Skip to main content

Posts

Showing posts from March, 2020

ரொமான்டிசம்

நாய் புழுதியில் புரள்வது போல இந்த நாள் சோம்பலில் புரள்கிறது. அவன் அவனை இழுத்துக் கொண்டு அலுவலகம் போனான். அதே மெஸ் பையன் அதே இட்லியை வைத்தான் இதே இட்லியின் முகத்தில் எத்தனை காலமாய் விழித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பு குமட்டிக் கொண்டு வந்தது. வேண்டுமானால் வேலையை விட்டு நீக்கிக் கொள்ளுங்கள் எனும்படிக்கு அதிகாரிகளுக்கு அரை வணக்கம் வைத்தான். இன்று புதிதாக நான்கு கோப்புகள் தேங்கிவிட்டன. வாங்குவதற்கு ஒன்றுமில்லையாயினும்  அவன் வாகனம் அவனை ஒரு ஷாப்பிங் மாலிற்கு அழைத்து சென்றது  " நேராக நெஞ்சிற்குள் செல்லும் படியாக ஒரு பெர்ப்யூம் இல்லையா?" என்று கேட்டான். சிப்பந்தி ஒரு கணம் திகைத்துப் போனான். மறுகணம் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இருவரும் கொஞ்சம் அழுதது போலவும் இருந்தது.

குயிலொடு புலம்பல்

நம் பேச்சிற்கிடையே சட்டென குறுக்கே வந்துவிழும் ஒரு துண்டுக் குயிலோசை. சமயங்களில் நீட்டி முழக்கி கச்சேரி செய்து கொண்டிருக்கும். அது ஒரு மங்கலம் அது ஓர் ஆசிர்வாதம் அது நம் ஆண்ட்ராய்டுகளை வனஉயிரி ஆக்கிவிடும். நாம் பச்சைகொழித்துப் போவோம். மண் மணந்து மழை சடசடக்கும். குயில் காட்டிலிருந்து எழுந்து வரும் மாருதம் என் கேசத்தை அலையலையாய்ச் சிலுப்பிவிடும். உன் தலைக்கு மேலே வானவில்லின் உதயக்காட்சி . பருவம் திரிந்து விட்டது. குயில் மறைந்துவிட்டது. இன்று மொட்டை வெய்யிலின் கீழ் இரண்டு மூளி மரங்கள். அதன் சுள்ளிக் கிளைகளில் நெஞ்சடித்த ஒப்பாரி.

ரசவாதி

முகமெல்லாம் திரிந்து எரிச்சல் மேலிடக் கேட்கிறாய் " எவ்வளவு இட்டால் நிரம்பும் உன் பாத்திரம்"? தொங்கிய தலையுடன் சன்னமான குரலில் முணுமுணுக்கிறேன் " உன்னிடம் வரும்போது மட்டும்  ஓட்டைப் பாத்திரத்தோடுதான் வருவேன்".

நான்கு கவிதைகள்

மர்ம மலர் தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான். விடாது தொடுத்த 11 வது அழைப்பால் தலைவி அதை முட்டித் திறக்கிறாள். அவன் ” ம்” கொட்டுகிறான். உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறை தலைவி தன் தலை கொண்டு மோதி அதையும் உடைக்கிறாள். கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று ஒரு தனி மதுரமுண்டு. தலைவன் அதை முன்பறியா பாலகன். அம்மதுரம் ஊடலின் கழுத்தைத் திருகி குப்பை மேட்டில் எறிகிறது. விட்ட கதைகளை பேசித் தீர்த்தபின் அவன் தன் உள்ளாடையில் ஒரு சின்ன ஈரத்தை உணர்ந்தான். அது கண்டு திகைத்தான். குழம்பினான். வருந்தினான். பிறகு வெற்றுத் தரையில் நிலவின் கீழ் மல்லாந்த படி தன் முதல் பாடலைக் கட்டினான். “உலகின் அழகான விந்துக்கறையே!” ஒழிக நின் கொற்றம் ! என் பொறாமை எனக்கு வணக்கம் தெரிவித்தது. நான் தூரத்து மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தோள்தொட்டுத் திருப்பி திரும்பவும் சொன்னது. முகந்திரிந்து யார் என்பது போல் நோக்கினேன். பேர் சொன்னது ஊர் சொன்னது ஒன்றாகப் படித்த பள்ளியைச் சொன்னது. இருவருக்கும் பொதுவான நண்பர்களைச் சொன்னது. எந்தெந்த மரத்திலேறி எந்தெந்த ஆற்றில் குதித்தோம் என்று சொன்னது. அடிவயிற்றில் உதைப

சோதிப்பிரகாசம்

இந்தப் பேனாவை அந்த டேபிளின் மீது வை" என்று சொல்லி நீட்டினாள். அவன் அதை வாங்கினான். அவள் நீட்டிக் கொண்டே இருந்தாள் அவன் வாங்கிக் கொண்டே இருந்தான். அவள்  விடவில்லை. அவன் விடுவிக்கவுமில்லை. அங்கு ஒன்றுமே நடக்கவில்லை. அங்கு அவ்வளவு நடந்து கொண்டிருந்தது. அங்கு காலம் ஸ்தம்பித்துவிட்டது. அங்கு காலம் பரபரப்பில் இருந்தது. இப்போதும் அந்த ஒன்றுமற்ற ஒன்றை துலக்கித் துலக்கி  விளக்கேற்றி மகிழ்கிறது நரைமுற்றிய அந்தத் தம்பதி.