Skip to main content

Posts

Showing posts from 2019

ஆன்லைன் கவிதைகள்

உலகத்தை அணைத்துவிட்டு இருள்கிறது ஒரு பச்சை.               ## பச்சை பாடும் பாடல் கேட்டிலையோ..? " வாராய் நீ வாராய் ! "               ## ஞாயிறு உதிக்கிறது. திங்கள் உதிக்கிறது. வெள்ளி உதிக்கிறது. பச்சை உதிக்கிறது.              # நம்பு தம்பி நம்மால் முடியாது உண்மையில் அது சிவப்பு.            ## ஒரு பச்சை கண்ணீர் விட்டது. ஒரு பச்சை ஆற்றிவிட்டது. கண்ணீர் நின்றுவிட்டது. ஆறுதல் நின்றுவிட்டது. நிற்குமோ பச்சை?              ## பச்சையுள் விழுந்து பச்சையில் எழுகிறோம்.           ## பச்சைக்குப்  பயந்தவர்  எவரோ அவரே கடவுளுக்கு பயந்தவர்.               ##           நீலப்படம். மஞ்சள் புத்தகம் பச்சை விளக்கு.           ## எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேலென்று அவ்வளவு வறட்சி.             ## பச்சை நிறமது கொழுந்துவிட்டு எரிவதைப் பார்!

அம்மையுடன் ஓர் உரையாடல்

                          ஒளிப்புள்ளிகள் ஒன்றிணைந்து          அம்மை எழுந்தருளல் "மகனே ! என்னதான் உன் வேதனை?" "தனியன்.." "பொய்" "நிஜமாகத்தான்.." " உன்னோடு யாருமே இல்லையா?"  " இருக்கிறார்கள்" பிறகு? " இருப்பதுபோல் இருக்கிறார்கள்"  "உறுதியாக இருக்க வை.." "போய்விடுவார்கள்.." " கலங்காதிரு மகனே! " " இதற்கு இது பதிலில்லை."  "வண்டிச்சக்கரம்.. மன்னிக்க ..   காலச்சக்கரம்...  அது சுழலத்தான் செய்யும்" " பரவாயில்லை.. வண்டிச்சக்கரமே புதிதாக உள்ளது" " நன்றி !" "அது ஏன் சுற்றிக் கொண்டேயிருக்கிறது?" "சுழன்றால்தானே அது சக்கரம்?" "நன்றாகச் சுழலட்டும்....ஆனால் அது ஏன் எப்போதும் என் வீட்டு முன்பாகவே சுற்றுகிறது?" " மகனே ! அது மொத்த உலகிற்கும்தான் சுழல்கிறது... அப்படியே உன் வீட்டுப் பக்கமும் வருகிறது" "இருக்கலாம்.  ஆனால் என் வாயிலில் மட்டும் கொஞ்சம் வேகமாகச் சுற்றுகிறது"

ஜெகக்காரணி

காற்று இப்படி வீசுமா என்ன? குழல் இப்படிக் கலையுமா என்ன? தானாக வீசும் காற்று இப்படியா வீசும்? தானாக கலையும் குழல் இப்படியா கலையும்? நீயே காற்று! உனதே குழல்! நீயே எல்லாவற்றையும் கலைக்கிறாய் உனது குழல் உட்பட.

மயக்கம்

ஓடினால்தான் துரத்துமென்று பாவம் ,அவனுக்குத் தெரியவில்லை. ஓடுகிறான் கண்ணாமுழி பிதுங்க நுரையீரல் வாய்வழியே தெரித்து விடும்படிக்கு. அடேய்.. ஓடாதே ... ஓடினால்தான் துரத்தும். ஓடினால்தான் துரத்துமென்று அவனுக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் ஓடுகிறான்.

அம்போ !

இரயிலில் இருந்து இறங்கினார் ஒரு குருடர். தண்டவாளங்களைக் குச்சியால் தட்டித் தட்டி தடுமாறினார். கருணை சுரந்து வழிய எழுந்து ஓடினேன். கைபிடித்துக் கடக்கச் செய்தேன் பத்திரமாக. நன்றியை வாங்கிக் கொண்டு அவ்வளவு தூர தூரத்திற்கு முன்னே அவரை அம்போவென்று விட்டுவிட்டுத் திரும்பினேன்.

