Skip to main content

புத்தர் சிலையும், பெர்ஃப்யூம் புட்டியும்

               





சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் அழைப்பை ஏற்று “ சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2019 “ ல் கலந்து கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விழாவில் இம்முறை தமிழ் மொழியின் சார்பாக நானும், மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியும் கலந்து கொண்டோம். நவம்பர் 9, 10  இரண்டு நாட்கள் நடக்க இருந்த நிகழ்வுகளுக்காக நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்தேன்.

   விழாவிற்கான அழைப்பு வந்ததும்தான் உறைத்தது என்னிடம் பாஸ்போர்ட் ஏதும் இல்லையென்பது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை தாண்டி நமக்கு வேறெங்கே சோலி வந்துவிடப்போகிறது என்கிற நினைப்பில் பாஸ்போர்ட்  குறித்தெல்லாம் யோசித்திருக்கவில்லை. சேலம், மதுரை அதிகபட்சம் சென்னையைத் தாண்டி இலக்கிய சேவையாற்றத் தேவையிருக்காது என்கிற எண்ணத்தில்தான் இருந்தேன்.

    நான் ஒரு அரசு ஊழியன் என்பதால் “ no objection certificate”  என்கிற “ NOC” க்கும் அலைய வேண்டியிருந்தது. பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள் தற்போது எளிமையாக்கப் பட்டுவிட்டதாக நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். அது அப்படித்தான் இருந்தது. ஆனால் என் “ NOC” கோப்பு ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு போவது போல ஒரு டேபிளிலிருந்து இன்னொரு டேபிளுக்கு ஊர்ந்து கொண்டிருந்தது. நான்கு நாட்கள் என்னை வெளிநாடு அனுப்பிவைக்க மூன்று எழுத்தாளர்கள், இரண்டு IPS அதிகாரிகள் கொண்ட ஒரு குழு தீவிரமாக செயல்பட வேண்டியிருந்தது. அப்படிச் செயல்பட்டும் புறப்பாட்டிற்கு முந்தைய நாள்தான் என்னால் “ NOC “ யை வென்றெடுக்க முடிந்தது.
 முதல் விமானப் பயணம் அதற்குரிய தடுமாற்றங்களுடனும், குதூகலத்துடனும் இருந்தது. ரயிலில் ஜன்னலோரத்தில் அமர்ந்தால் என்ன தெரியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விமானத்தில் ஜன்னல் சீட்டின் பயன் என்ன என்பது குறித்து எனக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. எனவே ஜன்னலோர இருக்கைக்கு முனைப்பு காட்டியிருக்கவில்லை. விமானம் தரையிறங்கும் போது சிங்கப்பூரின்  “ஒளிவெள்ளத் திருக்கோலம்” காண்பது அலாதியானது என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன். எனவே ஜன்னல் சீட்டிற்கு முயன்று பார்த்தேன். கிட்டவில்லை. ஆனால் தரையிறங்குகையில் கொஞ்சம் எட்டிப்பார்க்க முடிந்தது. கனவு மயமாகத்தான் இருந்தது.
  முதல் அமர்வாக “ தமிழ்க்கவிதையில் பகடி” குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.  கவிதையை பயிற்றுவிக்க முடியுமா என்பது எப்போதும் முன்வைக்கப்படுகிற ஒரு அடிப்படையான கேள்வி.  ஊசியின் மூலம் மருந்தை உடலுக்குள் செலுத்துவது போலே ஒரு நெஞ்சிற்குள் கவிதையை புகுத்தி விட முடியாது என்பதுதான் எனது எண்ணமும். ஆனால் கவிதையில் அறிவு சார்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய பகுதிகள் என்றும் சில உண்டு. அவற்றைப் பயிற்றுவிக்க முடியும் என்றே நம்புகிறேன். பகடி தீவிரத்தை குறைத்து விடாதா? என்கிற அந்த வழக்கமான கேள்வி இந்த அமர்விலும் கேட்கப்பட்டது. இம்முறையும் உறுதியாக மறுத்தேன். பெருந்தேவியின் “ 68 வது பிரிவு” கவிதை ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.

