Skip to main content

Posts

Showing posts from October, 2023

இன்ஞ் டேப்புகளுக்கு எதிரான முழக்கம்

  கா தல் நிரம்பி வழிவதிலிருந்து துவங்குகிறது நீயோ கவனம், கவனம் என்று பதறுகிறாய் காதலின் பசியது காயசண்டிகை நீயோ  போதும், போதும் என்று மறுதலிக்கிறாய் ஒளிந்து கொள்ளும் அளவு சிறுத்தது உறுதியினும் உறுதியாக காதல் அல்லடி கண்ணே லூசுப் பெண்ணே! இன்ஞ் டேப்பிற்கும் காதலுக்கும் என்னடீ உறவு? காதலை ஆகாய மட்டத்திலிருந்துதான் அளக்கத் துவங்க வேண்டும் அன்பே!

சும்மா இருக்க முடியாதவனின் பின் மதியம்

சு ம்மா இருக்கும் போது  காலாட்டிக் கொண்டு  சும்மா இருக்க வேண்டும். நான் ஒரு பழைய அகராதியைப் புரட்டினேன். அது ' அகம் ' என்றால் ' பாவம்' என்றது. காலாட்டம் நின்று விட்டது. என் அகம் பாவம் என்பது எனக்கே தெரியும் நான் என் அம்மாவின் அகம் ? என்றேன்  அது ஆம்  என்றது கல்யாண் ஜியின் அகம்?  அது ஆம் என்றது. கார்ல் மார்க்ஸின் அகம்? அது ஆம் என்றது. நல்லதங்காளின்  அகம்? அது ஆம் என்றது திருமாவளவனின் அகம்? அது ஆம் என்றது அன்னை தெரசாவின் அகம்? அது ஆம் என்றது. மகாத்மா காந்தியின் அகம்? அது ஆம் என்றது. ஆம்! ஆம்! ஆம்! கண்ணீர் என்றால் கண்ணீர்தானே அகராதியே?

காதல் போயின்...

வீ ணாகி வழியும் தெருக்குழாய் நீரை பொறுப்பேற்று அடைப்பதற்காக... பள்ளி வாகனத்திலிருந்து கையசைக்கும் சின்னஞ் சிறு கரங்கள்  ஏமாந்து போகாதிருப்பதற்காக... மலர்கள் சொல்லும் காலை வணக்கத்தை செவி மடுத்துப் புன்னகைப்பதற்காக... நீண்ட க்யூவில்  கட்டக் கடைசி ஆளாய்  சாந்தமாக  நிற்பதற்காக... துப்புரவு வண்டியின் மணியோசையிலிருந்து ஒரு புதிய பாடலைத் துவக்குவதற்காக... ஒவ்வொரு மகளையும் என் மகள் பெயர் சொல்லி அழைப்பதற்காக... நறுமணத் தைலத்தால் என்னை அலங்கரிக்கும் பகட்டிலிருந்து விடுபட்டு நானே ஒரு நறுமணப் புட்டியாகி  மணமூட்டுவதற்காகத்தான் அன்பே! நான் உன்னை என் காதலி   என்று கற்பனை செய்து கொள்கிறேன். நான் உன்னை என் காதலி என்று கற்பனை செய்து கொள்ளும் காலங்களில் அன்பே! இந்த பூமியின் இதயத்துள் கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்கும் திட்டத்திற்கு சற்றே ஓய்வளிக்கிறேன்.