மன்றாட்டு

நீ அப்படிச் சொல்லாதே அதுதான் உண்மையென்றாலும் அதுதான் விதியென்றாலும். நீ சொல்லச் சொல்ல என் ஓடு விழுந்து என் நாய் மடிந்து வருகிறது அப்படிச் சொல்லாதே !

ராஜமாதா

அம்மாவை சந்தைக்குள் அனுப்பி விட்டு காதுகளில் ஓயரைத் திணித்தபடி சங்கீதத்தில் குதித்து விட்டான்  மகன். பெரிய பையை முழுக்க நிரப்பிக் கொண்டு  திரும்புகிறாள். ரொம்பவும் கனக்கிறது போலும்? கைமாற்றி கைமாற்றி இழுத்து இழுத்து நடந்து வருகிறாள். மூன்றடி தூரத்தில் நின்று அழைக்கிறாள் மகனை ம்கூம்... அவன் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். டே.. டேய்.. டே..விஷால்... ஒவ்வொரு விளிக்கும் கொதிப்பில் ஏறிக் கொண்டே போனவள் சட்டென செல்லம் தட்ட சர்ர்ர்ர்ரென  இறங்கிவிட்டாள். கையிரண்டும் இடுப்பில் கூட்டி இதழ்க்கடையில் முத்தரும்ப " அடேய்... என் வெல்லக்கட்டி.." என்பது போல முறைக்கிறாள்.

புத்தர் சிலையும், பெர்ஃப்யூம் புட்டியும்

                சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் அழைப்பை ஏற்று “ சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2019 “ ல் கலந்து கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விழாவில் இம்முறை தமிழ் மொழியின் சார்பாக நானும், மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியும் கலந்து கொண்டோம். நவம்பர் 9, 10  இரண்டு நாட்கள் நடக்க இருந்த நிகழ்வுகளுக்காக நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்தேன்.    விழாவிற்கான அழைப்பு வந்ததும்தான் உறைத்தது என்னிடம் பாஸ்போர்ட் ஏதும் இல்லையென்பது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை தாண்டி நமக்கு வேறெங்கே சோலி வந்துவிடப்போகிறது என்கிற நினைப்பில் பாஸ்போர்ட்  குறித்தெல்லாம் யோசித்திருக்கவில்லை. சேலம், மதுரை அதிகபட்சம் சென்னையைத் தாண்டி இலக்கிய சேவையாற்றத் தேவையிருக்காது என்கிற எண்ணத்தில்தான் இருந்தேன்.     நான் ஒரு அரசு ஊழியன் என்பதால் “ no objection certificate”  என்கிற “ NOC” க்கும் அலைய வேண்டியிருந்தது. பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள் தற்போது எளிமையாக்கப் பட்டுவிட்டதாக நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். அது அப்படித்தான் இருந்தது. ஆனால் என் “ NOC” கோப்பு ஒரு கண்டத்திலிருந்து இன்னொர

கேட்ராக்ட்

அவருக்கு கைகள் திடமாகத்தான் உள்ளன. கண்தான் கொஞ்சம் மங்கி விட்டது ஒழுங்காக உட்கார்ந்து நன்றாக கண்களைத் திறந்து இரண்டு சொட்டு மருந்தை கண்ணுக்குள் விடுவதில் ஏதோ ஒரு கணிதப் பிசகு... இரண்டாவது முறை தவறிய போது அவருள்ளே கண்ணாடி உடைசல் விழிகளில் ஒரு சொட்டு நீர் ஒரு சொட்டு போதும் கழிவிரக்கத்திற்கு அது  ரத்தவாடை குதறிக் கிழிக்கும் மூர்க்கத்தோடு அடுத்த கணமே அது அவர் உள்ளத்துள் பாய்கிறது. அவருக்கு கண் மட்டுந்தான் கொஞ்சம் மங்கிவிட்டது. அதை வென்றடக்கி ஆகாயத்திற்கப்புறம் வீசி எறிந்தவர் அண்ணாந்த கோலத்தில் அமர்ந்து நெற்றிக்கண்ணென கண்களைத் திறந்து நான்கு சொட்டுகளை நடுவிழிக்குள் விடுகிறார். ஒவ்வொரு சொட்டும் பேட்மிண்டன் பயிற்சியின் முடிவில் வழக்கமாக அவர் அடிக்கும் அதே ஆக்ரோஷமான  ஷாட்கள்.

