Skip to main content

Posts

ராஜமாதா

அம்மாவை சந்தைக்குள் அனுப்பி விட்டு
காதுகளில் ஓயரைத் திணித்தபடி
சங்கீதத்தில் குதித்து விட்டான்  மகன்.
பெரிய பையை முழுக்க நிரப்பிக் கொண்டு  திரும்புகிறாள்.
ரொம்பவும் கனக்கிறது போலும்?
கைமாற்றி கைமாற்றி
இழுத்து இழுத்து நடந்து வருகிறாள்.
மூன்றடி தூரத்தில் நின்று அழைக்கிறாள் மகனை
ம்கூம்...
அவன் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறான்.
டே..
டேய்..
விஷால்..
விஷால்..
டே..விஷால்..
ஒவ்வொரு விளிக்கும்
கொதிப்பில்
ஏறிக் கொண்டே போனவள்
சட்டென செல்லம் தட்ட
சர்ர்ர்ர்ரென  இறங்கிவிட்டாள்.
கையிரண்டும் இடுப்பில் கூட்டி
இதழ்க்கடையில் முத்தரும்ப
" அடேய்... என் வெல்லக்கட்டி.."
என்பது போல முறைக்கிறாள்.
Recent posts

புத்தர் சிலையும், பெர்ஃப்யூம் புட்டியும்

சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் அழைப்பை ஏற்று “ சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 2019 “ ல் கலந்து கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விழாவில் இம்முறை தமிழ் மொழியின் சார்பாக நானும், மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியும் கலந்து கொண்டோம். நவம்பர் 9, 10  இரண்டு நாட்கள் நடக்க இருந்த நிகழ்வுகளுக்காக நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்தேன்.

   விழாவிற்கான அழைப்பு வந்ததும்தான் உறைத்தது என்னிடம் பாஸ்போர்ட் ஏதும் இல்லையென்பது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை தாண்டி நமக்கு வேறெங்கே சோலி வந்துவிடப்போகிறது என்கிற நினைப்பில் பாஸ்போர்ட்  குறித்தெல்லாம் யோசித்திருக்கவில்லை. சேலம், மதுரை அதிகபட்சம் சென்னையைத் தாண்டி இலக்கிய சேவையாற்றத் தேவையிருக்காது என்கிற எண்ணத்தில்தான் இருந்தேன்.

    நான் ஒரு அரசு ஊழியன் என்பதால் “ no objection certificate”  என்கிற “ NOC” க்கும் அலைய வேண்டியிருந்தது. பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள் தற்போது எளிமையாக்கப் பட்டுவிட்டதாக நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள். அது அப்படித்தான் இருந்தது. ஆனால் என் “ NOC” கோப்பு ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு போவது போல ஒர…

மகிழ்ச்சி

கண்களைக் கண்களாக பாவி
இயற்கை இனிது
காட்சிகள் இன்பம்
கண்களைக் கண்களாக பாவி
அதனோடு சிந்தையைக் கலக்காதே
துளையிடுவதற்கு ட்ரில்மெஷின்கள் இருக்கின்றன
எதையும் அப்படி உற்று நோக்காதே
குறிப்பாக மகிழ்ச்சியை.
பாற்கடலுள் ஆலகாலம்.

கேட்ராக்ட்

அவருக்கு கைகள் திடமாகத்தான் உள்ளன.
கண்தான் கொஞ்சம் மங்கி விட்டது
ஒழுங்காக உட்கார்ந்து
நன்றாக கண்களைத் திறந்து
இரண்டு சொட்டு மருந்தை
கண்ணுக்குள் விடுவதில்
ஏதோ ஒரு கணிதப் பிசகு...
இரண்டாவது முறை தவறிய போது
அவருள்ளே கண்ணாடி உடைசல்
விழிகளில் ஒரு சொட்டு நீர்
ஒரு சொட்டு போதும்
கழிவிரக்கத்திற்கு அது  ரத்தவாடை
குதறிக் கிழிக்கும் மூர்க்கத்தோடு
அடுத்த கணமே
அது
அவர் உள்ளத்துள் பாய்கிறது.
அவருக்கு கண் மட்டுந்தான் கொஞ்சம் மங்கிவிட்டது.
அதை வென்றடக்கி
ஆகாயத்திற்கப்புறம் வீசி எறிந்தவர்
அண்ணாந்த கோலத்தில் அமர்ந்து
நெற்றிக்கண்ணென
கண்களைத் திறந்து
நான்கு சொட்டுகளை
நடுவிழிக்குள் விடுகிறார்.
ஒவ்வொரு சொட்டும்
பேட்மிண்டன் பயிற்சியின் முடிவில்
வழக்கமாக அவர் அடிக்கும்
அதே ஆக்ரோஷமான  ஷாட்கள்.

