Skip to main content

Posts

Showing posts from August, 2021

இனிக்கும் மறதி

க டவுள் என்னை மறந்துவிட்ட போது நான் எவ்வளவோ துண்டுச்சீட்டுக்களை எழுதி எழுதி நீட்டினேன். ஒவ்வொன்றையும் சொத சொதவென  குருதியால் நனைத்திருந்தேன் அவர் எவ்வளவோ சதைக்கூளங்களைக் கண்டவர். எல்லாச் சீட்டுகளையும் மொத்தமாக மறந்துவிட்டார். கடவுள் மறப்பது போல் நடிப்பவர் என்பதால் அவருக்கு நினைவுறுத்த இயலாது கடைசியில்  அந்தக் கடவுளையே மொத்தமாக மறந்துவிடத் துணிந்தேன். கண்ணீரைக் கேட்க ஒருவருமில்லையெனில்  கண்ணீர் விட அவசியமில்லை.

இரத்தக்கறை

  க ழிவறை அருகே மயிலொன்று மேய்ந்து கொண்டிருந்தது என்னைக் கண்டதும் குப்பைக் கூளங்கள் பதறி எழ அவ்வளவு கனத்த  தோகையைத் தூக்கிக் கொண்டு பறந்து  விழுந்து  ஓடி மறைந்தது ஒரு நாள் போவேன் சிறுநீர் கழிக்க சிறுநீர் கழிக்கப் போவது போல்

சின்னஞ்சிறியது

  நூ ற்றாண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று  ஏலத்திற்கு வந்தது. பிரம்மாண்ட அரண்மனையின் விண்முட்டும் கோபுரம் அதன் உச்சியில் ஒரு சிறுபுறா  வாங்கி வந்து  வரவேற்பறையில் மாட்டி வைத்தேன். ஒவ்வொரு நாளும் அந்தப்புறா இருக்கிறதாவென தவறாமல் பார்த்துக் கொள்வேன் எனக்குத் தெரியும் அது  எழுந்து பறந்துவிட்டால் அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் சடசடவென சரிந்துவிடும்.

பாத்ரூம் குழாய் கசிந்து கொண்டிருக்கிறது

   க டைசியில் வீட்டைவிட்டு தொலைந்துவிடுவது என்கிற முடிவுக்கு வந்தேன். " தேட வேண்டாம்"   தீர்க்கமாக ஒரு கடிதம் எழுதிவைத்தேன் பிறகு தெருமுக்கில் இருக்கும் பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொண்டு உற்றுப் பார்த்தபடி நிற்கிறேன்.