நீலம்பாரித்தல்

   ஓர் அதிகாலையில் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்  பாத்ரூமிலிருந்து பாய்ந்து வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்தேன். ஒரு காலத்தில் “ சத்துணவு” என்று எங்கள் நண்பர் குழாமால் கேலி செய்யப்பட்ட அதே சம்பாரவை. இன்றோ என் தினசரி காலை உணவு. “சத்துணவு” என்கிற விளி எப்படிக் கேலியானது என்பது இன்று வரை விளங்கவில்லை. அவசர அவசரமாக அள்ளி வாயில் திணிக்கையில்தான் கவனித்தேன் என் கையை. அது கருநீலத்தில் இருந்தது உடனே இடது கைக்கு ஓடினேன். அதுவும் அப்படியே இருந்தது. எதையோ தொட்டுவிட்டு ஒழுங்காக கழுவாமல் அமர்ந்து விட்டேன் போல ? திரும்பவும் எழுந்து கைகளை அழுத்திக் கழுவி விட்டு வந்தமர்ந்தேன். ரயில்வேறு தூரத்தில் கூவிக்கொண்டிருந்தது.   இரண்டு வாயிற்குப் பிறகு திரும்பவும் கைகளைப் பார்த்தேன். எதுவும் மாறவில்லை. கருப்பு குறைந்து நீலம் கூடிவிட்டது போல் தோன்றியது. கட்டைவிரல் மேட்டில் கொஞ்சம் வெளிரிய இளமஞ்சளும் பூத்திருந்தது. எனக்கு எல்லாம் விளங்கி விட்டது.    சமீப நாட்களில் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். என்னளவில் கொஞ்சம் கடுமையானதுதான். பத்து கிலோ குறைத்தத்தில் நெஞ்செலும்பு வெளித்தள்ளி விட்டது. ஆனால் இந்தக

அரிய சந்திப்பு

முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே இன்று ஒரு முழு நிமிடம் சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன். "இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு முழுநிமிடம்  எதன் முன்னேனும் கைகட்டி நில்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.                  *** முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே இன்று ஒரு முழு நிமிடம் சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன். இவ்வளவு காலத்தில் சிக்னலிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. " இங்கதான்..சந்தைக்கு..கீரை வாங்கப் போகிறேன்" என்றேன். " மிக்க மகிழ்ச்சி.. பத்திரமாக போய் வாருங்கள்.. " என்றது.

பற்றி எரியும் குடிசை

             சிறியமலருக்கு  எட்டு ராட்சத டயர்கள்  மந்தரித்த கயிரில் தொங்கும் ஒரு எலுமிச்சை வேறு  எருமைக் கூட்டமொன்று அதன் மேல் நிற்கிறது அந்த வழியே போன கவிஞன் பற்றி எரியும் குடிசையைக் காண்பதைப் போல் இதைக் காண்கிறான் இப்படித்தான் அவன் நாய்கடிக்கு ஊசி போடப் போன இடத்தில் கணவனால் கடித்து  வைக்கபட்ட லில்லிபுஷ்பத்தைக் கண்டான் லில்லிபுஷ்பத்தை கடித்து வைக்கும் உலகத்தில் வாழ்ந்து வருவதை எண்ணி எண்ணிக் குமைந்தானவன். லில்லிபுஷ்பம் தன்னை லில்லிபுஷ்பம் என்றறியாததால் கணவனுக்கு மாதாந்திர மாத்திரைகள் வாங்க  மருந்தக வரிசையில் நிற்கிறாள் .  சிறியமலர்  தானொரு சிறிய மலரென்று அறிந்து கொண்டால்  மீனைச் சுமக்க முடியாதென்று பாதியில் நின்று விடாதா?

பொன் பூத்தல்

எடுத்து வைக்கவோ செருகிக் கொள்ளவோ இயலும் சூட வேண்டும் ஒரு முகூர்த்தம் பூவும் இருந்து கூந்தலும் இருந்துவிட்டால் சூடிக் கொண்டு விட இயலாது.

