சங்கப்பாடல்களின் வயது இரண்டாயிரத்து சொச்சம். அபூர்வ சொற்சித்திரங்களோடும் ஆழ்ந்த படிமங்களோடும் வார்க்கப்பட்ட விழுமிய ஆபரணம். கவித்துவத்தால் செதுக்கப்பட்ட அந்த தேரை வடம் பிடித்து நவீனகாலம் வரை கொண்டு வந்து சேர்த்திருப்பது ஒரு வகையில் நமக்கு வாய்த்த பேறு. மரபை உடைத்து நா.பிச்சமூர்த்தியின் 'பெட்டிக்கடை நாராயணன்’ கவிதை நவீனகவிதைக்கு அச்சாரமானது. எழுபதுகளில் அதன் உக்கிரம் வலுப்பெற்றது. நவீன கவிதைகள் வெவ்வேறு பரிமாணங்களில் கச்சிதமான உத்திகளோடு புதிய தரிசனங்களை இன்று அசலாக பெற்றிருக்கின்றன. அழகியல் மற்றும் எதிர் அழகியல் தன்மைகளோடு சுண்டக்காய்ச்சிய கவிதைகளை எழுதிவரும் கவிகளுள் கவிஞர் இசை முக்கியமானவர். கடந்தகாலத்தில் பகடி ஆட்டத்தை நிகழ்த்தியவர் இந்த முறை அதிலிருந்து சற்று விலகி தன்னை குவியாடியாக்கி அக தரிசனங்களில் மெளனித்துக் கிடக்கிறார். காலந்தோரும் தன் ஆத்மாவை கூர் செய்து கொண்டே இருப்பவன்தான் உன்னதக் கலைஞனாக உருமாற்றமும் கொள்கிறான்.
நவீன கவிதைகள் படிமம், உவமை மற்றும் உருவகத்தால் திளைத்தவை. இசையின் கவிதைகள் காட்சி படிமத்தால் விரிபவை. பெரும்பான்மையான கவிதைகள் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டவை. சின்னச்சின்ன பிக்சல்களை நுட்பமாக சேர்த்து அதை மெகா பிக்சல்களாக்கி காட்சிகளாக ஓடவிடுவது அவரது பலம். மொழியின் கழுத்தை இறுக்காமல் அதை லகுவாக்குவது கூடுதல் பலம். குறிப்பாக உணர்வில் துவங்கி உணர்வில் முடியும் கவிதைகள். அதனால்தான் வாசகனின் ஆழ்மனத்தில்
சாகாவரம் பெற்ற படிம சித்திரங்களாகவே தங்கிவிடுகின்றன, கலையில்நிகழும் வித்தை இதுதான்.
“அப்பர் பெர்த்திலிருந்து
ஜன்னல் வழியே உலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த
அவள் அன்னை
அதை உதறியெரிந்துவிட்டு
பதறியெழுந்து
கைவிரித்து நிற்கிறாள்
அதே கணத்தில் அனிச்சையாய்
ஆங்காங்கே எழுந்து
கைகளை விரித்து நின்றனர் அன்னையர்
நானும் ஒருகணம்
அன்னையாகிவிட்டு
எனக்கு திரும்பினேன்”.. பக்கம் (27)
தன்னுள் இயல்பாய் நிகழ்வதே கவிதை. அது ரியாலிட்டி அம்சத்தில் இருக்கும். மேல் குறிப்பிட்ட கவிதை கவித்துவமாய் பரிணமித்தி நிற்பதே அந்த ரியாலிட்டி அம்சம்தான்... . “நானும் ஒரு கணம் அன்னையாகிவிட்டு” இதைத்தான் நான் கவித்துவநிலை என்கிறேன். ஒரே சாட்டில் படமெடுத்த சிறுகதையின் வடிவம் போல தோன்றக்காராணமும் இதுதான். கிணற்றில் நிலவின் பூரணத்துவத்தை நள்ளிரவில் கண்கொட்டாமல் ஆசுவாசமாக பார்க்கும் நிலைக்கு ஒப்பானதாகும்
இசையின் படைப்புகள் லெளகீக சரடில் பின்னப்பட்டவை. ஒரு கூற்று தன்மையில் (Monolough) தன் நெஞ்சுக்கு தானே சொல்லிக்கொள்ளும் கவிதைகளும் உண்டு. வாழ்வு குறித்த விசாரணைகளில் அவர் தன் மூக்கை நுழைப்பதில்லை. அதன் மீது அவ்வளவு ஆவலும் கொள்வதில்லை. ஆனால் அதன் பிரம்மாண்ட கதவின்சிறு துளையின் வழியே லெளகீகத்தின் மறுபக்கத்தை பார்க்கவிழைபவர்.
விட்டை விட்டு தொலைந்து விடுவது
என்கிற முடிவுக்கு வந்தேன்
“தேட வேண்டாம்”
தீர்க்கமாக ஒரு கடிதம் எழுதினேன்.
பிறகு
தெருமுக்கில் இருக்கும்
பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்துகொண்டு
உற்றுப் பார்த்தபடி நிற்கிறேன். ப (22)
லெளகீகத்தின் அதீத விரக்தியில் மனம் இப்படி தடம்புரளும். துறவர மயக்கத்திற்கு ஆட்படும். அன்றாட சக்கரப்பற்களின் இடுக்கில் உழன்று கொண்டிருக்கும் எளிய மானுட மனங்களின் இன்ஸ்டெண்ட் முடிவு இது. இரண்டாம் ஜாமம் துவங்கியதும் விடுபோய் சேர மப்சல் பஸ்ஸை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருக்கும் சம்சாரிகளின் ஒருநாள் கூத்துகள். துறவின் பின்னால் ஒளிந்திருக்கும் இன்னொரு முகமும் இதுதான். சமூகத்தின் கூட்டுமனங்களின் மையப்புள்ளியை உளவியல் தன்மையோடு இந்த கவிதை அணுகுகிறது. ஒரு படைப்பாளி தன்னையும் சேர்த்து படைப்பாக்குகிற போக்கு இதுதான்.
