Skip to main content

Posts

Showing posts from April, 2023

கொழு நிழலி

  உ டற்பயிற்சி மைதானத்துக்கு அருகில் வேங்கை மரத்திற்கு அடியில் இன்னொரு வேங்கை மரமென திகழ்கிறாள். அவள் கொழு நிழலின்  கீழ் குழுமியிருக்கின்றனர் சிலர். இளமையைக் கடந்து விட்டவள் வசீகரம் குறைந்தவள். காமத்தால் எரிக்க முடியாதவள் கொஞ்சம் கலகலப்பானவள் ஒருவன் நெல்லிக்கனி சாறு பருகிக் கொண்டிருக்கிறான் ஒருவனுக்கு கொள்ளு ரசம் ஒருவன் அவித்த சுண்டலை வாங்குகிறான். அவளது வதங்கிய கீரையை யாரும் நம்புவது போலத் தெரியவில்லை. ஆயினும் அவள் அண்மையில் இருக்கையில் இரத்தம் சுத்தகரிக்கப்படுவதை நன்றாகவே உணர முடிகிறது வயிற்றுப் புண்  உடனடியாக சரியாகி விடுகிறது. அவள்  "இதயத்திற்கு நல்லது"  என்று  எழுதிப் போட்டிருப்பதை படித்துப் பார்த்து  இதயம்  "ஆம்" என்கிறது. பலஹீனத்தால் துவண்டிருக்கும் இந்த அதிகாலையில் முளைகட்டிய பயிர் அருகில் கொஞ்ச நேரம் நின்று விட்டு வந்தேன்.

கண்ணாடிச் சில்லுகள் பதித்த கோட்டை மதில்

நமது சங்கக்கவித் திரட்டில்  பிரிவே அதிகம் பாடப்பட்டுள்ளது.  நமது கவிகள் பாலை, பாலை என்று பறந்திருக்கிறார்கள். காதலரைத் தேடி ஊர் ஊராக அலைந்ததன் பொருட்டே வெள்ளிவீதியும், ஆதிமந்தியும் தனித்தன்மையுடன் நினைவு கூறப்படுகிறார்கள்.  காமத்துப்பாலில் அதிகம் பாடப்பட்டதும் கூடலின் காமம் அல்ல, பிரிவின் காமம்தான். அய்யன் பிரிவை உருகி உருகி எழுதியுள்ளார்.பிரிவு ஒரு சுவை.  எழுதித் தீராத சுவை.  தலைவன் பிரிய நினைக்க நினைக்கவே தலைவியின் கைவளை நெகிழ்ந்து வீழ்கிறது. அல்லது தமது கைவளை தாமாக  நெகிழ்ந்து வீழ்வது கண்டு தலைவன் பிரிய நினைக்கிறான் என்பதை துப்பறிந்துவிடுகிறாள் தலைவி. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்  வல்வரவு வாழ்வார்க்கு உரை. என்கிறாள் ஒருத்தி. அவளுக்கு எந்த சமாதானங்களும் வேண்டியதில்லை. அவள் எதையும் கேட்க தயாரக இல்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம்" போக மாட்டேன்"  என்கிற ஒற்றைச் சொல்தான். அவன் திரும்பி வருவது குறித்த கதைகளையெல்லாம் அவள் கேட்டு பிரயோஜனமில்லை. ஏனெனில் அதுவரை அவள் உயிர் தரிக்கப்போவதில்லை.  " பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போல.." என்கிறாள்

சாம்பல் பொன்

ம டிந்தும் மடியாத சாம்பல் மாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த என் கார் திடீரென நிதானத்திற்கு வருகிறது. ஊரத் துவங்குகின்றன அதன் சக்கரங்கள். என் வெறிநோய்க்கு  குறுக்கே பறந்து வருகிறது  கொக்குத் திரள் உண்மையில் எனக்கு ஒரு அவசரமும் இருக்கவில்லை. இங்கிருந்து  அங்கு போனாலும் அங்கிருந்து எங்கு போனாலும் நான் ஒரே ஒரு ஆள்தான் உண்மையில் எனக்கு எந்த அவசரமும் தேவையில்லை. நான்கைந்து  கொக்குகள் காரின் கூரையை  மொய்த்துச் சுற்ற அடைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கதவுகளை கடந்து போயின இரண்டு