Skip to main content

Posts

Showing posts from October, 2016

நோய் – வாய்ப் - படுதல்

அவ்வளவு வலுக்கட்டாயமாக தலையை வலப்பக்கம் திருப்பிக் கொள்ளாதே பிறகு ஒரு நூறு கைகள் ஒன்று கூடி அதை இடப்பக்கம் இழுக்கும்     

                              நன்றி : கல்கி தீபாவளி மலர்

ஆண்பால் – பெண்பால் – அன்பால்

 “ குடும்பம் எனும் வலிய தாம்புக்கயிற்றால்  இழுத்துக் கட்டபட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான்..”  இது என்னுடைய வரி தான். இந்தக் கட்டுரையை துவங்கும் முன் அந்த நாயிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் “ எவ்வளவு புரட்சிக்குறைவாக தோன்றினாலும் உண்மையையே குரை “ ”என்பதையே.
    “ அந்திக்கருக்கலில் ஒரு மனிதன் நடந்து வந்துகொண்டிருந்தான் ” என்கிற வரியை ஒருவர் வாசிப்பதாகக் கொள்வோம். அவர் மனதில் விரியும் “மனிதன் “ நிச்சயம் ஒரு ஆண்தான். நமது மொழி ஆண் மையப்படுத்தப்பட்டது  என்பதை ஒரு எழுத்தாளனாக என்னால் அடிக்கடி உணர முடிந்திருக்கிறது. பள்ளிப்பருவத்தில் ஒரு மிஸ் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து , டீச்சர்ஸ் ரூமில் இருக்கும் இன்னொரு மிஸ்ஸிடம் கொடுத்து வரச்சொன்னார். நான் பள்ளி முழுக்க தேடியலைந்து விட்டு திரும்ப வந்து அதை அவரிடமே கொடுத்து விட்டேன். ஏனெனில் பள்ளியில் “ ஆசிரியர் அறை “ தான் இருந்தது. “ ஆசிரியைகள் அறை “ யை எங்கு தேடியும் காண வில்லை. “ ஆசிரியர் அறை “ என்றால் அங்கு மாஸ்டர்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று என் புத்தியில் யார் வந்து புகட்டியது ? “ ர் “ விகுதி ஆண்களுக்கானது என்பதை அந்தச் சிறுவனுக்கு …

ஓட்டுநர்

கறுத்த முகத்தில்
நரையோடித் திரண்டிருந்தது
தோளில் அழுக்குத் துண்டோடு
காக்கிச்  சீருடையில் இருந்தார்
வார் அறுந்த செருப்பைக் கண்டு
பிழையாக
ஒரு கணம்  இரக்கம் கொண்டு விட்டேன்
அப்போதுதான்
அவர் தன் சைனா பொபைலை
வெளியே எடுத்தார்
எதையோ தேடி முடுக்கி விட
" வானம் தாலாட்டி  மேகம்  தள்ளாடியது "
கமலை விடவும் பிரமாதமாக  தலையாட்டுகிறார்
பாடகனை  விடவும்  பிரமாதமாக  பாடுகிறார்
என்னைக் காட்டிலும் பத்து மடங்கு லயிக்கிறார்
ஐயா... என்ன ஓட்டுகிறீர் ?
புஷ்பகவிமானம் தானே ?


                                                       நன்றி : ஆனந்தவிகடன்   

எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !

கொண்டை சுற்றுவதில் வல்லவரான கடவுள்
ராணி ஸ்ரீயையும், நீலிஸ்ரீயையும்
உன்னோடே கலந்துகட்டி
என் முன்னே அனுப்பினார்
அதில் எந்தக் கொண்டை உன் கொண்டை
என்றறிவதில் 
பரிதாபமாகத் தோற்றுவிட்டேன் ...
எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !


எவ்வளவு குடித்தாலும் 
ஒழுங்காக வீடு  சேர்ந்து விடுவேன்
லுங்கிவிலகி நான் ரோட்டோரம் கிடந்தது 
ஒரே ஒரு நாள்தான் ...
சரியாக, மிகச்சரியாக
அன்று தான் உன் வீட்டில்  தேங்காய்ச் சட்னி
தீர்ந்துவிட்ட  பொட்டுக்கடலையை வாங்கி வர
நீ அண்ணாச்சி கடைக்கு வந்தாய்...
ஏன் வாணி உன் வீட்டில் அன்று தக்காளி சட்னியாக
இருந்திருக்க கூடாது ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


அப்படி தக்காளிசட்னியாகவோ, கத்தரிக்காய் குழம்பாகவோ மட்டும்
இருந்திருந்தால்
இன்னேரம் நமது வசந்தத்து மாளிகையில்
இரண்டு “தேன்கள் ” ஓடியாடாதோ வாணிஸ்ரீ ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


கொஞ்சம் குடித்தால்தான்
அந்த அறையின் கதவுகள் திறக்கின்றன
அங்குதான் அந்த வீணை இருக்கிறது
அங்குதான் நீயும் இருக்கிறாய்
நீ வாசிக்கக்  கூட வேண்டாம் வாணிஸ்ரீ
வெறுமனே அது உன் தொடையில் இருந்தால் போதும் ...
இதையெல்லாம் கண் ஆரக் காணாமல்
கேவலம் ஈரலைப் ப…