CANCELLATION

டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன். ஜன்னலோரத்து வயல் கொக்குகள் சட்டெனப் பறந்து விட்டன.  மூன்று நாட்களின் முந்தைய தாடிக்குத்  திரிகிறது முகம். தூக்கித் தூர எறிந்தவை நமட்டுச் சிரிப்புடன் எழுந்து வருகின்றன டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன் திரும்பவும் நெக்குவிட்ட  உள்ளாடைகளுக்கு மாறுகிறேன் அதே நிலவின் பழைய கிரணங்கள் களிகூர்ந்து கட்டியணைக்க வந்த நண்பன் மனைவியின் வாயிற்குள் சென்று மறைகிறான். டிக்கெட்டை ரத்து செய்து கொண்டிருக்கிறேன். பியர் பாட்டிலின் பீறிட்டடிக்கும் ஊற்று உள்வாங்கி சீலிட்டுக் கொள்கிறது. தானே தன் கல்லறைக் கல்லை அடித்து மூடுகிறான் ஒருவன்.

அந்தோ அப்பாவி !

ஒரே  நாளில் ஒன்பது முறைகூட சொதப்பலாம். ஆயினும் அன்பே, "இச்"சுக் கொட்டாதே எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தின் முன் எவ்வளவு சின்ன " இச்"சைக் கொட்டுகிறாய் நீ மேலும், நமது "இச்" சுக்கள் சேர்ந்து சேர்ந்தன்றோ ஊதிப் பெருக்கிறது அந்தப் பிரம்மாண்டம்.

முட்டிக் கொண்டவர்கள்

18 ஆண்டுகள் கழித்து எதேச்சையாக முட்டிக் கொண்டோம். ஆனந்தப் படபடப்பில் இமைக்காது, நிறுத்தாது பேசிக் கொண்டேயிருக்கிறாள் அந்தப் பழைய பையனிடம். கெட்டுப்போன தாடியை சொரிந்தபடி ஒரு ஓரமாய் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சக்திக்கூத்து

இத்தனை இன்பங்களுக்கிடையே என்னை இறக்கி விட்டுவிட்டு அதே விமானத்தில் பறந்துவிட்டாள் அன்னை. போகும்முன் என்னை ஆரத்தழுவி முகமெங்கும் முத்தமிட்டு அவள் சொன்னதாவது... " எதையும் தொட்டு விடாதே! "

தேடு

ஜிகினா சட்டை பளபளத்து மின்னுவது துவராடை பரிசுத்தத்தில் ஆழ்ந்திருப்பது இரண்டுமே உனக்கு அழகுதான் தம்பி தேடு ஜிகினா இழையோடாத தூய  துவரை.             அல்லது துவரின் சாந்தம் படியாத தூய ஜிகினாவை.

தேநீர் விருந்து

டேபிளே, எங்கே நான் நொறுங்கிவிடுவேனோ என்கிற ஆத்திரத்திலும் வேதனையிலும்தான் உன்னை ஓங்கி ஓங்கிக் குத்திவிட்டேன். கடவுளின் கிருபையால் அப்படி ஒன்றும் ஆகவில்லை. நல்லவேளையாக உனக்கும் ஒன்றும் நேரவில்லை. ஒரு டீ சாப்பிடலாமா?

ஜிம்மிக்கு எசமானர் உரைத்தது

வாயும் குறியும் போதும் நீ மகிழ்வுற்றிருக்க போதாது என்று கொஞ்சம் செல்லத்தைக் கோரிச் சிணுங்குகிறாய். அங்குதான் துவங்குகிறது எல்லாக் கலவரங்களும்.

ஞானஒளி

நான் எல்லாவற்றையும் இறுதியில் புரிந்து கொண்டேன். இறுதியில் என்றால் அந்திமத்தில் அந்திமம் என்றால் மரணப்படுக்கையில் விழுவதற்கு முந்தையநாள்  அதிகாலைச் சூரியனிலிருந்து  பொன்னொளிர்  வண்ணத்திலான  பந்துபோன்ற ஒன்று  என் மண்டைக்குள் இறங்குவதைக் கண்மூடிக் கண்டேன். அப்போது கைவசம் விளக்குமாறு இல்லை. இருந்திருந்தால்  நையப்புடைத்து அதை ஓட ஓட விரட்டியிருப்பேன்.

