Skip to main content

Posts

Showing posts from 2023

பேப்பர்காரராக வந்தவர்

  உ லகத்தை உருட்டி உனக்குத்தான் என்பதாக அந்தரத்தில் எறிந்தார் எனக்கேதான் என்பது போல் நானதை எட்டிப் பிடித்தேன். அப்போது உறுதியாக ஒரு அவுட்.

பிறர் என்றொருவரில்லை (தோழர் தியாகுவின் “சுவருக்குள் சித்திரங்கள்”)

பிறர் என்றொருவரில்லை (தோழர் தியாகுவின் “சுவருக்குள் சித்திரங்கள்”) https://akazhonline.com/?p=4299 நன்றி : அகழ்

அந்த வானம்

ந டுச்சாமத்தில் கொஞ்சம் துணிகளோடு வீட்டை விட்டு வெளியேறிய அன்று மேலே வானம் இருந்தது ஊசிக் கப்பலும் புறாக்களின் குட்டிகரணமும் பார்த்த அந்த வானம் அன்று அது வேறு வேடிக்கைகள் விடைபெற்ற பிறகு முதன் முதலாக எப்போது அண்ணாந்து பார்த்தேன் என்பது நினைவில்லை ஆனால் அப்போது அழுது கொண்டிருந்தேன் அது நினைவில் இருக்கிறது. சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த  ஒரு உயிரை சட்டெனச் சரித்து விட்டு எழுந்து போகிறது இன்னொரு உயிர் கீழே விழுவது வானத்தில் விழுகிறது 'புற்று ' உறுதியாகிவிட்ட நாளில் மருத்துவமனையிலிருந்து ஏன் வானிற்கு நடந்து போகிறாள் ஒருத்தி? அந்தி என்பது வண்ணக் கலவைகளின் கும்மாளம் என்று நம்பும் ஒருவன் தன்னை  ஓவியன் என்றும் நம்பிக் கொள்கிறான் அம்மாவை எரித்துவிட்டு வந்த நாளில் தெரிந்ததொரு வானம் வானம் என்றால் என்னவென்று சொல்லும்  ஒரு வானம்

அவர்- அவன்

  அ றுவை சிகிச்சை முடிந்து ஆயுள் முழுதும் உபயோகிக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்ட கண் மருந்தை வாங்கி வருவதற்காக அவர் கிளம்பிக் கொண்டிருக்கிறார் "துணைக்கு வரவா" ? என்று கேட்ட மனைவியின் குரலை முறைத்து விட்டு நடக்கிறார் பழமை வாய்ந்த  அந்த மருந்துக் கடையில் அரசுப் பணியில் சேரும் முன் நான்கு வருடங்கள் அவர் சிப்பந்தியாக இருந்துள்ளார். அவர் கடையை அடைகையில் அந்தப் பையன்தான்  முன்னே நின்று கொண்டிருந்தான். அவன் மேலும் கீழும் போகிறான். அங்கும் இங்கும் தாவுகிறான். கடை மூலையில்  ஸ்டைலாக சாய்ந்து கொண்டு  மருந்துகளை விட்டுவிட்டு வேறொன்றைச் சிந்திக்கிறான். வேறு ஸ்டைலான இடத்திற்குப் போய்விட்டு கடைக்குத் திரும்புகிறான். பில் வரிசையில் தனக்கு முன் நிற்கும் பெண் ஊழியரிடம்  அவள் மட்டும் கேட்கும் படி என்னவோ கிசு கிசுக்கிறான். அவளோ அவன் கிசுகிசுக்கும் முன்னரே நாணத்தின் பிரகாசத்தோடு  நின்று கொண்டிருந்தாள் மருந்தையும் , மீதிப் பணத்தையும் முன் வைத்துவிட்டு திரும்ப எத்தனிக்கையில் அவன் சட்டையைப் பிடித்து அதை உருவிவிடும் ஆவேசத்தோடு அவர் ஒரு இழு இழுக்கிறார்.