இசையின் புறவுலகு கவிதைகள் நேர்த்தியானவை. அவை மெய்யியலை நோக்கி நகர்ந்து செல்பவை. புறவுலகு காட்சிகளை சரம்போல தொடுக்காமல் அதற்குள் ஒளிந்திருக்கும் மெய்யியலை உருவி எடுக்கிறார், அகம் கொள்ளும் தீவிரத்தன்மையின் விளைவு இது. இதனால் சாதாரண காட்சிகள் கூட தரிசனமாகத் உருமாற்றம் கொள்ளும். ஆகவே மொழியின் வல்லமையால் கவிதை மெய்யியலோடு கரைந்துவிடுகிறது. இசையுடைய புறவுலகு சார்ந்த கவிதைகளில் இந்த மெய்யியல் வகையறா கவிதைகளைக் காணலாம்.
சுமையேற்றிக் கொண்டிருந்தனர்
பெருமூச்சுகளும் முனகல்களும்
வரிசைக்கட்டி லாரியில் ஏற்றப்படுகின்றன.
முகங்கள் கல்லென இறுகி
உடல்கள் வியர்த்தி அழுதன
இடையில் ஒருவன் தடம்மாறி விழப்போனான்
நண்பர்கள் அவனை கேலி பேசி சிரித்தனர்
விழப்போனவனும் சேர்ந்து சிரிக்க
இப்போது
அங்கே தோன்றிவிட்டது ஒரு விளையாட்டு.
பிறகு
அவர்கள்
கைமாற்றி கைமாற்றி விளையாட துவங்கிவிட்டார்கள்.
அந்த லாரியில்
பாதிக்கு மேல் சிரிப்பு பெட்டிகள்” ப (39)
நவீன உரைநடை போல தென்பட்டாலும் மெல்ல மெல்லமெய்யியலை நோக்கி கச்சிதமாக நகர்ந்திருப்பதுதான் இந்த கவிதையின் பலம். துயரத்தை எழுதாமல் அவர்களின் அவலத்தில் நிகழும் அற்புதங்களை எழுதுவதால்தான் இது போன்ற டார்க் ரியாலிட்டி கவிதைகள் மெய்யியல் ஸ்தியை அடைகின்றன. ஒரு கலைஞன் கலையின் காலடியின் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடப்பது இது போன்ற அபூர்வதருணங்களுக்காகத்தான். அது ஒரு தேனியின் சேகரிப்பு மனத்திற்கு இணையானது.
திணைகளில் கைக்கிளைப் பகுதி கலாபூர்வம் மிக்கது. ஒருதலைப் பிரியம் மற்றும் ஒழுக்கக்கட்டுடைப்பு என்றாலும் அன்பின் மகரதீப வெளிச்சம் அதில்தான் காணமுடியும். அது பைத்தியத்தின் திரிபுநிலை மயக்கம். மரணத்தின் கடைசி கணம் வரை கடந்த கால திவ்ய
நினைவுகளில் மகரந்தங்கள் சுரந்துகொண்டும், கொடிகள் படர்ந்துகொண்டும் இருக்கும். சில உயரிய படைப்புகள் இன்று வரை பேசுபொருளாக இருக்கக்காரணம் இந்த கைக்கிளை மயக்கம்தான். இசையின் கைக்கிளை கவிதை ஒன்றில் அன்பின் மகர வெளிச்சத்தைக் காணமுடிகிறது. உரிப்பொருளின் பாந்தத்தை லாவகமாக கையாள்கிறார். அது தன்னளவில் கச்சிதத்தன்மை அடைந்ததற்கு காரணம் நேர்த்தியான சொல்லாடல்கள். பிறகு அழகியலின் அடர்த்தி.
சளி சேகரித்த அந்த தாதி
மல்லிகை தடியிருந்தாள்
மல்லிகையின் கீழ் அமர்ந்து
பரிசோதனை செய்து கொண்டேன்
நான் மருத்துவரைக் காண்பேன்
அரசு சொல்லும் அறிவுறுத்தல்களை
தவறாது கடைப்பிடிப்பேன்
நான் உன்னைத்தான் நம்பியுள்ளேன்” . ப (112)
கவிஞர் இசையின் கவிதை நிலம் என்பது இருகூர் முதல் பல்லடம் வரையிலான சில கி.மீட்டர்களை கொண்டது. இந்த சிறிய பரப்பளவில் தான் உலகெங்கும் சிதறிக் கிடக்கின்ற மானுட அழகியலையும் அவலங்களையும் சித்திரமாய் காட்சிப்படுத்துகின்றார். இசையின் கவிதைகளில் ஷிப்ட் (Jump) தன்மைகள் குறைவு. கருப்பொருள் கசியாமலும் சிதறாமலும் கவிதை அதன் உன்னதத்தை முழுமையாக சென்றடைய முழுமுதற் காரணமும் இது தான். சின்னச் சின்ன விஷயங்களில் பிரமிப்பில் ஆள்பவன் கலைஞன். அதை செறிவின் வடிவில் சொல்லும் பொழுது படைப்பு வலுப்படுகிறது. இசையின் கவிதைக் களஞ்சியத்தில் அந்தியின் முன் சுரந்த கணிசமான தரிசனங்கள் காலத்தில் ஆழ்ந்த பொருளில் வலுவாய் இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
Comments