நந்தவனம்

நோயுற்றவனை நந்தவனத்தை நோக்கும்படி படுக்கவைக்காதிருப்பது நல்லது புலரியின் இளங்கதிர்கள் அவன் கண்களில் எரியும். வீசு தென்றலுக்கும், வீங்கிள வேனிலுக்கும் அவன் தலை வெடித்துவிடும். சடசடக்கும் மழை நடனம் அவன் ஊனத்தைப் பெருச் செய்யும். கீச்சொலியின் கூரலகு அவன் நெஞ்சத்தில் துளையிடும். விளக்கை அணைத்து விட வேண்டும் கதவை நன்றாகத் தாளிட வேண்டும். கம்பிகளுக்கிடையே நாக்கை நீட்டி இந்த வாழ்வை நக்கிவிடாத படிக்கு சாளரத்தை அடித்துச் சாத்தி விட வேண்டும். நோயுற்றவனை நந்தவனத்தை நோக்கும்படி படுக்கவைப்பது நல்லது. புலரியின் இளங்கதிர்கள் அவனை மடியில் ஏந்தித் தலைநீவும். தென்றலும், வேனிலும் அறையை வெளியாக்கும். கொட்டுமழை அவனது நனையாத இடத்தையெல்லாம் நனைத்துவிடும். கீச்சொலிகள் இந்த வாழ்வு ஒரு பாடல் என்று அவனுக்கு உறுதி சொல்லும். மைனாவைக் கண்டு கண்டு மைனாபோலாகி மைனாவாகி விடலாம். நோயின் வாயிலிருந்து ஒரு மைனா பறந்து செல்வதை நாம் கண் ஆரக் காணலாம்.

தெரியாது

ரயிலில் தடவித் தடவி நகர்ந்துவரும் அந்தப் பார்வையற்ற முதியவனுக்கு சில்லறைச் சத்தத்தைத் தவிர வேறொன்றும் தெரியாது. அவனுக்குத் தூரமாக ஜன்னலோரத்திலிருக்கும் ஒருத்தி பசியை நிறுத்தி வைத்துவிட்டு இடக்கையால் துழாவித் துழாவி பற்களால் பர்ஸைத் திறந்து பாதி எழுந்து உடலை நீட்டி வளைத்து எட்டி இடுகிறாள் ஒரு நாணயத்தை. இப்படித்தான் எனக்கு யாரோ எதையோ இடுகிறார்கள்.

நில்லாது நிற்பது

அன்று வீசிய காற்றிற்கு என்னடி பெயர்? நம்மை முன்பின் இருக்கைகளில் இருத்தியது எது? வெறும் பேருந்துதானா அது? பறந்தெழுந்தாடி என் கைகளில் படிகிறது உன் ஒரு கற்றைக் குழல். விருட்டென என்னைப் பின்னிழுத்தேன். அன்னையின் பிடிவிடுத்துத் திமுறும் பிள்ளையை பிடித்து நிறுத்துவதென திரும்பவும் வந்து படிகிறது உன் ஒரு கொத்து அருள். இப்போது தொட்டேன். இதுவரை இவ்வளவு மிருதுவாக இன்னொன்றைத் தொட்டதில்லை. அந்தக் கூந்தல் என்னிடத்திருக்கிறது. கூடவே திரிவோனால் தொட்டுவிட முடியாத தூரத்திலிருக்கிறது.

நான்

நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன். நான் பதறியெழுந்து ஓடத்துவங்கினேன். நான் துரத்தினேன். நான்  ஓடினேன். நான் விடாது துரத்தினேன். நான் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து கொண்டு வாயைப் பொத்திக் கொண்டேன். நான் கண்டுபிடித்து கழுத்தில் ஒரு கிழிகிழித்தேன். நான் அலறி அரற்றி திரும்ப ஓடினேன். நான் ஓட்டத்திற்குள் காலை விட்டேன். நான் அந்தரத்தில் பறந்து நெஞ்சுடைய விழுந்தேன். நான் ஓங்கி உதைத்தேன். நான் மன்றாடிக் கும்பிட்டேன். நான் ஓங்கி ஓங்கி மிதித்தேன் நான் சில்லு சில்லாய்ச் சிதறினேன். நான் கடித்து வைத்தேன் நான் கண்ணீர் வடித்தேன்.