ஒத்தையடிப் பாதை

  நா ன் போகட்டுமென்று அவர் நின்று கொண்டிருக்கிறார் அவர் போகட்டுமென்று நான் நின்று கொண்டிருக்கிறேன் நான்தான் போக வேண்டுமென்று அவர் சிரித்துக் கொண்டு நிற்கிறார். அவரே போகட்டுமென்று நான் அடம்பிடிக்கிறேன் இந்தப் பத்து நொடித் தாமதத்தை பையில் போட்டு அலுவலகத்திற்கு எடுத்துப் போனேன். அம்மா கொடுத்தனுப்பிய குளோப் ஜாமூன் மறைந்து போய்விட்டதோவென டிபன் பாக்ஸை திறந்து திறந்து மூடுகிறான் ஒரு சிறுவன்.

பஸ் டிரைவரின் " play list"

இ தோ இந்த டிரைவர் ஒலிக்கவிடும் பாடல்கள் ஏற்கனவே எண்ணிறந்த முறைகள் கேட்டவை. ஆயினும் அவை திடீரென வருகின்றன திடீரென வருதலின் ஆனந்தத்தோடு என்னிடம் மேம்படுத்தப்பட்ட  ஒலிநுட்பக் கருவிகள் உண்டு 'அன் லிமிடெட் டேட்டா' வுள்  உலகம் கொட்டிக் கிடக்கிறது. தவிர என்னிடம் ஒரு சிறிய கார் உண்டு என்னால் காற்றைப் பறிக்க இயலும் குளுமையைக் கூட்ட இயலும் இன்னும் என் கைவசம் நிறையவே உண்டு கைவசம் உள்ள எல்லாவற்றின் மீதும் தொற்றிப் படர்ந்துவிடும் ஒன்றை ஊதி ஊதி துடைத்துக் கொண்டிருக்கிறேன். காகங்கள் மகிழ்ந்து கரையும் விருந்தோ இந்த ஓட்டுநன்! கை நிறையப் பலகாரங்களோடு முகம் முழுக்க ஜொலிப்போடு பள்ளத்துள் கிடக்கும் என் பெயரை  பறக்க விட்டபடி என் வீட்டிற்குள் நுழைய தெரியவில்லை எனக்கு.

கடலும் சிகரெட்டும்

  ந ண்பனின் புதிய அறைக்குப் போயிருந்தேன் பால்கனியில் நின்று பார்த்தால்  தூரத்தில் நீலக்கடல் புகைப்பழக்கம் இல்லை ஆயினும் படிகளில் இறங்கி ஓடினேன் இப்போது நான் என்னை ஏந்திக் கொண்டு நிற்கிறேன் விரலிடையில் மெல்ல மெல்ல ஆவியாகிறேன் சிகரெட்   சாலையைக் கடந்து கட்டிடங்களைக் கடந்து கரையைக் கடந்து கடலைப் போய்த் தொடுகிறது கடலைத் தொடும்  நெருப்பு ஈரத்தால் அணைவதில்லை என் சிகரெட்  மிதந்து  மிதந்து இருண்ட ஆழங்களுக்குள்  நுழைகிறது இருண்ட ஆழங்களில் அதிக வெளிச்சம். அலைச் சருக்கில் ஒரு புதுத் துரும்பின் கொண்டாட்டம் வெறுங்கையில் கடல் தெரியாதா என்ன? அது எனக்குத் தெரியாது. கடல் முன்  ஒரு முறை புகைந்தாக வேண்டும் அது எனக்குத் தெரியும்

