Skip to main content

இசை கவிதைகள் - அகழ்





நல்லதங்கா



கழிவறைக் கதவை
இழுத்துச் சாத்திக் கொள்வது
வசதியானது


தண்ணீர் குழாயை
திறந்து விடுவது
மேலும்
வசதியானது


ஆனால்
வெட்ட வெளியின் மத்தியில்
அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி


பெண்களின் கண்ணீர் என்பது
ஒரு தனியூத்து


இங்கு நான் காண்பது
அதன் சில துளிகள்


ஒருத்தி அழத்துவங்கியவுடன்
அபலை ஆகிவிடுகிறாள்


அங்கு அப்போதே
முளைத்து விடுகிறது ஒரு கிணறு


“ தொப்” சத்தமே
அப்பாலே போ!


காதலரே… காய்பவரே…


முறுக்கிப் பிழியப்பட்டு
பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள
ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று


யாரும் எடுத்து
விண்டு விழுங்கலாம்


எந்தத் தொண்டையிலும்
நழுவி விழுவேன்
குளு குளுவென


ம்…
சீக்கிரம்…


இந்தச் சலுகை
எத்தனை மணித்துளிகளுக்கென்று
எனக்கே தெரியாது


ஆகட்டும்..


சீக்கிரம்..

சீக்கிரம்…


பணி செய்து கிடத்தல்


துப்புரவுப் பணியாளர்கள்
பணி முடித்து
ஓய்வில் இருக்கிறார்கள்


ஒருவர்
கடைவாய் ஒழுக
வெற்றிலை
மென்று கொண்டிருக்கிறார்


ஒருவர்
போனில்
சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார்


அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக
ஒருவரையொருவர்
துரத்தி விளையாடுகிறார்கள்

இளம் பெண்கள்


இதை ஓய்வென்று நம்பவில்லை நான்


இப்போது
உலகின் ஏதோ ஒரு மூலை
துப்புரவாகிக் கொண்டிருக்கிறது


எங்கென்றுதான்
எனக்குச் சொல்லத் தெரியவில்லை.



Comments

வண்ணைசிவா said…
அருமையான கவிதைகள்.

Popular posts from this blog

நினைவோ ஒரு பறவை

  இ ந்தமுறை மருத்துவர்  கண்டிப்பாகவே சொல்லிவிட்டார்… “நீங்கள் கண்டதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளக் கூடாது”  எனக்கு ஓரளவு புரிகிறது தேநீர் மட்டுமே இருக்கும் தேநீரைச் சொல்கிறார் ‘கடி' க்கு வேறொன்றும் கூடாதென்கிறார் சலனமற்ற குளத்தைத்தான் சொல்கிறார்  எனில், எனது  நான்கு கழுதைகளையும் எங்கு வைத்துக்  குளிப்பாட்ட? எனக்கு நன்றாகவே புரிகிறது சாமான்ய நிலையிலிருந்து என்னை  சாமாதி நிலைக்குத் தூக்குகிறார்  மறைஞானத்தை மாத்திரையாக்கப் பார்க்கும்  இந்த நாச்சிமுத்து ஒரு வேளை ‘ லாவோட்சு' வின் வம்சாவழியோ என்னவோ? “இப்போதுதானே சொன்னேன்…” என்றொரு குரல் உலுக்க விழித்தேன் பாருங்கள்,  அதுகூட அவர் அதட்டியதில்லை நான் அதட்டியதுதான்.

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...