  மாலை அமர்வு வெவ்வேறு தேசத்து தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்த அமர்வாக இருந்தது. தமிழக ஈழுத்து இலக்கிங்களோடு ஒப்பு நோக்குகையில் சிங்கப்பூர் மலேசிய இலக்கியம் போதுமான தீவீரத்துடன் இல்லை என்பது உண்மைதான். எனவே இந்த அமர்வில் அதிகம் கவனம் கொள்ள வேண்டிது சிங்கப்பூர் மலேசிய இலக்கியம் குறித்துதான் என்று எண்ணினேன். எனவே என் உரையை ஈழத்துக் கவிதைப் போக்குகள் குறித்த சிற்றுரையாக நிறுத்திக் கொண்டேன். சீ.முத்துசாமி மலேசிய இலக்கியம் குறித்தும், சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் சற்று விரிவாகப் பேசினர்.

  மறுநாள் காலையில் எனது படைப்பு வெளி குறித்த அமர்வு. எல்லா அமர்விற்கும் பார்வையாளர்கள் என்போர் கிட்டதட்ட அதே ஆட்கள்தான். எல்லா ஊரிலும் அப்படித்தானே? சமீப காலமாக “ RAPID FIRE”  என்கிற புதுவியாதி ஒன்று புறப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் இரண்டு “ RAPID  FIRE” களில் கலந்து கொண்டேன். இரண்டிலும் சொதப்பினேன் என்றே நினைக்கிறேன். ஒரு நொடிப்பொழுதில் பதில்களைத் தீயாய் ஊதி விடும்படிக்கு நான் இன்னும் தயாராகவில்லை. அப்படி தயாராக முடியும் என்றும் தோன்றவில்லை. கவிதை என்றால் என்ன? என்கிற அரதப்பழசான கேள்விக்கு நமது மகாகவிகள் இப்போதும் இருண்ட முகத்துடன் உத்தரத்துப் பல்லியைப் பார்த்துதானே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

   சிங்கப்பூருக்குள் நுழைய சோதனைச்சாவடியில் பரிசோதிக்கப்படுகையில் எதற்காக சிங்கப்பூர் வந்திருக்கிறீர்கள் ? என்று கேட்டார் அந்த அதிகாரி. “ Singapore writers  festival’ ல் கலந்து கொள்வதற்காக என்று பதிலளித்தேன். என் கண்களை ஊடுருவிப் பார்த்து Are u writer? என்று கேட்டார். “ தீர்க்கதரிசியொருவன் உள்ளூரில் மாத்திரமல்ல சகலதேசங்களிலும் சந்தேகிக்கவே படுகிறான் ”. அந்த அதிகாரியைப் போன்றே டாக்ஸிக்காரர்களும் என்னை நம்பவில்லை. நான் தங்கியிருந்த விடுதிக்கு போகச் சொன்னால் உறுதியாகவா ? அங்குதானா ? என்று திரும்ப திரும்பக் கேட்டார்கள். “ THE FULLERTON” என்கிற அந்த ஹோட்டல் சிங்கப்பூர் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிற, பாரம்பரிய பெருமைமிக்க, கனவான்கள் வந்து போகும் ஐந்து நட்சத்திர சொகுசு விடுதி என்பதை நண்பன் சரவணன் மூலம் தெரிந்து கொண்டேன். டாக்சிக்காரர்களைக் கோபித்துக் கொள்ள ஒரு நியாயமுமில்லை என்பது புரிந்து விட்டது. நான் கனவானாக தோன்றாததில் வருத்தமேதுமில்லை. ஆனால் கூடவே திரிந்த சரவணன் ஒரு விஞ்ஞானி. அவன் கூட அவர்களுக்கு ஒரு விஞ்ஞானியாகத் தோன்றவில்லை  என்பதில் எனக்கு ஒரு அற்பஆறுதல்.

