நீ விட்டுவிட்டுச் சென்ற பிறகு என்னோடே தங்கிவிட்டன உன் குரல்கள் எல்லாவற்றையும் அப்படி ஒருசேர மூட்டை கட்டிவிட முடியாது நெஞ்சின் மீது போனை அணைத்துக் கொண்டு உன் குரல்களை ஒலிக்க விடுகிறேன் அவை உன்னை விடவும் அதிகமான நீ நீ இல்லையென்றான பிறகு உன் பேச்சு பாதி பாட்டாகி விட்டது நினைவென்றாலே அது கண்ணீர் தானே? இந்த இரவில் கன்னங்களில் வழிந்திறங்கும் கண்ணீர் மீதிப் பேச்சையும் கரைத்துக் கொண்டு ஓடுகிறது இப்போது நீ ஒரு முழுப்பாடல் இந்த உலகில் சங்கீதங்கள் இப்படியா, இப்படியா உருவாகின்றன அன்பே |
Comments