கண் - கடைக்கண்

க டவுள் மனிதனுக்கு  முதலில் கண்களைப் படைத்தான்  பிறக்கப் பிறக்கவே அகலத் திறந்து கொண்டன கண்கள். மனிதன் மகிழ்ச்சியில் கூவினான். நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான். "கடவுளே! நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியே எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!" கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டு பிறகு படைத்தான் கடைக்கண்ணை. * விஷயம்  மிக மிக எளிது ஒரு மனிதன்  இன்னொரு மனிதனை ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்து விட்டால் போதும்.     * தம்பி! இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்! மேலும் இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு! பார்த்துப் பார்த்து பழசாக்கு! பார்த்துப் பார்த்துப் பாழாக்கு! * காதலுக்குக் கண் இல்லை.  ஆனால் கடைக்கண் உண்டு. காதலர் கடைக்கண்ணிலிருந்து கண்களுக்குத் திரும்புவதுதான் "காதலின் ஆவியாதல்"  என்றழைக்கப்படுகிறது * கனக சுப்பு ரத்தினா! காணாமல் கண்டு கண்டு கடுகை மலையாக்குவதில் சமர்த்தன் உன் குமரன். அவனை நம்பி நீ "மாமலையைக்  கடுகாக்குவேன்" என்று சைக்கிள்  செயினைச் சுற்றாதே!  * கூற்றம்  !  கூற்றம் !  கூற்றம் ! என்று அலறிக் கொண்டே இருக்கிறான் வள்ள

கடற்கரையில் ஒரு குதிரை சவாரிக்காரர்

ஏ னோ  அத்தருணத்தை அவருக்கு வெகுவாகப் பிடித்து விட்டது. அப்போது எதிர்ப்பட்டால்  எவரையும் பிடிக்குமென்பதால் என்னையும் பிடித்துவிட்டது. "வாறீயாணே...?" என்று கேட்டார். மிக உறுதியாக  அது ஒரு  கட்டணமில்லா அழைப்பு. கூடுதலாக அது குதிரை மேலுமன்று.

வெள்ளைத் தோலிற்குக் கவிதைகள் புனைபவன்

ஆ ருயிர் நண்பனொருவன் விபத்தில் சிக்கி உடல் முழுக்க குழல்கள் செருகப்பட்டு அவசர சிசிக்சைப் பிரிவில் கிடந்தான் ஒரு மாத காலம். வார்டுக்கு  மாறி ஒரு மாதம் கிடந்தான் வீட்டிற்கு மாறி ஒரு மாதம்  கிடந்தான் காவிய ருசியின் கிறுகிறுப்போடு என் கவிதை ஏட்டை  மெல்லப் புரட்டினான் இன்று. அவனுக்குத் தெரியும் நான் சொற்களால் கண்ணீர் வடிப்பவன் சொற்களால் மண்டியிடுபவன் வளையாத தெய்வங்களையெல்லாம் சொற்களால் வளைப்பவன் அவன்  போனதற்கும் வந்ததற்குமிடையே காலியாக இருந்தது ஏடு அவசர சிகிச்சைப் பிரிவின் கதவுகளை ஆவேசமாக அடித்துத் திறந்து எல்லாக்  குழல்களையும்  திரும்ப  செருகிக் கொண்டு அதே படுக்கையில் மல்லாந்து விட்டான் மறுபடியும்                          நன்றி;  ஆனந்த விகடன் தீபாவளி மலர்

இன்ஞ் டேப்புகளுக்கு எதிரான முழக்கம்

  கா தல் நிரம்பி வழிவதிலிருந்து துவங்குகிறது நீயோ கவனம், கவனம் என்று பதறுகிறாய் காதலின் பசியது காயசண்டிகை நீயோ  போதும், போதும் என்று மறுதலிக்கிறாய் ஒளிந்து கொள்ளும் அளவு சிறுத்தது உறுதியினும் உறுதியாக காதல் அல்லடி கண்ணே லூசுப் பெண்ணே! இன்ஞ் டேப்பிற்கும் காதலுக்கும் என்னடீ உறவு? காதலை ஆகாய மட்டத்திலிருந்துதான் அளக்கத் துவங்க வேண்டும் அன்பே!