  நவம்பர் 10 மதியம் கவிமாலை என்கிற அமைப்பின் சார்பாக “ விதைகள்” என்கிற பெயரில் துவங்கப்பட்ட  மாணவர் கவிதைப் பயிற்சித் திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு” கவிதையின் வினோதங்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றினேன் .மாணவர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலவையாக அமர்ந்திருந்த அந்த அரங்கை எதிர்கொள்வது கொஞ்சம் சிக்கலாக இருந்தது.  முடிந்தவரை மாணவர்களுக்காகவே பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். நான் எதிர்பார்த்தது போலவே முகுந்த் நாகராஜனால் மாணவர்களைக் கொஞ்சம் அசைக்க முடிந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டிலும் முகுந்தின்  கவிதை நூல்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டோம்.

  அடுத்தடுத்து அமர்வுகள் இருந்ததால் “ புதுமையிலே மயங்குகிறேன்” என்று பாடல் பெற்ற சிங்கப்பூரை ஒழுங்காகச் சுற்றிப் பார்க்கக் கூடவில்லை. மாலை வேளையொன்றில் நண்பர்கள் ஒரு பீச்சுக்கு அழைத்துப் போனார்கள். போன கொஞ்ச நேரத்திலேயே உள்ளும், புறமும் கருத்து விட்டதால் அதன் ஸ்தல புராணம் இப்போது  நினைவில் இல்லை.  சிங்கப்பூரில் இறங்கிய அன்று அமர்வுகள் ஏதுமில்லையென்பதால் அன்று புத்தர் கோவிலுக்குச் செல்ல வாய்த்து. கலை நுட்பம் கூடிய விதவிதமான புத்தர் சிலைகள்.. புத்த பிக்குகளின் அசலான மெழுகுச் சிலைகள்... புத்தரின் பல் ஒன்று இங்குதான் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். உருப்பெருக்கி வைத்து அந்தப் பல்லை பெரிதாக்கி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். புத்தனிடம் காண வேண்டியது அவன் பல் அல்ல என்பதால் எனக்குப் பெரிதாக சிலிர்ப்பு ஒன்றும் தோன்றவில்லை.

  இந்த நான்கு நாட்களும் மலேசிய மூத்த எழுத்தாளர் சீ. முத்துசாமி அவர்களுடன் ஒரே விடுதியில் தங்கியிருந்தேன். உற்சாகமான ஆளாகக் காணப்பட்டார். வயதிற்கான எரிச்சலும், சலிப்புமற்ற மனிதராக இருந்தார். முதல் நாள் அவரோடு கால்வாசி இரவைக் கழித்தோம். அடுத்த நாள் காலையில் “ என்ன கழற்றி விட்டுட்டு இராத்திரியெல்லாம் எங்க போனிங்க? “ என்று செல்லமாக கடிந்து கொண்டார். எனவே அன்றைய இரவில் அவரும் இருக்கும்படி பார்த்துக் கொண்டோம். ஒரு முனகலுமின்றி ஒரு இளைஞனுக்கான உற்சாகத்துடன் எங்களுடன் ஊர் சுற்றினார். இந்த நான்கு நாட்களில் அவருக்கு பாதித்தலை கருத்துவிட்டது. “ எல்லாம் இங்க இருக்கற வரைதான்.. ஊருக்குப் போயிட்டா ஒன்னுங் கெடையாது..” என்று கைகளைக் காற்றில் ஆட்டிக் காட்டினார்.  அது ஏறக்குறைய என் டயலாக்... ஆனால் அவர் பேசினார். எழுத்தாளன் ஏதோ ஒரு மூலையில் மகிழ்ச்சிக்குச் செத்தவனாகத்தான் வாழ்ந்து வருகிறான் என்று நினைத்துக் கொண்டேன்.

