Skip to main content

Posts

Showing posts from April, 2022

வங்கிக் கொள்ளையனும் மேலாளருமான ஒருவன்

  இ ளம்வயதில் அவன் ஒரு தீவிரப் போராளியாக இருந்தான் நெற்றியில் இறுக்கிக் கட்டப்பட்ட சிவப்பு ரிப்பன் உறக்கத்திலும் கூடவே இருந்தது சொத்து ஓரிடத்தில் குவிவதை காணச் சகியாது துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஒரு வங்கிக்குள் புகுந்தான் அந்த இடம் அவ்வளவு மிடுக்காக இருந்தது. அதனுள் இதமான குளிர் நிலவியது. அங்கு நேர்த்தியும் அழகும் பட்டொளி வீசின. குறிப்பாக அந்தச்  சுழலும் நாற்காலி... அதில் ஏதோ ஒரு மாயம் இருந்தது. துப்பாக்கியை ஒரு மூலையில் சாய்த்து வைத்துவிட்டு அதில் அமர்ந்து கோப்புகளைப் பார்க்கத் துவங்கிவிட்டான்.

வா

  வ ந்த உறக்கத்தை தெரு முக்கில் ஆள் வைத்து நான் தான் துடிக்கத் துடிக்கக் கொன்றேன் வராத காய்ச்சலை கொதிக்க கொதிக்க கைகளில் ஏந்தி நான் தான் உடல் முழுக்க  படர விட்டேன். நீ கொஞ்சம் தட்டிக் கொடு.

பாடாது பாடும் பாடல்கள்

  அ ந்திக்கடல் மணலில் கிடாரை மீட்டியபடி ஒருவன் பாடிக் கொண்டிருக்கிறான் அருகே மல்லாந்து வான்நோக்கிக் கிடக்கிறான் ஒருவன் அந்திக்கடல் மணலில் ஒருவன் பாடிக் கொண்டிருக்கிறான் ஒருவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். தூரத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாடும் பாடலை ஏற்கனவே தெரியுமெனக்கு கேட்கும் பாட்டையும் பார்க்கும் பாட்டையும் இன்றுதான் சந்திக்கிறேன்  முதனமுதலில் அந்திக் கடல்மணலில் மூவர் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உம் ஒலிவ இலைகள் வதங்காது திகழட்டும்!

  எ து என் இரத்தத்தில் சாக்கடையைக் கலக்குமோ எது என் கண்ணீர் கொப்புளங்களை வெளிச்சத்தில் வைக்குமோ எது என்னை அழுக்காறின் பள்ளத்தாக்குள் தலைகுப்புறத் தள்ளுமோ எது என்  என்பது கிலோவை எறும்பாக்கிப் போடுமோ எதன் முன்னே எவ்வளவு சிரித்தாலும் எனக்குச் சிரிப்பு வாராதோ எதைக் கண்டால் என் கண்களில்  விடம் கொதித்து நொதிக்குமோ எதைக் காணுகையில் என் உறையிட்ட குறுவாள் புரண்டு புரண்டு துடிக்குமோ இதோ அது எதிரில் வருகிறது... கடவுள் பாவமென்று தலையைக் குனிந்து கொள்கிறேன்.

அபிநயத்தி

நீ மட்டும் நடனிப்பதை நிறுத்திவிட்டால் யாவும் நின்றுவிடும். ஆந்தைக்குத் துணையாக மொட்டை மாடியில் திரிய மாட்டேன். துருவேறிய பழந்தகரக் குரலால் பாட்டெடுக்கத் துணிய மாட்டேன் ஓய்வில் இருக்கும் சொற்களை கசையடியால் துன்புறுத்தி கவிதையில் கட்டி இழுக்க மாட்டேன். மகளின் பிறந்த நாளை மறந்துவிட்டு அவளை கண்ணீர் வடிக்க விட மாட்டேன் நீதிநூல் குவியல் மீது செருப்புக் காலால் நடக்க மாட்டேன் நாவே அஞ்சி நடுநடுங்கும் பொய்களை ஒரு போதும் சொல்ல மாட்டேன் அடீ ! பேச்சைப் பாடாதே! பேச்சில் ஆடாதே! நடனம் ஒரு பொல்லாத தீங்கு ஆயினும் நீ அதனை நிறுத்தாதே!

