Skip to main content

Posts

Showing posts from August, 2019

ஜிம்மிக்கு எசமானர் உரைத்தது

வாயும் குறியும் போதும் நீ மகிழ்வுற்றிருக்க போதாது என்று கொஞ்சம் செல்லத்தைக் கோரிச் சிணுங்குகிறாய். அங்குதான் துவங்குகிறது எல்லாக் கலவரங்களும்.

ஞானஒளி

நான் எல்லாவற்றையும் இறுதியில் புரிந்து கொண்டேன். இறுதியில் என்றால் அந்திமத்தில் அந்திமம் என்றால் மரணப்படுக்கையில் விழுவதற்கு முந்தையநாள்  அதிகாலைச் சூரியனிலிருந்து  பொன்னொளிர்  வண்ணத்திலான  பந்துபோன்ற ஒன்று  என் மண்டைக்குள் இறங்குவதைக் கண்மூடிக் கண்டேன். அப்போது கைவசம் விளக்குமாறு இல்லை. இருந்திருந்தால்  நையப்புடைத்து அதை ஓட ஓட விரட்டியிருப்பேன்.

நந்தவனம்

நோயுற்றவனை நந்தவனத்தை நோக்கும்படி படுக்கவைக்காதிருப்பது நல்லது புலரியின் இளங்கதிர்கள் அவன் கண்களில் எரியும். வீசு தென்றலுக்கும், வீங்கிள வேனிலுக்கும் அவன் தலை வெடித்துவிடும். சடசடக்கும் மழை நடனம் அவன் ஊனத்தைப் பெருச் செய்யும். கீச்சொலியின் கூரலகு அவன் நெஞ்சத்தில் துளையிடும். விளக்கை அணைத்து விட வேண்டும் கதவை நன்றாகத் தாளிட வேண்டும். கம்பிகளுக்கிடையே நாக்கை நீட்டி இந்த வாழ்வை நக்கிவிடாத படிக்கு சாளரத்தை அடித்துச் சாத்தி விட வேண்டும். நோயுற்றவனை நந்தவனத்தை நோக்கும்படி படுக்கவைப்பது நல்லது. புலரியின் இளங்கதிர்கள் அவனை மடியில் ஏந்தித் தலைநீவும். தென்றலும், வேனிலும் அறையை வெளியாக்கும். கொட்டுமழை அவனது நனையாத இடத்தையெல்லாம் நனைத்துவிடும். கீச்சொலிகள் இந்த வாழ்வு ஒரு பாடல் என்று அவனுக்கு உறுதி சொல்லும். மைனாவைக் கண்டு கண்டு மைனாபோலாகி மைனாவாகி விடலாம். நோயின் வாயிலிருந்து ஒரு மைனா பறந்து செல்வதை நாம் கண் ஆரக் காணலாம்.

தெரியாது

ரயிலில் தடவித் தடவி நகர்ந்துவரும் அந்தப் பார்வையற்ற முதியவனுக்கு சில்லறைச் சத்தத்தைத் தவிர வேறொன்றும் தெரியாது. அவனுக்குத் தூரமாக ஜன்னலோரத்திலிருக்கும் ஒருத்தி பசியை நிறுத்தி வைத்துவிட்டு இடக்கையால் துழாவித் துழாவி பற்களால் பர்ஸைத் திறந்து பாதி எழுந்து உடலை நீட்டி வளைத்து எட்டி இடுகிறாள் ஒரு நாணயத்தை. இப்படித்தான் எனக்கு யாரோ எதையோ இடுகிறார்கள்.

நில்லாது நிற்பது

அன்று வீசிய காற்றிற்கு என்னடி பெயர்? நம்மை முன்பின் இருக்கைகளில் இருத்தியது எது? வெறும் பேருந்துதானா அது? பறந்தெழுந்தாடி என் கைகளில் படிகிறது உன் ஒரு கற்றைக் குழல். விருட்டென என்னைப் பின்னிழுத்தேன். அன்னையின் பிடிவிடுத்துத் திமுறும் பிள்ளையை பிடித்து நிறுத்துவதென திரும்பவும் வந்து படிகிறது உன் ஒரு கொத்து அருள். இப்போது தொட்டேன். இதுவரை இவ்வளவு மிருதுவாக இன்னொன்றைத் தொட்டதில்லை. அந்தக் கூந்தல் என்னிடத்திருக்கிறது. கூடவே திரிவோனால் தொட்டுவிட முடியாத தூரத்திலிருக்கிறது.

நான்

நான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து டேபிளில் வைத்தேன். நான் பதறியெழுந்து ஓடத்துவங்கினேன். நான் துரத்தினேன். நான்  ஓடினேன். நான் விடாது துரத்தினேன். நான் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து கொண்டு வாயைப் பொத்திக் கொண்டேன். நான் கண்டுபிடித்து கழுத்தில் ஒரு கிழிகிழித்தேன். நான் அலறி அரற்றி திரும்ப ஓடினேன். நான் ஓட்டத்திற்குள் காலை விட்டேன். நான் அந்தரத்தில் பறந்து நெஞ்சுடைய விழுந்தேன். நான் ஓங்கி உதைத்தேன். நான் மன்றாடிக் கும்பிட்டேன். நான் ஓங்கி ஓங்கி மிதித்தேன் நான் சில்லு சில்லாய்ச் சிதறினேன். நான் கடித்து வைத்தேன் நான் கண்ணீர் வடித்தேன்.

போல்

உடலில் ஊனமொன்றுமில்லை. பெரிய மூப்பும் இல்லை. எப்போதும் நடுச்சாலையில் குந்தியிருக்கும். முணுமுணுப்பு போன்றும் குரைத்ததில்லை. சின்ன உறுமல் கூட இல்லை. கார் சக்கரங்கள் ஏற்றுவது போல் வருகையில் மேலும் கொஞ்சம் உடலைக் குறுக்கி மெதுவாய் அசைந்துதரும் பிறகு அப்படியே கிடக்கும் மற்றநாய்கள் கூடிக்களித்து கடித்து விளையாடும் திடலை கண்டும் காணாதது போல் கண்ணயர்ந்திருக்கும். செல்லமே! எப்போது நீ நாயிலிருந்து நாய்போல் ஆனாய்!

நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திரன்

என்னை நானாகக் கண்டால் மகிழ்ச்சி ரொம்பவும் மிரண்டுவிடுகிறது. பிறகுதான் இப்படி கன்னத்தில் மருவைக்கும் வழக்கத்திற்கு மாறினேன்.