Skip to main content

இசை கவிதைகள்

 




1


மேலோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு


ஒரு உடையிலிருந்து

இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல

ட்ரவுசருக்கு மாறுவது


ட்ரவுசருக்கு மாறுகையில்

நான் தயாராகிறேன்

எதற்கென்றால்

எல்லாவற்றிற்கும்


உறக்கத்திற்கு

போர்க்களத்திற்கு

எல்லாவற்றிற்கும்


ட்ரவுசர் அணிந்தவுடன்

சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள்

மேலோட்டமான நம்பிக்கைகளில்

வாழ்ந்து வருபவர்கள்

அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை


சுற்றுலா செல்கையில்

ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு

ட்ரவுசர் ஒரு சுற்றுலா

என்பாரும் உண்டு


ட்ரவுசரில் இருக்கையில்

நான் என் காதலி


அதை அளக்க முடியாது

என்பது போலவே

சுருக்கவும் முடியாது


ட்ரவுசரை காற்றோட்டம் என்பது

மூடர் தம் சுருக்கம்



2


அங்கு



கொட்டு கொட்டென்று

கொட்டித் தீர்த்த இசை

சட்டென

நின்று விட்டது



நிசப்தமும் 

முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்!




3


மிழ் மலர்கள்


அது ஒரு சின்னத் தோட்டம்


அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள்.


இன்று

புதிதாக

அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள்


“அருமலர் எழிலகம்”


அதில்

இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன.


அதற்குள்

பூத்துக் குலுங்கிவிட்டன.



4


தேங்கெண்ணெய்


“அம்மா…” என்று கூவியபடி

முதல் முட்டிக் காயத்துடன்

தெருவிலிருந்து

வீட்டுக்குள் ஓடி வந்த போது

மாரோடணைத்துக் கொண்டு

கொஞ்சம் தேங்கெண்ணெய்

பூசி விட்டாள்.


உதடு வெடிப்புக்கும், வயித்துச் சூட்டுக்கும்

அதே தேங்கெண்ணெய்யேதான்


படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு

ஞாபக மறதிக்கு

முகப்பருவுக்கும்

அதேதான்


எது குறைந்தாலும்

தேங்கெண்ணெயால்

அவள் அதைக் கூட்டி விடுவாள்


மகன்

வீதியில் வாந்தி மீது விழுந்து கிடந்தமைக்கு

மண்டைச்சூடுதான் காரணம் என்பாள்


உள்ளங்கையில் தேங்கி நிற்கும்

நான்கு சொட்டால்

உலகத்துக் கோணல்களையெல்லாம்

வழித்தெடுத்து விடுவாள்


“ஒரு வாரத்துல சுக்கா காஞ்சிடும்….”என்று

ஒரு கட்டி மீது ஊற்றுகிறாள்

அவளது அருமருந்தை


கட்டி சொன்னது…


“நான் கேன்சர்கட்டி வந்திருக்கிறேன், உன் தேங்கெண்ணெயைக் கொல்வதற்காக…”


5


சிறிதே!


அவ்வளவு பெரிய வானம் என்பது

அதைக் காணும்

சின்னஞ்சிறிய

நீ தான்.




ஓவியம் : சேது வேலுமணி

Comments

Thendral said…
கவிஞனும் இறைவனும் ஒன்றே ....கதையில் எதிர்பார்க்காத திருப்பங்கள்!!!

Popular posts from this blog

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

ஒரு ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா ?

“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில் அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது ஏழாவதுமுறையாக குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார் தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில் ” பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு அவரது பையையும் பரிசோதித்துவிட்டார். ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு. காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து அதை கீழே தள்ளி விட்டிருக்கலாம். கண்களைப்பிடுங்கி கீழே வீசி பொறுமையாகத் துழாவினார். பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார். அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல அவரிடம் இப்போது கூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது. ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும் இடதுபுற எலாஸ்டிக் பட்டையில் அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக அவருக்கு தெரியாது. நாம் அசட்டை செய்வது போலவோ கிண்டலடிப்பது போலவோ அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை. அவரது இல்லத்து அரசி அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.                 ...