நீலம்பாரித்தல்

ஓர் அதிகாலையில் ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்  பாத்ரூமிலிருந்து பாய்ந்து வந்து சாப்பாட்டுத்தட்டின் முன் அமர்ந்தேன். ஒரு காலத்தில் “ சத்துணவு” என்று எங்கள் நண்பர் குழாமால் கேலி செய்யப்பட்ட அதே சம்பாரவை. இன்றோ என் தினசரி காலை உணவு. “சத்துணவு” என்கிற விளி எப்படிக் கேலியானது என்பது இன்று வரை விளங்கவில்லை. அவசர அவசரமாக அள்ளி வாயில் திணிக்கையில்தான் கவனித்தேன் என் கையை. அது கருநீலத்தில் இருந்தது உடனே இடது கைக்கு ஓடினேன். அதுவும் அப்படியே இருந்தது. எதையோ தொட்டுவிட்டு ஒழுங்காக கழுவாமல் அமர்ந்து விட்டேன் போல ? திரும்பவும் எழுந்து கைகளை அழுத்திக் கழுவி விட்டு வந்தமர்ந்தேன். ரயில்வேறு தூரத்தில் கூவிக்கொண்டிருந்தது.
  இரண்டு வாயிற்குப் பிறகு திரும்பவும் கைகளைப் பார்த்தேன். எதுவும் மாறவில்லை. கருப்பு குறைந்து நீலம் கூடிவிட்டது போல் தோன்றியது. கட்டைவிரல் மேட்டில் கொஞ்சம் வெளிரிய இளமஞ்சளும் பூத்திருந்தது. எனக்கு எல்லாம் விளங்கி விட்டது.
   சமீப நாட்களில் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். என்னளவில் கொஞ்சம் கடுமையானதுதான். பத்து கிலோ குறைத்தத்தில் நெஞ்செலும்பு வெளித்தள்ளி விட்டது. ஆனால் இந்தக் க…

பிரிவாற்றாமை - காமத்துப்பால்

                   கற்பியல்
இனிவரும் பதினெட்டு அதிகாரங்களும் கற்பியலின் கீழ் வருகிறது. அதாவது காதல் கொண்டு மணம்புரிந்த பின் நிகழும் நிகழ்ச்சிகளைப் பேசுவது. கற்புகால புணர்ச்சியை“ நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சி” என்கிறது தொல்காப்பியம். நெஞ்சம் அச்சத்தின் தளையிலிருந்து விடுபட்டு நிகழும் நிம்மதியான புணர்ச்சி என்று இதை விளக்கலாம். ஆனால் “ திருட்டு மாங்காய்க்குத் தித்திப்பு கூட “ என்கிறது நம் பழமொழி.திருட்டில் ஒரு சாகஸமுண்டு. அந்த சாகஸமும் அதுதரும் பரவசமுமே தித்திப்பைக் கூட்டி விடுகின்றன என்பது களவில் வல்லோர் கூற்று. காதல்பருவத்துப் புணர்ச்சி உற்சாகமிக்கதெனினும் கூடவே அகப்பட்டுவிடுவதற்கான அச்சமும் நடுக்கமும் கொண்டதுதான். மணமேடை ஏறிய பின்தான் “நிதானமாக நின்று விளையாட முடியும்” என்கிறார் தொல்காப்பியர். “நிதானமான ஆட்டத்தில்” சமயங்களில் சலிப்பேறி விடுகிறது. காதல் ஒரே சோப்பில் குளிக்கும்.இல்லறம்தான் ஆளுக்கு ஒரு சோப்பு கேட்கும்என்பது பாதசாரியார் பொன்மொழி. திருமணத்திற்குப் பிறகு காதல் போய்விட்டதென்று தம்பதியர் சிலர் புலம்பக் கேட்டிருக்கிறோம். அது போன வழி ஆய்வுக்குரியது. சரி.. நாம் குறளிற்குத் தி…

அரிய சந்திப்பு

முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே இன்று ஒரு முழு நிமிடம் சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன். "இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு முழுநிமிடம்  எதன் முன்னேனும் கைகட்டி நில்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
                 ***

முனகலுக்கும் எரிச்சலுக்கும் இடையே உறுமலுக்கும் சங்கிலிச் சத்தத்திற்குமிடையே இன்று ஒரு முழு நிமிடம் சிக்னலுக்கு முன் கைகட்டி நின்றேன். இவ்வளவு காலத்தில் சிக்னலிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. " இங்கதான்..சந்தைக்கு..கீரை வாங்கப் போகிறேன்" என்றேன். " மிக்க மகிழ்ச்சி.. பத்திரமாக போய் வாருங்கள்.. " என்றது.