துப்புரவுப் பணியாளர்கள் பண்டிகைப் பணம் கேட்டு வருகிறார்கள். அவள் இளையவள்  மற்றும் கடுகடுப்பானவள் அநேக வீடுகளில் அவளை மேலும்  கடுப்பாக்கி அனுப்புகிறார்கள். மூன்று தெருக்களை மேய்க்கும்  அவளைப் போன்றே முந்நூறு மனிதர்களை மேய்க்கும் நானும் கடுகடுப்பானவன். இரண்டு நூறு ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினேன் அதே கடுப்போடு. முகம் முழுக்க அலைபரப்பி  அப்படியொரு சிரிப்பு அவளுக்கு. யார் கொடுத்தது? யார் கொண்டது? அந்தச் சிரிப்பை நாளெல்லாம் ஏந்திக்கொண்டு சுடர்விடுவதோ நான்.

கர்மவீரன்

  2 நிமிடத்திற்கு ஒருமுறை வாட்ஸ் அப்பை திறந்து பார்ப்பேன் 5 நிமிடத்திற்கு ஒருமுறை இ- மெயிலைத் திறந்து பார்ப்பேன் பேஸ்புக்கைத் திறக்கிறேன் மெசஞ்ஜரைத் திறக்கிறேன் மெசேஜைத் திறக்கிறேன் எங்கேயும் இல்லை எனக்கான செய்தி. அது ஒரு புழுவாகி கல்பகாலத்திற்கும் அப்பால் ஊர்ந்துவருகிறது. இவனோ திறந்து திறந்து திறந்து திறந்து திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.