போல்

உடலில் ஊனமொன்றுமில்லை. பெரிய மூப்பும் இல்லை. எப்போதும் நடுச்சாலையில் குந்தியிருக்கும். முணுமுணுப்பு போன்றும் குரைத்ததில்லை. சின்ன உறுமல் கூட இல்லை. கார் சக்கரங்கள் ஏற்றுவது போல் வருகையில் மேலும் கொஞ்சம் உடலைக் குறுக்கி மெதுவாய் அசைந்துதரும் பிறகு அப்படியே கிடக்கும் மற்றநாய்கள் கூடிக்களித்து கடித்து விளையாடும் திடலை கண்டும் காணாதது போல் கண்ணயர்ந்திருக்கும். செல்லமே! எப்போது நீ நாயிலிருந்து நாய்போல் ஆனாய்!

நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரன்

என்னை நானாகக் கண்டால் மகிழ்ச்சி ரொம்பவும் மிரண்டுவிடுகிறது. பிறகுதான் இப்படி கன்னத்தில் மருவைக்கும் வழக்கத்திற்கு மாறினேன்.

முதல்கழுகு

ஈயும் எறும்பும் மொய்க்க நாற்றமெழுப்பிக் கிடக்கிறேன். அதிகாலையில் என்னைக் கண்ட முதல்மனிதன் ஆண்டாண்டு காலமாய்  நான் தூக்கிச் சுமந்த பெயரை அழித்துப் போட்டான். சின்னஞ்சிறு கொலைகளிலிருந்து என்னை விடுவித்துவிட்டமைக்காக அவனுக்கு என் நன்றி. நொடிக்கு நொடி என்னை அறுத்துக் கொண்டிருந்த அச்சத்தின் மீது ஏறிப் போயிருக்கிறது ரயில். எனில், இனி நான் ஏறப் போவது இரண்டாவது சொர்க்கரதம். உச்சிவானில் முதல் கழுகு உதித்து விட்டது. நாய்களின் மூளையில் திருவிழாக் கனவு தவறி என் நெஞ்சத்தை கொத்தி ஏக்கத்தை உண்டுவிட்ட காகமொன்று கொஞ்ச தூரத்தில் எரிந்து விழுகிறது.

காலன்

" காலத்தின் மீது கருஞ்சாந்தை அள்ளிப் பூசிக்கொள்ளவா? " எனக் கேட்டு ஒரு செய்தி அனுப்பினேன் சகிக்கு. வந்தபதில் வருமாறு... "அன்பே! திரும்பவும் கருக்க இயலாத படிக்கு நரைத்துவிட்டதுனக்கு. அது உன் வரிகளில் தெரிகிறது பார் ! "

நெறியர்

தினந்தவறாது ஒவ்வொரு அதிகாலையிலும் உளுந்து வடைகளுக்கெதிராய் பெரிய மைதானத்தில் ஐந்து வட்டங்கள் ஓடுபவர் தன் மருத்துவப் பரிசோதனை முடிவை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இருதயவால்வு ஒரு தனி உறுப்பு அதற்குக் காதுகளில்லை இதயமுமில்லை. அதன் முன்னே நீதியின் மணிநாவை ஆட்ட இயலாது. மண்டியிடவும் ஏலாது.

பூஞ்சோலையில் ஒரு காட்சி

ஒரே மகனை அவசர சிகிச்சைப்பிரிவுக்குள் அனுப்பி விட்டு தலைமேற் கைகூப்பி " கடவுளே..!" என்று மருத்துவரின் காலடியில் சரிகிறாள் அன்னை. வெளிறிய முகங்கொண்ட கடவுள் " கடவுளை நன்றாக வேண்டிக் கொள்.." என்கிறது.

அற்புதம்

அம்மி பறக்கும் ஆடியில் காற்றேக்கெதிரே போய்க் கொண்டிருந்தேன். காற்று என் ஹெல்மெட்டை அடித்துப் போய் விட்டது. அம்மி என் தலையை .

தொங்குவன

நின்ற கோலம் அமர்ந்த கோலம் கிடந்த கோலம் என எழிற்கோலம்   பல இருக்க நம்மைத் தொங்கும் கோலத்தில் வார்த்தது எவன்? நீரில் வாழ்வன நிலத்தில் வாழ்வன போல் நண்பா... நாம் வாழ்வில் தொங்குவனவா?