  இறுதி அமர்வாக “ சொல் புதிது” நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த அமர்வில் கலந்து கொண்டேன். என் அந்தரங்க வாசகர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட அமர்வென்று இதைச் சொல்லாம். ஒரு “கல்லூரி விடுதி” யின் கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்தது போல் இருந்தது அரங்கு. இவர்கள்தான் தேவதேவனின் சமீபத்திய சிங்கப்பூர் வருகையின் போது கைகட்டி, வாய் பொத்தி கவிதா உபதேசம் கேட்டவர்கள். ஆனால் என்னைக் கண்ட மாத்திரத்தில் எல்லோரிடமும் குறும்பு பூத்துவிட்டது.  நடனத்தின் மூலம்தான் என்னைச் சந்திக்க முடியும் என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது. தவிர, தேவதேவனும் இசையும் எதிரெதிரானவர்கள் அல்ல என்பதும், இருவரின் உலகங்களும் சந்திக்கும் புள்ளிகள் உண்டென்பதும் அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. அந்தப் புரிதலிருந்துதான் சகல கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினார்கள்.  பெண்களின் அக உலகம் சார்ந்து, அவர்களின் காமம் சார்ந்து நான் குறைவாகவே எழுதியிருப்பதாக எண்ணுகிறேன். அந்தக் கவிதைகள் குறித்த எதிர்வினைகள் எதையும் நான் இதற்கு முன் அறிந்ததில்லை. ஆனால் இந்த அமர்வில் அந்தக் கவிதைகள் குறித்த குறிப்பிடத்தக்க மகிழ்வூட்டும் எதிர்வினைகளை அடைந்தேன்.

     எனக்கு ஒரு வியாதி உண்டு. மகிழ்ச்சியைக் காணும் போதே அதற்கு அப்பால் தெரியும் துயரத்தையும் சேர்த்தே காண்பேன். அதனால் முழுமகிழ்ச்சி என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த நான்கு நாட்களும் என் நண்பர்களையும், வாசகர்களையும் என்னால் இயன்றவரை மகிழ்ச்சியில் வைத்திருந்தேன் என்றே நம்புகிறேன்.

   இந்தப் பயணத்தையொட்டி நான் நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் நீண்டது. பட்டியல் என்று வரும் போதே விடுபடல்களும் வந்துவிடும். தவிர, அந்தப் பெயர்களை வெறும் பெயர்களாக ஒரு வாசகன் வாசிப்பத்தில் எனக்கு விருப்பமில்லை.

   இந்தப்பயணம் மகிச்சிகரமானது என்பது போலவே கொஞ்சம் நடுக்கமானதும் கூட. சரவணனின் போனை எதேச்சையாக நோண்டிக் கொண்டிருக்கையில் என் உருத்தாங்கிய “ லைட்டா பொறாமைப்படும் கவிஞன்” என்கிற வாட்ஸ் அப் க்ரூப் ஒன்று கண்ணில் பட்டது. முகத்திலிருந்து கண்களை எவ்வளவு தூரத்திற்கு ஓட்ட முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு ஓட்டிவிட்டு போனை சட்டென அவனிடம் தந்துவிட்டேன். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு, கொண்டாட்டங்களுக்கு நானும் என் எழுத்தும் தகுதியுடையவர்கள் தானா என்கிற கேள்வி எழாமலில்லை. சீராட்டப்பட்டதன் வழியே எச்சரிக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.

 சிங்கப்பூரிலிருந்து தியானத்திலிருக்கும் புத்தர்சிலை ஒன்றையும், உயர்தர பெர்ஃயூம் புட்டி ஒன்றையும் வாங்கி வந்தேன். இரண்டிற்கும் ஜோடி சேராதுதான். ஆனாலும் பாருங்கள் வாழ்க்கை அப்படி இருக்கிறது.

  தாயகம் திரும்பியதற்கு பிறகான நாட்களில் குட்டை ட்ரவுசரும், நீள சிகரெட்டுமாக தான் நின்ற நிலத்தை வேறொரு உலகமாக்கி புகைத்துக் கொண்டிருந்த அந்த சீனயுவதியை நீலிக்கோணம்பாளையத்துத் தெருக்களில் தேடிக் கொண்டிருந்தேன்.

( இந்து தமிழ் திசையில் வந்த கட்டுரையின் முழு வடிவம்)






























Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான