Skip to main content

கண் - கடைக்கண்



கடவுள் மனிதனுக்கு 

முதலில் கண்களைப் படைத்தான் 

பிறக்கப் பிறக்கவே

அகலத் திறந்து கொண்டன கண்கள்.

மனிதன் மகிழ்ச்சியில் கூவினான்.

நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான்.

"கடவுளே!

நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியே

எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!"

கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டு

பிறகு படைத்தான்

கடைக்கண்ணை.


*


விஷயம் 

மிக மிக எளிது

ஒரு மனிதன் 

இன்னொரு மனிதனை

ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்து விட்டால் போதும்.


   

*


தம்பி!

இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்!

மேலும்

இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி

எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு!

பார்த்துப் பார்த்து பழசாக்கு!

பார்த்துப் பார்த்துப் பாழாக்கு!


*


காதலுக்குக் கண் இல்லை. 

ஆனால்

கடைக்கண் உண்டு.

காதலர் கடைக்கண்ணிலிருந்து

கண்களுக்குத் திரும்புவதுதான்

"காதலின் ஆவியாதல்" 

என்றழைக்கப்படுகிறது


*


கனக சுப்பு ரத்தினா!

காணாமல்

கண்டு கண்டு

கடுகை மலையாக்குவதில்

சமர்த்தன் உன் குமரன்.

அவனை நம்பி

நீ

"மாமலையைக்  கடுகாக்குவேன்" என்று

சைக்கிள்  செயினைச் சுற்றாதே!


 *


கூற்றம்  ! 

கூற்றம் ! 

கூற்றம் !

என்று அலறிக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


கூற்றம் ! 

கூற்றம்!

கூற்றம்! 

என்ற படி

பார்த்துக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


பார்வையைத் திருப்பிக் கொண்டால்

பாட்டிற்கு எங்கு போவான் பாவம்?


 *


"கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்; கண்ணே சகல நோய்க்கும் காரணம்" 

என்கிற தட்டையான வரியை 

கவிதை என்றான் சுகுமாரன்.

நான் இரண்டு கண்களாலும் வாசித்து

அவ்வரியை 

கவிதைப் புத்தகத்திலிருந்து வெட்டியெடுத்து

கண் மருத்துவமனையின்

"cash counter" க்குப் பக்கத்தில்  ஒட்டினேன். 

பிறகு 

ஓரக்கண்ணால் வாசித்துவிட்டு

ஆயிரம் கண் வைத்து அழுதேன்.


 *


"நீ விரும்பியது உன் உடல் முழுதும் ஆகுக!"

என்பதோடு கதை முடிந்து விட்டதா என்ன?

அதன் பின்

இந்திரன் அழுதான் என்பதற்கு 

ஆதாரம் உண்டா ஏதும்?


 *


குருடன் ஒருவன்

தடவித் தவறி

தவறித் தடவி

கைப்பற்றிவிட்டான் தடமுலையை.

விறைத்து நீண்ட காம்பை

நுனி நாவால் தீண்டுகையில்

அவன் குருடு நீங்கி ஒளி மின்னியது.

இதோ....

கண்ணுடைக் காதலன் எவனாலும்

காண முடியாக் காட்சி ஒன்று!


*


மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல


*


நெற்றிக்குள் உள்ளொடுங்கி

இமைகளைப் போர்த்திக் கொண்டு

நடுங்கும் நாய்க்குட்டிகள் போல்

என்ன ஒரு நடிப்பு!

என்ன ஒரு நடிப்பு?


*


“முதலில் 

மெதுவாகக் கண்களை மூடுங்கள்!”

என்றார் குரு

ஒவ்வொரு கண்ணாய் 

மூடி முடிப்பதற்குள்

மணி ஒலித்து விட்டது


       

நன்றி; காலச்சுவடு நவம்பர்- இதழ்


Comments

Popular posts from this blog

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

நினைவோ ஒரு பறவை

  இ ந்தமுறை மருத்துவர்  கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது”  எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார்  எனில், எனது  நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக்  குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை  சாமாதி நிலைக்குத் தூக்குகிறார்  மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும்  இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள்,  அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...