தெய்வதம்

          சிவராசண்ணனை லாரி தூக்கி வீசி விட்டது. " ப்ரே பண்ணிக்குங்க அங்கிள்..." போனில் அழுகிறாள் அவர் மகள். அப்போதுதான் உறைத்தது எனக்கு மண்டியிட ஒரு தெய்வமில்லை என்பது. ஆனாலும் மண்டியிட்டே ஆக வேண்டும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் அதையே சொல்கிறார்கள். சிவராசண்ணன் நாளிரண்டு முறைகள் ஓய்வாக நின்று, ஆனந்தமாக புகைபிடிப்பாரே அந்த மே ஃப்ளவர் மரத்தடிக்கு ஓடினேன். அதன் முன் மண்டியிட்டேன்.

திருநாள்

உச்சியில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கிறது நிலவு. அதன் மனம் தேய்ந்து தேய்ந்து இல்லாமல் ஆகும் திருநாளை பெளர்ணமி என்பர் உலகத்தார்.         நன்றி : காலச்சுவடு -  ஜூன்19

நல்லதொரு பெயர் சொல்லுங்கள்

உணவை நீட்டி ஏந்தும் ஓடு  அது திருவோடு எல்லாவற்றையும் ஏந்தத் துடிக்கும் ஓடொன்றுண்டு என்னிடத்தே என்னதான் பெயரிடுவேன் அதற்கு?            நன்றி : காலச்சுவடு - ஜூன் -   19

செல்ஃபி

உள்ளத்தைத் திறந்து வைத்தால் கெட்ட நாற்றம் எழுகிறது உலகம் மூக்கைப் பிடித்துக் கொள்ளும்படி  பிறகு அது முடைநாற்றம் கொள்கிறது நட்சத்திரங்கள் என் கேட்டில் மங்கிவிடுகின்றன. ஆற்றுமீன்கள் எவ்வளவு ஆழத்தில் ஒளியமுடியுமோ அவ்வளவு ஆழத்தில் ஒளிந்து கொள்கின்றன. பூனை தன் "ம்யாவை" நிறுத்திக் கொள்கிறது. எங்கெங்கு காணினும் நான். அவசரவசரமாக உள்ளத்தை அள்ளி ஒரு கோணிப் பையுள் திணித்துக் கட்டினேன். நீண்டதொரு பெருமூச்சிற்குப் பிறகு ஒரு செல்ஃபி எடுத்தால் தேவலாம் என்றிருந்தது. அதில் நான் சிரிக்கிறேன் பளீர் பற்களோடு. இனிமை ததும்ப நலமே சூழ.          நன்றி : காலச்சுவடு - ஜுன்-19

லீவூ

                                  இந்த அதிகாலையில் ஓர் ஓட்டு வீட்டின் கூரை மீது  எழுந்தருளியுள்ளது  ஒரு மயில்  எந்தத் தருணத்தும் இடிந்து விழும் கதியிலுள்ள அவ்வீடு சட்டென ஒரு கலைக்கூடமாகிவிட்டது பவிக்குட்டி எம்பிஎம்பி குதிக்கிறாள் என்னென்னவோ பேசுகிறாள் அதனோடு மயில் தோகை விரித்து ஒரு குலுக்கு குலுக்குகையில் " இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவே...." என்று  கூவினாள். நடனமும் பாட்டும் போன்றிருந்ததக்கணம். நொண்டியாட அழைக்கிறாள் அதை. " எனக்குத் தெரியாதே..? " என்றது வருந்திச் சொல்வது கேட்கிறது எனக்கு. மயில் ஒன்றும் சும்மா வரவில்லை. பவியின் அப்பன் வீட்டை விட்டு ஓடும் போது கூடவே ஓடிப்போன அவளது சிரிப்பை திரும்பக் கொத்தி வந்துள்ளது.

அகத்தகத்தகத்துள்ளே...

நண்பா.... உனக்குத் தெரியுமா? நேற்றைய விருந்தில் உன் கோப்பையுள் கொஞ்சம் நஞ்சைக் கொட்ட இந்தக் கைகள் எப்படி துடியாய்த் துடித்ததென்று. வீட்டிற்கு வந்ததும் ஒவ்வொரு விரலாய் கொறித்துத் தின்றேன்.