மகத்தான விஷயங்களில் ஈ மொய்ப்பது எப்படி?- பி.ராமன்

  நா ன் இளைஞனாக இருந்த இருபத்தைந்து ஆண்டுகளை விடவும் இன்று மலையாளக் கவிதை நூல்களில் எழுத்துருக்களின் அளவு பெரிதாகி இருக்கிறது. இந்த அளவு மாற்றம் நடுவயதினனான எனக்கு ஆசுவாசமளிக்கிறது. மலையாளக் கவிதைப் புத்தகங்களில் இந்த எழுத்து மாற்றம் வாசகர்கள் நடுவயதை எட்டியதற்கு ஏற்பப் பெரிதுபெரிதாகி வருவதாக இருக்கலாம். பார்வைக் கூர்மையுள்ள இளைஞர்கள் புத்தக வடிவத்தில் அல்ல; திரையில்தான் கவிதையை வாசிக்கிறார்கள் என்ற அவதானிப்பில் பொருத்தம் இருப்பதனாலாகவும் இருக்கலாம். கடினப்பட்டுத் தமிழ் வாசிக்கக் கற்றுக்கொண்ட எனக்கோ கவிதைப் புத்தகங்களின் எழுத்துருக்களின் அளவுக் குறைவு தொந்தரவை அளிக்கிறது. லென்ஸ் வைத்து வாசிக்க வேண்டும்போலத் தோன்றுகிறது. ‘காலச்சுவடு’ வெளியீடுகளிலாவது எழுத்தின் அளவை ஒரு சைஸ் அதிகப்படுத்த வேண்டும் என்று சுகுமாரன் சாரிடம் கோரிக்கை வைக்கத் தோன்றுகிறது. ஆனால் தொடர்ந்துவரும் எண்ணம் அதைத் தடுக்கிறது. ஏராளமான இளைஞர்கள் தமிழ்க் கவிதைப் புத்தகங்களை ரசித்து வாசிக்கிறார்கள். எனவேதான் இளைஞர்களின் கண்ணுக்குப் பொருத்தமாக இந்தக் குறுகுறு எழுத்துக்கள்போல. நடுத்தர வயதினனான நானும் இசையின் கவிதைகளை ரசித்து

உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

  எ ன் மூன்றாவது காதலி ஆத்திரமும் அழுகையும் பொங்க முகத்துக்கு நேரே  விரல் நீட்டிக் கேட்டாள்... "உண்மையாகவே  நீ என்னை நேசித்தாயா?" உண்மையைச் சொல்ல சிந்திக்க வேண்டியதில்லை. மறுகணமே சொன்னேன் "அன்னை மீது ஆணையாக  அவ்வளவு நேசித்தேன்!" "பிறகெப்படி ஒன்பதாவதுக்குப்  போனாய்?" "நேசித்துக் கொண்டேதான் அன்பே!"

இருமலர்கள்

கா ம்பவுண்டு சுவரையொட்டி தழைத்துத் தலையாட்டி நின்றது செம்பருத்தி. சிவந்த இதழ்கள்  ஓயாமல் உரசி உரசி கல்லும் மண்ணும் கரைந்து போய்விட்டன சாம்பல் வண்ணத்து மலரும் ரத்தச் சிவப்பு மலரும் கதை பேசிச் சிரிக்கின்றன இப்பொழுது ஒன்று  அழுகையில் இன்னொன்று துடைத்து விடுகிறது.

உள்

வி டுமுறை நாளின் குதூகலங்களைத் துவக்கி வைக்க " சும்மா...ஒரு ரவுண்டு கூட்டிட்டுப் போ...' என்கிறாள் மகள் அப்பன் அவளை அள்ளியெடுத்து முன்னே இடுக்கிக் கொண்டு சின்ன வீட்டையே சுற்றிச் சுற்றி  வட்டமடிக்கிறான். எனக்குப் பிடிக்காத கணக்குப் பாடத்தில்  புரியாத அளவாக இருந்த உள் வட்டம் என்பது இதுதானோ கனியமுதே!?