பெரு வாழ்வு

காலுதைத்துக் கதறும் சிறுவனுக்கு நரைப்பதேயில்லை அவன் இன்னும்  இனிப்புப் பண்டத்தின்  முன்னே நகராது அமர்ந்திருக்கிறான். எனக்கோ நாடி தளர்ந்து விட்டது. கைத்தடி எதற்கு? அந்தச் சிறுவனை விரட்டி ஓட்டத்தான். ஆயினும் சும்மானாச்சிக்கே சுத்துகிறேன்.

நீலகண்டம்

                          அதலபாதாளம் உறுமிக் கொண்டிருக்கிறது. சொல்லைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்                  .... பழுக்கக் காய்ச்சிய சொல்லை எடுத்து நெஞ்சில் ஒரு இழு இழுத்தேன்                  ..... கூவி வருகிறதொரு சொல் அதனெதிரே ஆடாது அசையாது உறுதி காத்து நிற்பேன். பிறகு துண்டு துண்டாவேன்.                   .... கடைசிச் சருகும் காற்றில் பறந்த பிறகு சொல்லைச் சொல்லில் கலந்து குடி                                    .... நஞ்சு திரண்டுவிட்டது. சொல்லே நீலகண்டன்.                         

மகிழ்ச்சியை ஆக்குதல்

வெய்யில் வணக்கிய தேகம் கசங்கி நாறும் உடை சடை திரண்ட தலை பாழ் கிணற்றுக் கண்கள் படைத்தோன் நாணும் சிரிப்பு ரோட்டோரம் கிடக்கும் காலிப்புட்டியை ஆட்டி ஆட்டி ஒரு துளியாக்கி அதை நாக்கை நீட்டி ஏந்திப் பிழைக்கும் பேறு

புத்துலகு

            இன்று புதிய ஸ்டிக்கர் ஒன்றைக் கண்டேன் " Baby in car " நான் அந்தக் காரை விரட்டிச் சென்று முந்தவில்லை. சப்தம் செய்து பீதியூட்டவில்லை ஒரு தேர்போல் அது ஆடி அசைந்து செல்லட்டும் என்றெண்ணிக் கொண்டேன். " Baby on Road" என்று  ஒரு ஸ்டிக்கர் இல்லை.  எங்கும் ஒட்டப்படவுமில்லை.  மேலும்  அதில் எனக்குக் கடமையுமில்லை.

தங்காய் !

அந்நேரம் வரையிலும் அவளைத்தான் தின்று கொண்டிருந்தேன். அவள் வளைவுகளில் ஊர்ந்து கொண்டிருந்தேன். அவள் முலைகளை உண்டு கொண்டிருந்தேன் வெண் முதுகுப் படகில் மிதந்து கொண்டிருந்தேன் மருத்துவர் அறைக்குள் போய் திரும்பியவள் துப்பட்டாவால் கண்களை ஒத்திக் கொண்டு நிற்கிறாள் நெளிவும், சுளிவும் முலையும், படகும் சட்டென மறைந்து விட்டன. கண்ணீர்தான் எவ்வளவு பரிசுத்தம் !

இரு கவிதைகள்

                                                            எ ட்டிக்காய் பெற்ற பிள்ளை ஒரு சிறுமி ஆசி வேண்டி என் காலில் பணிகிறாள். ஐயோ...கடவுளே... இரண்டே இரண்டு நிமிடம் என்னை இனிக்கச் செய்தீரென்றால் ஒரு நல்ல சொல் எடுத்துக் கொள்வேன்.                                                               காலம் "காலம் ஒரு நாள் மாறும்" என்று சொன்னார்கள் அதையே உத்துப்பார்த்தபடி பல்லூழி காலமாக  குத்தவைத்து  உட்கார்ந்திருக்கிறான் ஒருவன்.            

நீயேதான்

                         நீ என்னை ஒரு  கணம் நிறுத்தினாய் நெஞ்சை நீவித் தந்து ஒரு குவளை நீர் தந்தாய் எத்தனை தூரத்திலிருந்து ஓடிவருகிறேனென்று எவ்வளவு பற்களிடையிருந்து  தப்பி வருகிறேனென்று நீதான் என்னைக் கண்டமாத்திரத்தில் கண்டு கொண்டாய்.